Published:Updated:

Money Money Money

அட்சயப் பாத்திரம் உங்கள் கையில்! நிதி ஆலோசகர் அனிதா பட்

Money Money Money

அட்சயப் பாத்திரம் உங்கள் கையில்! நிதி ஆலோசகர் அனிதா பட்

Published:Updated:

நிதி ஆலோசகர் அனிதா பட்

பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர்

##~##

கடந்து வந்த இதழ்களில் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள், சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பாக சேமிப்பது என பல விஷயங்கள் பற்றி பேசி வந்தோம். இதோ இந்த தொடரின் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கும் வேளையில்... இவ்வளவு நாள் நாம் பேசி வந்த நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என ஒரு முறை பார்க்கலாமா..!

இன்ஷூரன்ஸ் என்பது உங்கள் வாழ்க்கையின் பாதுகாப்புக்காக மட்டுமே. இது முதலீட்டுக்காக எடுப்பது இல்லை. உங்கள் சொந்தக்காரர், நண்பர் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக இருக்கிறார் என்பதற்காக அவர்கள் சொல்லும் பாலிசிகளை எல்லாம் எடுத்துவிட வேண்டாம். உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் இல்லாத காலத்தில் அல்லது உங்களால் வேலைக்குச் சென்று சம்பாதிக்க முடியாத காலங்களில் உதவும் வகையிலான பாலிசிகளை எடுக்கவும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்பது நீண்டகால சேமிப்புக்குத் தகுந்த ஒன்று. 10, 20 வருடங்கள் என நீண்டகால நோக்கில் பணத்தை சேமித்து வந்தாலே நல்ல வருமானம் பெற முடியும். இதை பாதியில் எடுத்து வீணடிக்காதீர்கள்.

நீண்ட காலத்துக்கு முதலீடு செய்திருக்கும்போது, உங்கள் முதலீடு எந்தவிதத்தில் தற்போது இருக்கிறது என்பதை அவ்வப்போது கவனியுங்கள்.

Money Money Money

 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல உள்ளன... அவற்றில் பல திட்டங்கள் இருக்கின்றன என்பதால், உங்களின் தேவை என்ன, அதற்கு ஆகும் செலவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்வது நல்லது.

 சிறு வயதில் ரிஸ்க் அதிகம் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்யத் துவங்குங்கள். வயது அதிகமாகும்போது ரிஸ்க் இருக்கும் திட்டங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை எடுத்து, வங்கி டெபாஸிட் அல்லது தபால் நிலைய ஆர்.டி. ஆகியவற்றில் முதலீடு செய்யுங்கள். 50 வயது ஆகும்போது உங்களது முதலீட்டை ரிஸ்க் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்வதைத் துவங்கிவிடுங்கள்.

பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யலாம் என நினைக்கும் பெண்கள், முதலில் கொஞ்சம் பணம் போட்டு பங்குகளை வாங்கி அது வர்த்தகம் ஆகும் முறைகளைப் பின்பற்றி, பிறகு உங்கள் முதலீட்டை அதிகப்படுத்தலாம்.

முழுவதும் புரோக்கர்களை மட்டுமே நம்பாமல் பங்குச்சந்தை குறித்த கருத்தரங்கங்கள், இணையதளம், பத்திரிகைகள் என அது சம்பந்தப்பட்ட விஷயங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தோழிகளே... முதலீடு குறித்து மேலே சொல்லியிருக்கும் இந்த எல்லா விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறேன். இதோ... பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு குடும்பத் தலைவி என்கிற வகையில் பொதுவாக கடைப் பிடிக்க வேண்டிய சில டிப்ஸ்களையும் சொல்கிறேன். அதையெல்லாமும்கூட எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள்!

 வங்கிக்குச் சென்று பணம் எடுப்பது, வங்கிக் கடன் வாங்க அணுகுவது, இன்ஷூரன்ஸ் எடுப்பது என பணம் சம்பந்தப்பட்ட சகல விஷயங்களையும் தெரிந்து கொண்டு செய்வது ஆண்கள் இல்லாத சமயங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 வீட்டில் கணவர் அல்லது மனைவி யாராவது ஒருவர் பட்ஜெட் போடப் பழகுங்கள். மாதாமாதம் பட்ஜெட்படி செலவுகள் நடைபெறுகின்றனவா, அந்த பட்ஜெட்டை தாண்டி செலவு போகிறது என்றால்... அதற்கு என்ன காரணம், அதை எப்படி சரிசெய்யலாம் என யோசியுங்கள்.  

 கணவருக்குத் தெரியாமல் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது, நகைகளை அடகு வைத்து பணத்தைக் கொடுப்பது, அல்லது நகைகளையே அடகு வைக்கக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்காதபோது, கணவருக்கு இது தெரியும்பட்சத்தில், குடும்ப வாழ்க்கையே குழப்பத்துக்குள் மூழ்கிவிடும்... மறந்துவிடாதீர்கள்.

 'என் குழந்தை கேட்கும் முன்பே அனைத்தையும் வாங்கிக் கொடுத்துவிடுவேன்' என பெருமையாக இருக்காதீர்கள். குழந்தை களுக்கு பணத்தைப் பற்றிய புரிதலை சிறு வயதிலிருந்தே சரியான விதத்தில் உண்டு பண்ணுங்கள். இல்லையென்றால், சிறிதாக பணக்கஷ்டம் வந்தால்கூட வாழ்க்கையில் மிகவும் தடுமாறிப் போய்விடுவார்கள்.

கடன், முதலீடு, சொத்து என அனைத்து விஷயங்களையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்னதான் நிதி ஆலோசகர் என்ற நிலையில் நான் பேசினாலும், உங்கள் ஒவ்வொருவரும் கையில்தான் இருக்கிறது சேமிப்பு எனும் அட்சயப் பாத்திரம். உங்கள் அனைவரது வாழ்க்கையிலும் செல்வம் செழிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழிகளே!

நிறைவடைந்தது
தொகுப்பு: பானுமதி அருணாசலம்