Published:Updated:

நிறைவேறாத இரண்டு ஆசைகள் !

ஆர்.ஷஃபி முன்னா

பிரீமியம் ஸ்டோரி
##~##

''எனக்கு மூன்று ஆசைகள் உண்டு. அவற்றில் நிறை வேறியது... நம் நாட்டின் சுதந்திரம் மட்டுமே. சமூக மேம்பாடு மற்றும் பெண்கள் உரிமை இந்த இரண்டு ஆசைகளும் இன்னமும் நிறைவேறவே இல்லை.''

- கேப்டன் லஷ்மி சேகல் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் இது. கடைசி வரை இது நிறைவேறாத ஏக்கத்துடன்தான் 98-ம் வயதில் உயிர் பிரிந்திருக்கிறார் லஷ்மி சேகல்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக இருந்த எஸ்.சுவாமிநாதன் - சமூக சேவகர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான டாக்டர் அம்முகுட்டி ஆகியோரின் மகளான லஷ்மி, சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்று, உயர் கல்விக்காக 1940-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு, இரண்டாம் உலகப் போரில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அறிமுகம் அவருக்கு கிடைக்க, அதுவே இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பெண்களின் பங்களிப்பை மேலும் முக்கியத்துவம் கொண்டதாக மாற்றியது. நேதாஜியின் 'இந்திய தேசிய ராணுவ'த்தின் (ஐ.என்.ஏ) பெண்கள் பிரிவான 'ஜான்சி ராணி லஷ்மிபாய் ரெஜி மென்ட்’டின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் லஷ்மி.

நிறைவேறாத இரண்டு ஆசைகள் !

கேப்டனின் புரட்சி முழக் கங்களால் ஈர்க்கப்பட்ட பெண்கள், துப்பாக்கி ஏந்தி பெருமளவில் களம் இறங்கினர். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்ட கேப்டன் லஷ்மி, ஒரு வருட வீட்டுச் சிறைக்குப் பின், 1946-ல் கப்பல் மூலம் சென்னையில் இறக்கிவிடப்பட்டார். அப்போது, அவரை வரவேற்க திரண்ட கூட்டத்தால் சென்னையே ஸ்தம்பித்தது!

ஐ.என்.ஏ தளபதிகளில் ஒருவரான கர்னல் பிரேம் சேகலுடன் நெருக்கம் ஏற்பட, நாடு சுதந்திரம் அடையும் வரை பொறுத்திருந்து இருவரும் மணம் முடித்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் குடும்பத்துடன் தங்கி மருத்துவ சேவை செய்து வந்த லஷ்மிக்கு சுபாஷினி அலி, அனிசா புரி என இரு மகள்கள் மற்றும் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

ஓய்வு வயதுக்குப் பிறகும் ஓயாமல் உழைத்த கேப்டன், சமூக பொதுநல அமைப்புகளின் மூலமாக சுயதொழில் மற்றும் அரசு நல திட்டங்கள் பெறுவது உட்பட பலவகையான உதவிகளை பெண்களுக்காக செய்து வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அமைப்பான 'அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க' நிறுவனர்களில் ஒருவராகவும் வடிவெடுத்தார்.

கேப்டனின் இடையறா சேவைக்கு... 'பத்மவிபூஷண்’ விருது கொடுத்ததன் மூலம், தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது இந்திய அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு