Published:Updated:

கேபிள் கலாட்டா

சொல்லி வெச்சு அடிச்ச கில்லி !படம்: ச.இரா.ஸ்ரீதர்

கேபிள் கலாட்டா

சொல்லி வெச்சு அடிச்ச கில்லி !படம்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:

ரிமோட் ரீட்டா

 ''கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு..?!''

- சேனல் ஏரியா புதுமணப் பெண்கள், புது மாப்பிள்ளைகள் சிலர்கிட்ட கேட்டேன்! ரீட்டாவுக்கு கிடைச்சதெல்லாம் ஒரே ஹேப்பி ரிப்ளைஸ்தான்!

ஸ்ரீவித்யாவை, 'பொக்கே’வோட சந்திச்சேன். ''என்ன ரீட்டா... ரெண்டாவது பொக் கேவா?!''னு, மேரேஜ் ரிசப்ஷன்ல அவ்ளோ கூட்டத்துலயும் நான் பொக்கே கொடுத்ததை மறக்காம சொல்லி ஆரம்பிச்சவங்க...

கேபிள் கலாட்டா

''என் கணவர் நாராயணன், சாப்ஃட்வேர் இன்ஜினீயர். எங்களோடது அரேஞ்டு மேரேஜ். ஆனாலும், எனக்கு அவர் டிரீம் மேனா இருக்கார். கல்யாணம் முடிஞ்ச இந்த மூணு மாசமா கோயில்கள், உறவினர்கள் வீடு, ஹனிமூனுக்கு மொரிஷியஸ்னு ரோமிங்லயே இருந்துட்டு, இப்போதான் ரெகுலர் லைஃப் ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். கல்யாணத்துக்கு முன்ன எனக்கு கிச்சன் எப்படி இருக்கும்னுகூடத் தெரியாது. இப்போ அவருக்குப் பிடிச்ச சாப்பாட்டை எல்லாம் ஒவ்வொண்ணா கத்துட்டு இருக்கேன். டைம் மேனேஜ்மென்ட், ஹவுஸ் கீப்பிங்னு எல்லாமே அவருக்கு பர்ஃபெக்டா இருக்கணும். கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் சீரியல் பக்கமே போகாதவர், இப்போ சன் டி.வி-யில குறுந்தொடரா ஒளிபரப்பான என்னோட 'அந்த 10 நாட்கள்’ சீரியலை ஒரு எபிஸோட்கூட மிஸ் பண்ணாம ஆர்வமா பார்த்து, பாராட்டினார். என்னோட விருப்பங்களுக்கு முழு சுதந்திரம் தர்ற கணவர் மட்டுமில்ல... மாமியாரும் கிடைச்சுருக்கறது எனக்கு பெரிய கிஃப்ட். நான் இப்போ ரொம்ப ஹேப்பி ரீட்டா!''னு கன்னம் சிவக்கச் சிரிச்சாங்க ஸ்ரீவித்யா!

சன் மியூசிக், ஜீ தமிழ்னு கலக்கிட்டிருக்குற வெங்கட் முகத்துல புது மாப்பிள்ளை பூரிப்பு.

கேபிள் கலாட்டா

''கல்யாணம் முடிஞ்சு ஒண்ணரை மாசம்தான் ஆகுது ரீட்டா. மனைவி அஜு, ஹோம்மேக்கர். கோயம்புத்தூர் பொண்ணு. சென்னை டிராஃபிக்கைப் பார்த்து பயந்துட்டாங்க. விஸ்காம் முடிச்சுருக்காங்க. போட்டோகிராஃபி பிரியை. என்னை விதவிதமான காஸ்ட்யூம்ல போட்டோ எடுக்கறதுதான் இப்போ அவங்களோட ஹாபி. ஷூட்டிங், ஃப்ரெண்ட்ஸ்னு பொழுதுபோக்கிட்டு, பசிக்கறப்போ சாப்பிட்டுக்கிட்டு, தூக்கம் வர்ற நேரத்துக்கு வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தவனை, பொறுப்பான பையனா மாத்தி, சாயங்காலம் ஷார்ப்பா 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வர வெச்சுருக்காங்க அஜு! கிரேட்ல?!''னு பரவசமானார் குட்பாய் வெங்கட்!

நிகழ்ச்சித் தொகுப்பாளர், சீரியல், சினிமா நடிகர்னு கலக்கிட்டிருக்கிற ஆடம்ஸ்க்கு கால்கட்டு போட்டாச்சு.

கேபிள் கலாட்டா

''நாலு வருஷத்துக்கு முன்னால, சன் மியூசிக்ல தொகுப்பாளரா வந்த ஒரு பையனைக் காட்டி, 'இந்தப் பையனைப் போல ஒரு பையன் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்..!’னு தன்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஜாலியா ஒரு பொண்ணு சொல்லி, கடைசியில அவனையே திருமணம் செய்துக்கற சூழல் அமைஞ்சா எப்படி இருக்கும்! அந்தப் பையன்தான் ஆடம்ஸ். அந்தப் பொண்ணு, என் மனைவி ஜெரின் ஜாஸ்மின். எங்களோடது... அரேஞ்டு மேரேஜ். கல்யாணம் முடிஞ்சதும் அவங்க எங்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்ட முதல் விஷயமே இதைத்தான்! 'சொல்லி வெச்சு அடிச்ச கில்லி' பட்டம் கொடுக்கலாம்தானே''னு சிரிச்ச ஆடம்ஸ்,

''ஜாஸ்மின் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு ரயில்வே துறையில வொர்க் பண்ணிட்டு இருக்காங்க. இனி இந்த ஆடம்ஸை அவங்கதான் பத்திரமா பார்த்துக்கணும். கொஞ்சம் சொல்லிட்டுப் போ ரீட்டா..!''னு திரும்பவும் சிரிச்சார்!

சன் டி.வி-யில ஒளிபரப்பாகிற 'பிள்ளைநிலா’ சீரியல்ல கலக்குற திவ்யபத்மினிக்கு, ஜூலை 15 டும் டும் டும் முடிஞ்சுருக்கு.

''கணவர் ரித்தீஷ் மும்பையில் ஒரு நிறுவனத்துல ஆர்ட் டிசைனர். அடுத்து நீ என்ன கேட்பேனு தெரியும். எங்களோடது அரேஞ்சுடு மேரேஜ்தான் ரீட்டா. மேட்ரிமோனியல் சைட்ல பார்த்து, ஒரு வருஷத் துக்கு முன்னயே சம்பந்தம் பேசி, சமீபத்துல திருமணம் முடிஞ்ச ஜோடி நாங்க. 'கல்யாணத்துக்குப் பிறகு சூழலுக்கு ஏத்த மாதிரி நடிக்கிறதைப் பத்தி தீர்மானிச்சுக்கலாம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னயே 'நடிப்புக்கு நோ’னு கண்டிஷன் போடற கணவரா இருக்கக் கூடாது’னு என் பேரன்ட்ஸ்கிட்ட கண்டிஷன் போட்டேன். அந்த விஷயத்துல ரித்தி ரொம்ப ஸ்மார்ட். 'நடிப்பும் ஒரு வேலைதான். உன் இஷ்டம்!’னு சொல்லிட்டார். இன்னும் கொஞ்ச நாளைக்கு... கணவரோட மும்பை, எங்க அம்மா - அப்பாவோட கேரளா, நடிப்புக்காக சென்னைனு சுத்திட்டே இருக்கப் போறேன்!''னு டிராவல் பேக் ரெடி பண்ணினாங்க திவ்யபத்மினி!

ஹேப்பி லைஃப்!

 வாசகிகள் பக்கம்

வா...ர...ம், ஆரவா...ர...ம்!

''சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரெல்லாம்... 'ரஜினி வா....ர....ம்', 'குஷ்பு வா....ர...ம்...' என்று எதற்கெடுத்தாலும் மக்கள் இழுவையைப் போடுவது வழக்கமாக இருந்தது... சன்.டி.வி புண்ணியத்தால்! தற்போது, மீண்டும் அந்த ஆரவா....ர....த்தை ஆரம்பித்துவிட்டனர். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு பதினோரு மணிக்கு 'செல்லப் பிராணிகள் வாரம்', 'நண்பர்கள் வாரம்' என தலைப்புக்கேற்ப படங்களை ஒளிபரப்புவது நன்றாக உள்ளது. 'அடுத்து என்ன வா....ர...ம்?’ என்கிற எதிர்பார்ப்பு எகிறுகிறது'' என்று சுவாரசியப்படுகிறார்... மதுரையைச் சேர்ந்த என்.சாந்தினி

கிரேட் டீச்சர்!

''ஜெயா டி.வி-யில் 'அறுசுவை தனி சுவை' என்கிற சமையல் நிகழ்ச்சி திங்கள்தோறும் ஒளிபரப்பாகிறது. சமையல் கலைஞர் ரேவதி சண்முகம் கற்றுத்தரும் பதார்த்தங்கள் ஒவ்வொன்றும் எளிதில் புரியும் வகையிலும், செய்வதற்கு எளிதாகவும் உள்ளது'' என்று மனம் திறந்து பாராட்டுகிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கே.சீதாலெட்சுமி.

விஷத்தை விதைக்காதே விஜய்!

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் '7-சி’ சீரியல், பள்ளி மாணவ - மாணவிகளை பற்றிய கதை. ஆசிரியரை பாடம் நடத்தவிடாமல் செய்வதற்காக, ஒரு மாணவியை அந்த கிளாஸ் பிள்ளைகளே பதுக்கி வைத்து, ஆசிரியர் மீது பழி போடுவதுபோல காட்டப்படுகிறது. சீரியல் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக, இப்படி தவறான விஷயங்களை எல்லாம் காட்டுவது, பிள்ளைகள் மனதில் விஷத்தை விதைப்பதற்கு சமம்'' என்று சீறுகிறார் திருச்சியைச் சேர்ந்த எஸ்.வாணி.