Published:Updated:

'சொர்க்க'த்தைவிட ரிஜிஸ்டர் ஆபீஸ் முக்கியம்!

படம்: தி.விஜய் ம.பிரியதர்ஷினி

'சொர்க்க'த்தைவிட ரிஜிஸ்டர் ஆபீஸ் முக்கியம்!

படம்: தி.விஜய் ம.பிரியதர்ஷினி

Published:Updated:
##~##

''திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படலாம். ஆனால், அவை சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டியது, அவசியம். அதற்கு, திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்!'' என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார்... சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ்!

இதோ... உங்களுக்கு உதவும் வகையில், திருமணத்தை எதற்குப் பதிவு செய்ய வேண்டும், எவ்வாறு பதிவு செய்ய வேண்டும், ஒவ்வொரு மதத்துக்குமான பதிவு சம்பிரதாயங்கள் என்ன, அதற்கு ஆகும் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை அவரே இங்கே பேசுகிறார்...

''திருமணம் என்பது ஆணும் பெண்ணும் வாழ்க்கை முழுக்க இணைந்திருக்கும் பந்தம். அது சட்டத்தால் அங்கீகரிக்கப்படும் போதுதான், பின்னாளில் தம்பதிக்குள் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது சட்டப்பூர்வமாக அணுகுவதற்கும், தீர்ப்பதற்கும், நிவாரணம் பெறுவதற்கும் வழிவகுக்கும்.

'சொர்க்க'த்தைவிட ரிஜிஸ்டர் ஆபீஸ் முக்கியம்!

திருமணப் பதிவு சட்டங்கள் 2006-ம் ஆண்டுக்கு முன்பு கட்டாயச் சட்டமாக்கப்படவில்லை. இதனால், திருமணம் என்கிற பெயரில் பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. பல வருடங்கள் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு, 'இவளுக்கும் எனக்கும் திருமணமே நடக்கவில்லை’ என்று வாதாடும் ஆண்களை சட்டப்பூர்வமாகத் தண்டிக்க, அவனுடன் திருமணம் ஆனதற்கான பதிவுச் சான்றில்லாமல் நின்றார்கள் பல அபலைகள். அதேபோல, 'இனி இந்தக் கொடுமைக்காரனுடன் வாழ முடியாது’ என்று விவாகரத்து வாங்கவோ, ஜீவனாம்சம் பெறவோ... கோர்ட் படியேறினால் 'திருமணத்துக்கு சாட்சி இருக்கிறதா..?’ என்கிற சட்டத்தின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார்கள்.

இப்படி நாளுக்கு நாள் பெண்கள் திருமண பந்தத்தால் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு மாநிலத்துக்குமான பிரத்யேக திருமணப் பதிவுச் சட்டம் 2009-ல் கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என எந்த மதத்தைத் சேர்ந்த தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், தங்களின் திருமணத்தை தமிழ்நாடு அரசு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயம் என உத்தரவிட்டிருக்கிறது மாநில அரசு!'' என்றவர், திருமணங்களைப் பதிவு செய்யும் முறை பற்றி தொடர்ந்தார்.

''இந்து மதத்தைப் பொறுத்தவரை, பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் முடிந்திருக்க வேண்டும். திருமணம் முடிந்தவுடன் மணமக்களின் புகைப்படங்கள், இருவருக்குமான வயது, இருப்பிடச் சான்றிதழ்கள், திருமண அழைப்பிதழ் போன்றவற்றுடன், சார்பதிவாளர் அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஆண் அல்லது பெண்ணின் இருப்பிடத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மணமக்கள் நேரில் ஆஜராகி, மூன்று நபர்களின் நேரடி அத்தாட்சிக் கையெழுத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

'சொர்க்க'த்தைவிட ரிஜிஸ்டர் ஆபீஸ் முக்கியம்!

கிறிஸ்தவர்களுக்கு, திருமணத்தை நடத்தி வைத்த ஃபாதர் கொடுத்த சர்டிபிகேட், வயதுச் சான்று, இருப்பிடச் சான்று, திருமண அழைப்பிதழ், புகைப்படங்களை... விண்ணப்பத்துடன் இணைத்து, திருமணம் நிகழ்ந்த சர்ச்சில் இருந்தே நேரடியாக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஃபாதர் மூலமாகவோ, அல்லது மணமக்கள் நேரடியாகச் சென்றோ சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை, திருமணம் நடத்தி வைத்த மதகுருமார்களின் கையெழுத்திட்ட சான்றிதழுடன், வயது, இருப்பிடம் எனத் தேவைப்படும் பிற சான்றிதழ்களையும் திருமணப் பதிவு விண்ணப்பத்துடன் இணைத்து, மணமக்கள் சார்பில் யார் வேண்டுமானாலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியலாம்'' என்ற வழக்கறிஞர்,

''சாதி, மதங்கள் கடந்து திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தத் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் பதியலாம். இதன்படி திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் பெண்/பையனின் இருப்பிடத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், 'நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்’ என்ற அறிவிப்பைக் கொடுக்க வேண்டும். அது அவர்களின் போட்டோவுடன் அலுவலகத்தில் ஒரு மாதத்துக்கு ஒட்டப்படும். ஆட்சேபனை வராமல் இருந்தால், அதற்குப் பிறகான 90 நாட்களுக்குள் மணமக்கள் விரும்பும் தேதியில்  சார்பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். திருமணத்தை அனைவரும் கட்டாயமாகப் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் இதற்கான செலவை 100 ரூபாய் என மிகக் குறைவாக  அரசு நிர்ணயித்துள்ளது'' என்று விளக்கியவர்,

''இதோ, கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று, ஐஸ்வர்யா - சிவகுமார் தம்பதி அக்கறையோடு தங்கள் திருமணத்தை பதிவு செய்வது போல... எல்லோருமே முன்கூட்டியே அக்கறை காட்டுங்கள். சொர்க்கத்தைவிட ரிஜிஸ்டர் ஆபீஸ்தான் திருமணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்'' என்று மனதில் பதியும்படி வலியுறுத்தினார் ரமேஷ்!