Published:Updated:

ரீஃபில் பண்ணுங்க... ரிலாக்ஸ்டா இருங்க !

நாச்சியாள் படம்: ஆ.முத்துக்குமார்

ரீஃபில் பண்ணுங்க... ரிலாக்ஸ்டா இருங்க !

நாச்சியாள் படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

இரு மனங்கள் இணைந்து, இயைந்து நடத்தும் திருமண வாழ்க்கைதான் அனைவரின் கனவு! ஆனால், பெரும்பாலும் கனவைப் பிரதிபலிப்பது இல்லை நிதர்சனம்! விளைவு சண்டை, சச்சரவு, மன நிம்மதியின்மை. இறுதியில், மணமுறிவுக்காக குடும்பநல நீதிமன்றத்தில் கால்கடுக்க, மனநடுக்கத்துடன் காத்திருக்கும் அவலம்!

25 ஆண்டுகள் வெற்றிகரமான திருமண வாழ்க்கை நடத்தி வரும் மூத்த தம்பதி ரவி - கிரிஜா, 13 ஆண்டுகளாக அன்பான இணையர்களாக வலம் வரும் ராஜா - ரேவதி (கூடவே குழந்தைகள்)... இவர்களுடன் குடும்ப நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் ஆகியோர், வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கான சூட்சமங்கள் குறித்து நடத்திய கலந்துரையாடல் இதோ...

ரவி: திருமணமாகி 25 வருஷம் சந்தோஷமா போயிடுச்சு. இதுக்குக் காரணம்... என் மனைவி, என் பையன், பொண்ணு மட்டும் இல்லை. மொத்தக் குடும்பமும்தான். மனுஷங்கதான் முதல்ல வேணும். அப்புறம்தான் பணம். அதுக்காக ஒவ்வொரு வருஷமும் என் குடும்பத்தைச் சார்ந்தவங்க எல்லோரையும் கூப்பிட்டு விழா எடுப்பேன். அதுக்காகவே 'நதி’ங்கிற அமைப்பை வெச்சுருக்கேன். என்னோட இந்த இயல்பை, சுபாவத்தை அப்படியே ஏத்துக்கிட்ட என் மனைவியின் குணம்தான் இந்த வெற்றிக்கு முதல் படி.

கிரிஜா: இன்னிவரைக்கும் எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. ஆனா, நிறைய மனிதர்களை சம்பாதிச்சுருக்கோம். முதல்ல அவரோட இந்தக் குணம் எனக்கு அதிரடியாத்தான் இருந்துச்சு. அதுல பாஸிடிவ்வான விஷயங்கள் நிறைய இருந்ததைப் போகப் போகப் புரிஞ்சுக்கிட்டேன்.

ரீஃபில் பண்ணுங்க... ரிலாக்ஸ்டா இருங்க !

பிருந்தா: குடும்ப வாழ்க்கையில... 'என் கணவர் எது செய்தாலும் அது பாஸிட்டிவாத்தான் இருக்கும்; நல்லதுதான் நடக்கும்’ங்கிற அவர் மனைவியுடைய ஆழ்ந்த நம்பிக்கைதான் சந்தோஷத்துக்கான முதல் சாவி. இந்த நம்பிக்கை இளைய தலைமுறைகிட்ட இல்லாம இருக்கறதாலதான் குடும்ப நீதிமன்றம் நிரம்பி வழியுது.

ரேவதி: கணவர்கிட்ட ஒரு பெண்ணா இருந்து வியக்கிற விஷயம், அவருடைய ஈகோ இல்லாத குணம்தான். 'நீ என்ன சொல்றது... நான் என்ன கேக்குறது’ங்கிற மாதிரி அவர் இதுவரைக்கும் நினைச்சது இல்ல. நான் எடுக்குற முடிவுகளை அவர் பரிபூரணமா ஏத்துக்குவார்.

ராஜா: அதுக்குக் காரணம், என் மனைவி என்னை நேசிக்கிறதவிட, பல மடங்கு என் அம்மா - அப்பாவை நேசிக்கறாங்க. என் அம்மாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட் அவங்கதான். 'புகுந்த வீடுங்கறது கணவன் மட்டும் இல்லை... அந்தக் குடும்பத்தில் இருக்கிற அனைவரும் சேர்ந்ததுதான்’ என்கிற என் மனைவியின் அப்ரோச்சுக்கு முன்ன, எதுக்கு ஈகோ?

கிரிஜா: டைவர்ஸ் அதிகரிக்கக் காரணமே... என்னுடைய விருப்பத்துக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்திக்கோனு ஒருத்தரை ஒருத்தர் நிர்ப்பந்திக்கறதுதான். ஆனா, யாரும் யாருக்காகவும் தன்னை மாத்திக்க முடியாதுங்கிறதுதான் உண்மை.

ரேவதி: என்னால இதை முழுசா ஒப்புக்க முடியல. என் கணவருக்காக சில விஷயங்கள நான் மாத்தி இருக்கேன். அவர், 'வேலையை விட்டுரு ரேவதி’னு சொன்னப்ப, வேலையை விட்டுட்டேன். ஆனா... குழந்தைகள் வளர்ந்த பிறகு அவருடைய பிஸினஸ் முழுக்க நான் பார்த்துக்கிற மாதிரி என்னை மாத்தினார்.

பிருந்தா: இது உங்க குணத்தை மாத்துறது ஆகாது. உங்க திறமையை அவர் வளர்த்து விட்டிருக்கார். உங்ககிட்ட அந்த திறமை இருக்குனு கண்டுபிடிச்சிருக்கார். வேலையை விட்டுருங்கனு சொன்னப்ப, அவர் மேல் உள்ள அன்பினால், குழந்தைகள் மேல் உள்ள பாசத்தினால், பொறுப் புள்ள குடும்பத் தலைவியா வேலையை விட்டீங்க. அதுதான் ஒரு குடும்ப அஸ்திவாரத்துக்கு தேவை. இதுக்குள்ள அட்ஜெஸ்ட்மென்ட், பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல், நம்பிக்கை, பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்னு நிறைய உள்ளடங்கி இருக்கு. இரண்டு தனிநபர்கள், திருமணத்தால் இணைந்து வாழும்போது இந்த விஷயங்கள் எல்லாம் அங்கே இருந்தால்... சண்டை, மிஸ் அண்டர்ஸ்டேண்டிங் இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

பணம், வீட்டு உறுப்பினர்களால் வரும் பிரச்னைகள் போன்ற காரணங்களால் இந்த அன்பு ரெண்டு பேருக்கும் இடையில் குறையும்போது, அதை புரிதலால மறுபடியும் ரீஃபில் பண்ணிக்க வேண்டியது அவசியம். இதை மனசார புரிஞ்சுகிட்டு செயல்படுத்தி வாழறதுலதான் நிம்மதி இருக்கு. அன்பே சிவம் மாதிரி, அன்பே கணவன் - மனைவி!''

- அழகாக முடித்து வைத்தார் பிருந்தா!