Published:Updated:

என்னவரே...என்னவரே...

சந்திப்பு: ம.மோகன்

என்னவரே...என்னவரே...

சந்திப்பு: ம.மோகன்

Published:Updated:
##~##

வண்ணங்களையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது. மரபு சார்ந்த விஷயங்களையும்கூட, நவீனத்துவத்தோடு ஓவியம் வாயிலாக மறுவாசிப்புக்கு கொண்டு வர முனையும் தூரிகைக் கலைஞன். போட்டோகிராஃபி, அனிமேஷன், டிசைனிங், கிராஃபிக்ஸ் என்று நவீனத்தின் வாசல் வழியே ஓவியத்தில் புதுமையை வடித்துக் கொண்டிருப்பவர். சினிமாவில் கலை இயக்குநராகவும் திறம்பட பிரதிபலிக்கும் இவரது சுதந்திரமான சுழற்சிக்கு பக்கபலமாக இருப்பவர்... திருமதி ரத்தினம் ட்ராட்ஸ்கி மருது!

''காண்பது அனைத்தையும் கலைநயத்துடன் அணுகும் மனம்... வரம்! அந்த வரம் பெற்றவரின் மனைவியாக இருப்பது... சுகம். மிகத்திறமையான படைப்பாளியின் மனைவி என்பதில், எனக்கு கர்வம் கலந்த பெருமை என்றே சொல்வேன்!''

- அகம் பிரதிபலிக்கிறது முகம்!

''நகரம் என்று சொல்லப்பட்டாலும், அதிகமாக கிராமத்துச் சாயல்கொண்ட மதுரைதான் எங்கள் இருவருக்குமே சொந்த ஊர். அவரின் வீட்டுக்கு அருகில் ஒரு வீடு வாங்கியதால் என் அப்பாவும் அவர் அப்பாவும் நண்பர்களானார்கள். அந்த நட்புக்கு கூடுதல் பலமாக எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். நான் அப்போது பள்ளிப் படிப்பை முடித்து, வீட்டில் இருந்தேன். அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் படிப்பை முடித்திருந்தார். திருமணத்துக்குப் பின் அவர் சென்ட்ரல் கவர்மென்ட் தேர்வு எழுதி டெக்ஸ்டைல் டிசைனிங் துறையில் வேலைக்கு சேர்ந்தார். முதல் போஸ்ட்டிங்... விஜயவாடாவில்!

என்னவரே...என்னவரே...

'படிப்பு முடிச்ச கையோட திருமணம்... திருமணம் முடிஞ்ச கையோட அரசு வேலை... வா போகலாம்’ என்றபடி, என்னையும் சந்தோஷமாக கைபிடித்து அழைத்துச் சென்றார். புது ஊர், புது மொழி என்று எனக்கு கண்ணைக் கட்டிவிட்டது போல இருந்தது. அக்கம் பக்கத்தினருடன் சிநேகமாகி மொழியைக் கற்றுக் கொண்டதால், சாருக்கு முன்னால் தெலுங்கு எனக்கு சரளமானது. 'ஓவியம் சார்ந்து பல ஊருங்க, தேசம்னு சுத்திக்கிட்டிருக்கேன். ஆனா... எனக்கு முன்ன ஒரு புது மொழியை இவ்வளவு சுலபமா கத்துக்கிட்டியே!’ என்று பாராட்டினார். இப்படித்தான்... என் சின்ன சின்ன முயற்சிகளையும் பெரிதாகப் பாராட்டி ஊக்குவிப்பதில் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு!

பயணங்களின் காதலன் அவர். அலுவலக வேலையாகவோ, ஓவியக் கண்காட்சிக்காகவோ எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊரின் பாரம்பரியப் பொருட்களை வாங்கி வந்துவிடுவார். எங்கிருந்தாலும், என் நினைவும் அவருடனேயே இருக்கும். எங்கு சென்றாலும் எனக்காக ஏதாவது பொருட்கள் வாங்கி வந்து கொடுக்கும் அன்புக் கைகள் அவருக்கு. அந்த விதத்தில் என்னிடம் சேர்ந்த புடவைகள் பல பல! என் தோழிகள் எல்லோரும், 'நீ கொடுத்து வெச்சவதான்!’ என்று மெச்சும்போது, ஆனந்தத்தில் என் ஆயுள் கூடும்!

கிரியேட்டர் மருது சாரை வெளியாட்கள் பார்த்து ஆச்சர்யப்படும் அதே வியப்புதான், அவர் கூடவே இருக்கும் எனக்கும், அவரின் ஒவ்வொரு புதிய முயற்சியின்போதும் ஏற்படும். தன் துறை சம்பந்தமான டெக்னிகல் விஷயம் ஒன்று நடைமுறைக்கு வந்தால், அதை அப்டேட்டடாக வைத்துக் கொள்வதில் அத்தனை வேகம் காட்டுவார். அப்படித்தான் கம்ப்யூட்டர், 'ஐ பேட்’ என்று இன்று வளர்ந்திருக்கும் டெக்னாலஜிகள் எல்லாம் அத்துப்படியாகியிருக்கிறது அவருக்கு. அத்துடன் அதை ஓவியம் சார்ந்த கிரியேட்டிவ் விஷயங்களுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதிலும் முயற்சிகளைத் தொடங்கிவிடுவார்.

இந்த ஆர்வமும், தேடலும்தான் அரசாங்க வேலையில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்ளக் காரணமானது. விஜயவாடாவில் வேலை பார்த்த நான்கு வருடங்களுக்குப் பின், சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது. இங்கு வந்து ஐந்து வருடங்கள் வேலைக்குச் சென்றார். ஆனால், காலை 9 மணிக்குச் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பும் சராசரி வேலையில் அவருக்கு திருப்தியில்லை. மேலும், தன்னுள் இருந்த கிரியேட்டரை அதற்கு மேலும் அடக்கி வைக்க அவர் விரும்பவில்லை. வேலையை துணிந்து துறந்தார். அப்போதுகூட, 'இருந்த நல்ல உத்தியோகம் போச்சே... இனி என்ன செய்றது..?’ என்று நான் பதற்றப்படவில்லை. அவரின் தேடலைப் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்கு இருந்தது. இன்னொரு பக்கம், 'நான் மருதுவின் மனைவி’ என்கிற மிகப்பெரிய தைரியம் என்னைத் தாங்கியிருந்தது.  

என்னவரே...என்னவரே...

சேர்ந்திருப்பதைவிட, பிரிவில் பரிதவிக்கும்போதுதான் அன்பின் அடர்த்தி புரியும். அப்படி எங்களைப் பரிதவிக்கவிட்ட அந்தச் சம்பவம் நினைவில் வருகிறது. எட்டு வருடங்களுக்கு முன் சுனாமி வந்தபோது, தமிழகமும் இலங்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் இலங்கையில்... நான் சென்னையில். தொடர்புகள் துண்டிக்கப்பட, அவரால் என்னைத் தொடர்புகொள்ள முடியாத நிலை. அவரின் நிலை என்ன என்று அறிய முடியாத பெருந்துயரம் எனக்கு. இருவரும் செய்வதறியாது பரிதவித்து, ஒருவழியாக அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, 'உயிர் போய் உயிர் வந்தது’ என்பதன் பொருள் புரிந்திருந்தது இருவருக்கும். ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பின் அற்புதத்தை ஆழம் பார்த்த அந்தச் சம்பவம், இப்போதும் ஓர் பரவச நினைவாக எங்களுடன் தங்கியிருக்கிறது.

அவர் எத்தனையோ வடிவம், படிமங்களில் வரைந்திருந்தாலும், ஒரு ஸ்ட்ரோக் வைப்பது போல போகிற போக்கில் வரையும் குதிரை ஓவியம் எனக்கு மிகவும் பிடிக்கும். 'குதிரையோட பலம், வேகம், துடிப்பு எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சது!’ என்று அந்த ஓவியத்துக்கு அவர் கொடுக்கும் விளக்கமும் பிடிக்கும். அவருடைய மிகப் பெரிய நட்பு வட்டம், நான் சந்தோஷிக்கும் இன்னொரு விஷயம். கடந்த 20, 25 வருடங்களாக நண்பர்கள், மாணவர்கள் என்று இன்றுவரை பலருக்கும் இந்த வீடு வேடந்தாங்கல்தான். இத்தனை மனிதர்களை, மனங்களைச் சம்பாதித்திருக்கும் அவரின் மனம்... என் பாக்கியம்!

ஓவியம், சினிமா என்று என்னைப் பிரிந்து எங்கு சென்றாலும், மணிக்கு ஒருமுறை எனக்கு போன் செய்துவிடுவார். ஊர், சொந்தங்கள் என்று நான்கு நாள் வெளியூர் சென்றுவந்தால், அவரின் ஸ்டூடியோ தவிர வீட்டில் ஒரு பொருள்கூட தடம் மாறாமல் அப்படியே இருக்கும். ஒரு காபி போட்டுக் கொள்ளக்கூடத் தெரியாது. 'நீ இல்லாத வீட்டுல எனக்குப் புழங்கத் தெரியலையே...’ என்று ஊரில் இருந்து திரும்பும் என்னிடம் சிரிப்பார். அதற்காகவே அவரை தனியே விட்டுப் போகும் பயணங்களை நான் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். 'வீட்டுக்காரர்... வீட்டுக்காரர்னு இப்படியா இருக்கிறது..?!’ என்று நெருக்கமானவர்கள் கேலி செய்வார்கள். சின்னதாக ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகச் சொல்வேன். அதுவும் என்னவரின் அன்பிலிருந்து பெற்றது!''