Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: ஹரன்

 கண்ணாடி காலி... கடவுள் தப்பிச்சார்!

##~##

பயங்கர சுட்டியான என் பையனும், அவன் ஃப்ரெண்டும் சேர்ந்து விளையாடும்போது, பந்தை உருட்டிவிட்டு ஒரு சாமி படத்தை உடைத்துவிட்டனர். மூன்று கடவுள்கள் இணைந்திருந்த அந்தப் படத்தின் கண்ணாடி ஃப்ரேம் உடைந்து போய் கிடைக்க, நான் கோபமாகப் பார்த்தேன்.

உடனே என் மகன் என்னிடம் ஓடி வந்து, ''அம்மா... கண்ணாடிதான் உடைஞ்சுச்சு... சாமி எல்லாரும் அப்படியேதான் இருக்காங்க... அவங்களுக்கு ஒண்ணும் ஆகல...'' என்று என்னைச் சமாதானப்படுத்த, கோபம் மறைந்து சிரிப்பு தொற்றிக் கொண்டது. கூடவே... ''ஒருவேளை சாமி மேல பால் பட்டிருந்ததுனா, அவருக்கு காயம் ஆகியிருக்கும், அப்புறம் அவர் ஸ்கூலுக்கு லீவ் போடணும். ஆமாதானேம்மா..?!'' என்று அவன் அடுக்கிக்கொண்டே போக, சின்னச் சிரிப்பு பெரிதானது எனக்கு!  

குட்டீஸ் குறும்பு !

- கோ.ரேவதி, சங்கராபுரம்

வாங்க சாமி... போங்க சாமி!

குட்டீஸ் குறும்பு !

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் என் மகள் சிவாத்மிகா, என்னையும் அவள் அப்பாவையும் 'வாங்க, போங்க’ என்றுதான் பேசுவாள். அவள் தோழி ஒருத்தி மிஸ் முன்னிலையில் தன் அம்மாவை 'வா போ’ என்று பேச, அதை மிஸ் கண்டித்து, ''பேரன்ட்ஸை 'வாங்க, போங்க’னு மரியாதையாதான் கூப்பிடணும்'' என அறிவுறுத்தியதை என்னிடம் சொன்னவள், ''நான் சரியா சொல்றேன்லம்மா..?'' என்றாள் பெருமையுடன். அன்று மாலை கோயிலுக்குச் சென்றபோது, ''தாயே அங்காளம்மா... நீதாம்மா எங்கள நல்லா வைக்கணும்...'' என்று வாய்விட்டு நான் வேண்டிக் கொண்டிருக்க, அடுத்த கணம் என் கையை கோபமாக இழுத்து என்னை அவளைப் பார்க்கச் செய்தவள், ''சாமி எவ்வளவு பெரியவங்க? அவங்களப் போயி 'நீ, வா, போ’னு பேசலாமா..? இருங்க உங்கள எங்க மிஸ்கிட்ட சொல்லிக் கொடுக்குறேன்!'' என்று படபடக்க, சந்நிதியில் இருந்த அனைவருக்கும் சிரிப்புதான்!  

- உமா ஜெகதீசன், திருச்சி

எலே... சேவிலே!

குட்டீஸ் குறும்பு !

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மூன்று குழந்தைகளுடன் தூத்துக்குடியில் வசித்தோம். அந்தக் காலத்தில் ஒரு கல்யாணத்துக்காக சென்னை வந்திருந்த எங்களுக்கு தாம்பூலம் கொடுத்த உறவினர், மூன்றரை வயதான என் கடைசி மகனிடம், ''சேவி (நமஸ்காரம் செய்)... அப்பதான் பணம் தருவேன்!'' என்றார். என் மகனோ நின்றுகொண்டே இருந்தான். அதற்குள் இன்னும் சில உறவினர்களும் கூடிவிட, திரும்பத் திரும்ப சொல்லியும் இவன் அசையவில்லை. இதற்கிடையில், அங்கு வந்த எட்டு வயதான என் இரண்டாவது மகனிடம் உறவினர், ''பாருடா உன் தம்பி சேவிக்க மாட்டேங்கறான்'' என்றார். உடனே இவன் தம்பியைப் பார்த்து, ''எலே... விழுந்து கும்பிடுலே!'' என்றவுடன், சட்டென சேவித்துவிட்டான்! 'அப்போ பாஷைதான் அவன் பிரச்னையா?’ என்று அனைவரும் சிரிக்க, தம்பியின் பிரச்னையை நொடியில் புரிந்துகொண்ட இளைய மகனை நினைத்து நான் சந்தோஷப்பட்டுக் கொண்டேன்!

- சீதா கண்ணன், சென்னை-83