Published:Updated:

முயற்சி எடுத்தார்... பயிற்சி கொடுத்தோம் !

அந்தமான் தீவில் அவள் விகடன்! படங்கள்: கே.ராஜசேகரன்

அவள் விகடன் டீம்

##~##

அந்தமான் - நிகோபர் தீவுகளே அழகு! அவற்றுக்கு மேலும் அழகு சேர்ப்பவை... திரும்பிய பக்கமெல்லாம் செழித்தோங்கி நிற்கும் தென்னை மற்றும் பாக்கு மரங்கள்!

''ஆனால், இங்கே தேங்காய் மற்றும் பாக்கு ஆகியவை மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. இவற்றின் முழுப்பயன்பாடும் இங்கே அறியப்படவில்லை. குறிப்பாக, கீழே விழுந்து கிடக்கும் பாக்கு மட்டைகளைக் கொண்டு, தட்டு தயாரிக்கும் பயிற்சியை பெண்களுக்கு கொடுக்கலாமே...'' என்றொரு விதையை, அங்கே இந்திய கடலோர காவல்படையில் கமாண்டராக இருக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் நம்மிடம் விதைக்க... ஒப்புதல் தந்தோம்.

அடுத்த நொடியே களத்தில் இறங்கிய கமாண்டர் சோமசுந்தரம்... கடகடவென அந்தமான் தமிழ் பிரமுகர்கள் சிலரை ஒருங்கிணைக்க... அவள் விகடன், பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் - வல்லம், இந்திய கடலோர காவல்படை மற்றும் அந்தமான் ஜில்லா பரிஷத் ஆகியவை கைகோக்க, ஜூலை 14, 15 தேதிகளில் பாக்குமட்டை தட்டு தயாரிப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

முயற்சி எடுத்தார்... பயிற்சி கொடுத்தோம் !

முதல்நாள், தலைநகர் போர்ட் பிளேரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கும் பிட்னாபாத் பஞ்சாயத்து கூடத்தில் தமிழ்ப் பெண்களோடு, இந்தி, வங்காளம் மற்றும் தெலுங்கு பேசும் பெண்களும் ஆஜராகியிருக்க... மூன்று மொழிகளிலும் கலந்து நிகழ்வு அரங்கேறியது!

நபார்டு வங்கியின் அந்தமான் பிரதேச பொதுமேலாளர் அதிர்ஷ்டவேல், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் நெடுஞ்செழியன், 'போர்ட் பிளேர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி' தலைவர் பாஸ்கர் மற்றும் ஜில்லா பரிஷத் உறுப்பினர் தமிழரசி ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது. பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பக திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய், ''மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், இந்தியாவில் உள்ள 40 வணிகக் காப்பகங்களில், பெண்களுக்கென்று இருக்கும் ஒரே ஒரு காப்பகம்... எங்களுடையது. அதன் மூலமாக, தொழில் முனைவோர்களாக வடிவெடுத்த நூற்றுக்கணக்கான பெண்களில் ஒருவர்... திருச்சியில் 'கிரீன் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தை நடத்திவரும் நிஷா'' என்று பயிற்சியாளரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதையடுத்து பயிற்சியை ஆரம்பித்த நிஷா, தமிழகத்திலிருந்து விமானம் மூலமாக தான் கொண்டுவந்திருந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, சில மணித்துளிகளில் பாக்கு மட்டை தட்டு தயாரித்துக் காட்ட... அனை வருக்கும் ஆச்சர்யம். ஒவ்வொருவரும் தட்டுகளை தாங்களே தயாரித்த தோடு, அடுத்த கட்டமாக இயந் திரம், மார்க்கெட்டிங் என்று விசாரணையில் இறங்கினர். ''இங் கிருந்து பாக்கு மட்டைகளாகவோ, தட்டுகளாகவோ அனுப்பினால், எவ்வளவு இருந்தாலும் நான் வாங்கிக் கொள்ளத் தயார்'' என்று நிஷா அறிவித்தது, வந்திருந்தவர்களின் நம்பிக்கை   யைக் கூட்டியது. அனைவருக்குமான உணவு உபசரிப்பை செய்திருந்தார் ஜில்லா பரிஷத் உறுப்பினர் தமிழரசி.

முயற்சி எடுத்தார்... பயிற்சி கொடுத்தோம் !

மறுநாள், போர்ட் பிளேர், ஹாடோவிலிருக்கும் கடலோர காவல் படையின் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் கடலோர காவல் படை குடும்பத்தினர் மட்டுமல்லாது, ஆர்வத்தோடு உள்ளூர் பெண்களும் பங்கேற்றனர். கடலோர காவல் படை, அந்தமான் பிரிவு ஐ.ஜி-யின் மனைவியும், 'தட்ரஷிகா' அமைப்பின் தலைவியுமான ஜோதி மூர்த்தி முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரதேச தொழில்துறை செயலாளர் தேவநீதிதாஸ் ஐ.ஏ.எஸ். வந்திருந்து சிறப்பித்தார். இங்கேயும் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என மூன்று மொழிகளும் மணந்தன. நேரடி பயிற்சியில் நிஷா இறங்க, பெண்கள் க்யூவில் நின்று வரிசையாக பாக்குமட்டை தட்டுகளை தயாரித்துப் பார்த்தனர்.

நிறைவாக, கடலோர காவல் படை ஐ.ஜி-யான வி.எஸ்.ஆர். மூர்த்தி, வந்திருந்து வாழ்த்தினார். அப்போது, ''நம் பயன்பாட்டுக்கு நாள்தோறும் தேவைப்படும் பாக்குமட்டைத் தட்டுகளை உற்பத்தி செய்யும் வகையில், இயந்திரங்களை வாங்கி, நம்முடைய குடும்பத்தினர், ஓய்வு நேரங்களில் அவற்றைத் தயாரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யலாமே...'' என்று கமாண்டன்ட் சோமசுந்தரம் ஒரு யோசனையை முன் வைக்க... அதற்கு, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கினார் ஐ.ஜி!

உலர் இயந்திரம் உருவாகும்!

''அந்தமானில் ஒன்பது மாதங்களும் மழை பொழிவதுதான் பிரச்னையே. அதன் காரணமாக ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், பாக்கு மட்டைகளை பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது'' என்று பிட்னாபாத் நிகழ்வில் ஒருவர் கவலையோடு சொன்னார். ''இதைக் களையும் வகையில்,

உலர வைக்கும் இயந்திரத்தை நாங்கள் தயாரித்து தரத் தயார்'' என்று மேடையிலேயே

வாக்குறுதி கொடுத்தார் ராமசாமி தேசாய். அருகிலிருந்த 'நபார்டு' வங்கி பொதுமேலாளர் அதிர்ஷ்டவேல்,

''இந்த முயற்சிக்காக பத்து லட்ச ரூபாய் வரை தரத் தயாராக இருக்கிறோம்'' என்று அறிவித்து, அனைவரின் கைதட்டலையும் அள்ளினார்.