Published:Updated:

ரொமான்ஸ் ரககியங்கள் !

டாக்டர் ஷாலினி

ரொமான்ஸ் ரககியங்கள் !

டாக்டர் ஷாலினி

Published:Updated:
##~##

லீனாவுக்கு 13 வயது. அவளைச் சின்ன குழந்தை என்றே வீட்டுப் பெரியவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ''அவள், யாரோ ஒரு பையனோடு ஷாப்பிங் மால் போனதைப் பார்த்தோம்’' என்று நம்பகமானவர்கள் சொன்னபோது... 'அவ குழந்தையாச்சே...’ என்கிற அவர்களின் இத்தனை கால நம்பிக்கை பொய்த்துப்போன அதிர்ச்சியில், ஆத்திரமானார்கள். அவளை விசாரித்தார்கள். திட்டித் தீர்த்தார்கள். அட்வைஸ் மழையை ஆரம்பித்தார்கள்.

லீனா எதற்கும் அசரவில்லை. தெனாவட்டாக, ''நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்'' என்றாள். அடி, உதை எதற்குமே மசியாமல் உண்ணாவிரதம் கிடந்தபோது, பெற்றோருக்குப் பாசம் தாங்காமல், உடனே பிரத்யேக கவுன்சலிங் அழைத்து வந்தார்கள். அவள் அப்போதும் அசராமல், ''நீங்க என்ன புதுசா சொல்லிடப் போறீங்க... 'முளைச்சு முணு இலை விடலை, அதுக்குள்ள உனக்கு காதல் கேட்குதா’னுதானே? யார் என்ன சொன்னாலும் என் மனசை மாத்திக்க முடியாது. நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். எங்களுக்குப் பிறக்க போற குழந்தைக்கு என்ன பேர் வெக்கணும்னுகூட யோசிச்சுட்டேன் தெரியுமா? என்னை மாத்த யாராலயும் முடியாது!' என்றாள் அறியாத்தன மான உறுதியுடன்.

கடைசியில் அவள் மனம் மாறிப்போனாள் என்பது வேறு கதை.

ஆனால், அவளுக்கும் பெற்றோருக்குமே தெரியாத ஒரு விஷயம்... 13 வயது, இன்றைய கால மனிதர்களைப் பொறுத்த வரை குழந்தைப் பருவமாக இருக்கலாம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்... அதுவே இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை ரொம்ப லேட். பெரியாரைத் திருமணம் செய்து கொண்டபோது நாகம்மையின் வயது 13. பாரதியாரைத் திருமணம் செய்து கொண்டபோது செல்லம்மாவுக்கு அதைவிட சின்ன வயதுதான். அவ்வளவு ஏன்... நாம் காதலுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளாக இன்று வரை நாம் போற்றிக் கொண்டிருக்கும் லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட், அம்பிகாபதி - அமராவதி... இவர்கள் எல்லோருமே டீன் ஏஜ்காரர்கள்தான்.

ரொமான்ஸ் ரககியங்கள் !

இயற்கையைப் பொறுத்தவரை, பருவம் அடைந்த உடனே எதிர்பாலின ஈர்ப்பு ஏற்பட்டு ஆக வேண்டும். ரொமான்டிக் கனவுகள் உருவாக வேண்டும். 'எனக்கே எனக்கென்று ஒரு ஆள் வேண்டும்’ என்கிற வேட்கை தலைதூக்க வேண்டும். இது பொதுவாக பெண்களுக்கு 12 - 16 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு 14 - 18 வயதுக்குள்ளும் நடக்கும் பருவ மாற்றம். இப்படி எதுவுமே நடக்கவில்லை என்றால், அந்த பதின்பருவத்தினருக்கு எதிர்பாலினர் மீது நாட்டமே வரவில்லை என்றால், அவர் உடலில் போதுமான ஹார்மோனே ஊறவில்லை என்று அர்த்தமாகிவிடும். அந்த அளவுக்கு மிக இயல்பான, நடந்தே தீர வேண்டிய மனமாற்றம் இந்தத் துணை தேடும் படலம்.

''ஆனால், பெண்ணின் திருமண வயது பதினெட்டுதானே? ஆணின் திருமண வயது இருபத்தியன்றுதானே? அதற்குள் எப்படி காதல், கல்யாணம் கத்திரிக்காய் எல்லாம்..?'' என்று கேட்கிறீர்களா?

இயற்கை நியதிகளின்படி பார்த்தால் 13 வயது திருமணம் என்பதில் தவறில்லைதான்.       ஆனால்,  இதைப் பயன்படுத்தி கடந்த காலத்து ஆணாதிக்க சமூகம் இழைத்த கொடுமை  களைப் பார்த்தால் இது பெரும் தவறு! அதனால்தான்... தாகூரும், பாரதியும்,    பெரியாரும், அம்பேத்கரும் ரொம்பவே போராடி பெண்ணின் திருமண வயதை உயர்த்தினார்கள். இல்லை என்றால் நம்மூர் மூடநம்பிக்கைவாதிகள் எல்லாம் மனு தர்மத்தில் சொல்லப்பட்ட முட்டாள்தனங்களில் ஒன்றான 'கன்னிகாதானம்' என்பதைத்தைதானே பின்பற்றினார்கள். 'கன்னிகாதானம் என்பது நம்முடைய கலாசாரத்தின் சிறப்பல்லவா?’ என்கிறீர்களா..? கன்னிகாதானம் என்பதன் பொருள் தெரியுமா உங்களுக்கு..?

ரொமான்ஸ் ரககியங்கள் !

'கன்னிகா' என்றால் பூப்படையாத 8 வயதுக்கு கீழே இருக்கக் கூடிய பெண். வயதுக்கு வந்துவிட்டால், பெண் கன்னியாகி விடுவாள். அதற்கு முன்பே, அவள் பூப்படையாத கன்னிகையாக இருக்கும்போதே, அவளை அக்மார்க் கற்போடு ஒருவனுக்கு கட்டிக் கொடுத்துவிடுவதுதான் ஒரு நல்ல தகப்பனுக்கு அழகு என்று நினைத்தார்கள் அக்கால இந்தியர்கள். அதற்குப் பிறகு, திருமணம் செய்து வைத்தால்தான் என்ன கெட்டுவிடுமாம்? அந்தப் பெண்ணே கெட்டுப் போய்விடுவாளாம். அவள் வயதுக்கு வந்துவிட்ட பிறகு, பூரண கற்போடு இருக்கிறாள் என்பதற்கு கேரன்டியே இல்லையாம். எதற்கு இந்த வம்பெல்லாம், வயதுக்கு வருவதற்கு முன்பே கட்டிக் கொடுத்துவிட்டால், கற்பு பற்றிய கேள்வியே வராதே!

இன்றையச் சட்டத்தின்படி, 16 வயதுக்குக் கீழ் இருக்கும் பெண்ணோடு உடலுறவு கொண்டால்... அது பாலியல் பலாத்காரம்... அதற்குரிய தண்டனை கிடைக்கும். ஆனால், 1947-ம் ஆண்டுக்கு முன்னால், 'இந்த கன்னிகாதான முறையே இந்தியப் பாரம்பரியத்தின் உச்சகட்ட எடுத்துக்காட்டு, இந்தியப் பெண்ணின் கற்பொழுக்கத்துக்கான உச்சகட்ட சான்று' என்று பாலகங்காதர திலகர் உள்ளிட்டவர்கள்கூட இந்த முறைக்கு வக்காலத்து வாங்கினார்கள் என்றால்... அன்றைய பொதுப் பார்வை எப்படி இருந் திருக்கும் என்று பாருங்களேன்.

ஆனால், காலத்தோடு நம் கட்டமைப்புகளும், கண்ணோட்டங்களும் மாறிக்கொண்டே வந்தன. அந்தக் காலப் பெண்ணுக்கு படிப்புரிமை கிடையாது. அவள் வேலை செய்கிற, குட்டி போட்டு வளர்க்கிற, ஆணுக்கு சேவைகள் செய்கிற ஒரு ஓசி மெஷின் மட்டுமே. அதனால், 'சட்டுபுட்டுனு ஒரு மெஷினை வாங்கிப் போட்டோமா, அடுத்த காரியத்தைப் பார்த்தோமா...’ என்று அக்கால மனிதர்கள் நினைத்தார்கள். இத்தனை சின்ன பெண், இன்னும் வளர்ச்சி முழுமை பெறாத உடம்போடு, மகப்பேறின்போது மாண்டு போனால்? அதுதான் மலிவாக கிடைக்கும் மெஷின் ஆயிற்றே... போனதைக் கழித்துக் கட்டிவிட்டு, மற்றொன்றை கட்டிக் கொண்டால் கூடவே நிறைய சீதனமும் கிடைக்குமே! பெரும்பாலான ஆண்களுக்கு இது ரொம்பவே சௌகரியமாக இருந்ததால், அதற்கு மேல் அதுபற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை.

ஆனால் தாகூரும், பாரதியும், பெரியாரும், நேருவும், அம்பேத்கரும் பெண்ணை இப்படி வெறும் ஒரு உற்பத்தி எந்திரமாகப் பார்க்க வில்லை. பெண்கள் கல்வி,வளர்ச்சி, அறிவு மேம்பாடு மாதிரியான விஷயங்களும் பெற்று இன்னும் அதிக அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்பதில் மிக முனைப்பாக செயல்பட்டார்கள். ரொம்பவே போராடி, பெண்களுக்கான பல உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள்! அதில் மிக முக்கியமானது... வெறும் குட்டி போடும் எந்திரமாக இருக்காமல், சுயஅறிவை பயன்படுத்தி தன் முடிவுகளைத் தானே எடுக்கும் நிலைக்கு பெண் உயர வேண்டும் என்பதுதான்.

''சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால், இந்த மனித மனங்களில், 'ரொமான்ஸ்' என்கிற தேவையை இயற்கை ஏன் ஏற்படுத்தியது? 'இந்த ஆணும்... இந்த பெண்ணும் கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே' என்றுதானே?''

இது உண்மையான காரணம் அல்ல... அது, வேறொரு காரணத்துக்காக!

- நெருக்கம் வளரும்...