Published:Updated:

புறப்பட்டது புதிய படை...

எது முடியுமோ... அதில் பெஸ்டைக் கொடுக்கணும் !வே.கிருஷ்ணவேணி படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன்

##~##

விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டம்... ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் எழுத்துப்பட்டறை! கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே எழுத்துலகில் பயிற்சி பெற மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் அக்கறையுடன், பல ஆண்டுகளாக விகடன் நடத்தி வரும் திட்டம்!

2012 - 13 ஆண்டுக்கான மாணவ பத்திரிகை யாளர் திட்டத்துக்காக, விண்ணப்பித்த மாணவர் களின் எண்ணிக்கை, 2,433. பல கட்ட தேர்வு களுக்குப் பின், 54 பேர் தேர்ந்தெடுக்கப்பட, அவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை,      தி.நகர், மீனாட்சி திருமண மண்டபத்தில் ஜூலை 21, 22 தேதிகளில் நடைபெற்றது.

மொழியில் தெளிவும், மனதில் ஆர்வமும், முயற்சியில் உறுதியுமாக அங்கே கூடியிருந்த மாணவர்களுக்கு, திட்டத்தின் அறிமுக உரையை விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் கே.அசோகன், ஆசிரியர் ரா.கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, தொகுப்பாளர், நடிகர் சிவகார்த்திகேயன், எழுத்தாளர், கவிஞர் மதன் கார்க்கி, அரங்கக் கலைஞர், எழுத்தாளர் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா, 'வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், எழுத்தாளர், இயக்குநர் 'வட்டியும் முதலும்’ ராஜு முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

புறப்பட்டது புதிய படை...

'ஹுயூமர் கிங்' சிவகார்த்திகேயன் தன்னுடைய பேச்சில், ''ஸ்கூல்ல படிக்கும்போது என் இங்கிலீஷ் டீச்சர், 'டிராமாவுல உனக்குதான் லேடி கெட்டப் சூட் ஆகும்... அப்படியே ஆங்கிலோ-இண்டியன் கேர்ள் மாதிரியே இருக்கே’னு ஒரு கவுனைப் போட்டுவிட்டு, கடைசி ரோவுல நிக்க வெச்சுடு வாங்க.

திருச்சி ஜே.ஜே. இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தப்போ, டைமிங் காமெடியால பல கல்ச்சுரல் மேடைகளைக் கலக்கினேன். 'காமெடி பண்ணி சுத்தியிருக்கிறவங்கள சிரிக்க வைக்கலாம்... வேறென்ன

புறப்பட்டது புதிய படை...

பண்ணிட முடியும்?’னு நினைக்காம, என்னோட அந்தத் திறமையவே முன்னிறுத்தி வாய்ப்புகளைத் துரத்தினேன். இன்னிக்கு ஒரு நல்ல நிலையில் வந்து நிக்கிறேன். அதனால, நம்மால எது முடியுமோ அதில் நம்ம பெஸ்டைக் கொடுக்கணும்!'' என்றார் கலகல பேச்சுடன்.

ஒரு திருநங்கையாக இந்தச் சமூகத்திடம் சந்தித்த வேதனைகளைப் பகிர்ந்துகொண்ட 'லிவிங் ஸ்மைல்’ வித்யா, ''நான் ஆணாகப் பிறந்தபோதிலும் பெண்ணாக வாழ ஆசைப் பட்டேன். எனக்குள் பெண்மை மிகுந்து கொண்டிருந்த நேரம் அது. அன்று வேலை முடித்து குடைபிடித்தபடி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு 12 வயதுச் சிறுவன், அவன் குடித்த தண்ணீர் பாக்கெட்டை என் மேல் தூக்கி அடித்து, 'ஊரோரம் புளியமரம்’ என்ற 'பருத்தி வீரன்’ பாடலைப் பாடிக் கேலி செய்தான். அக்கம் பக்கம் நின்றவர்களும் கேலி செய்து சிரித்தார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நான் அன்று அவமானப்படுத்தப்பட்டதற்கும், திருநங்கைகள் மீதான ஒரு சிறுவனின் பார்வைகூட பாழ்பட்டிருப்பதையும் நினைத்து இன்றுவரை வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் இன்று எனக்கான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளேன். என்னைப்போல் போராடிக்கொண்டிருக்கும் திருநங்கைகளும் மேலெழுந்து வர, சமூகத்தின் புரிதல் நேர்படுத்தப்பட வேண்டும். அதற்கு பத்திரிகையாளர்களான உங்களின் முயற்சியும் அவசியம்!'' என்று உருக்கமாக பேசினார்.

அன்று மாலை, பூபாளம் கலைக்குழுவினர், நாட்டுநடப்புகளை மையமாக வைத்து நடத்திய கலைநிகழ்ச்சி, குலுங்க குலுங்க சிரிக்க வைத்து மாணவ நிருபர்களை அசரடித்தது.

புறப்பட்டது புதிய படை...

2011 - 12 ஆண்டு பயிற்சித் திட்டத்தின் தலை சிறந்த (Outstanding) மாணவ நிருபர்களாக ஆ.நந்தகுமார், மகா.தமிழ்ப்பிரபாகரன், ம.சபரி, பூ.கொ.சரவணன், சா.வடிவரசு மற்றும் மாணவப் புகைப்படக்காரர்களாக ப.சரவணகுமார், ஜெ.வேங்கடராஜ்... 'மிகச்சிறப்பு’ தகுதியுடன் (Excellence) ஆ.அலெக்ஸ் பாண்டியன், ரா.ராபின் மார்லர், நா.சிபிச்சக்கரவர்த்தி, ரா.அண்ணாமலை, மா.நந்தினி மற்றும் புகைப்படக்காரர்களாக   இ.ராஜவிபீஷிகா, ர.அருண்பாண்டியன், க.கோ.ஆனந்த், செ.பாலநாகஅபிஷேக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் முடித்துப் புறப்படும்போது, புதிய மாணவப் பத்திரிகை யாளர்களிடம் தன்னம்பிக்கையும், உற்சாகமும் நிரம்பியிருந்தது!

போட்டோகிராஃபர் இ.ராஜவிபீஷிகா (அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்), ''போட்டோகிராஃபி மேல இருந்த ஆர்வத்தால லோன் போட்டு கேமரா வாங்கி நிறைய புகைப்படங்கள் எடுத்துட்டிருந்த இருந்த எனக்கு, விகடன்ல நல்ல களம் கிடைச்சது... என்னோட பாக்கியம். அதை சரியா பயன்படுத்திக்கிட்டேனுதான் நினைக்கிறேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார்.

நிருபர் மா.நந்தினி (தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி, பொறையார்), ''நான் ஃபீல்ட் வொர்க்குக்குப் போகும்போதெல் லாம், எங்கப்பா ரொம்ப பயப்படுவார். அவரும் கூடவே வருவார். மாணவ பத்திரிகையாளரான பிறகு எனக்குள்ள வளர்ந்த தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் பார்த்து அவரே பாராட்டி தள்ளிட்டார். நான் ஜெயிச்சுட்டேன்கிறதுக்கு இது ஒண்ணே போதும்'' என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.