Published:Updated:

யாதுமாகி நின்றாள்

அதிகாரம் என்பது அவதாரமல்ல...! ஓர் அதிகாரிக்கு உணர்வூட்டிய பெண் ! கி.மணிவண்ணன் , ஓவியம்: பாரதிராஜா

 வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள்

##~##

அந்தக் குறுகலான அறையில் பகலிலும் மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். புளித்த சட்னியை, இட்லியோடு கட்டிக் கொண்டு பேருந்துக்கு விரைகிறார் அந்த இளைஞர். பயணத்திலும் படிப்பு. ஒரு கிராமத்தில் இறங்கி வாடகை சைக்கிளில் தனது வேளாண்மை அலுவலர் பணியைத் தொடர்கிறார். பின்பு, வருமான வரித்துறையில் பணி. இருந்தாலும்... கண்களில் ஐ.ஏ.எஸ். எழுதி சாதிக்கும் வெறி கனன்று கொண்டிருந்தது.

தமிழ் இலக்கியத்தையும், வேளாண்மையையும் விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கிறார். வழிகாட்ட ஆளில்லை... புத்தகங்களுமில்லை. அலைந்து திரிந்து தகவல்கள் சேகரிக்கிறார். பக்கத்து அறையில் சீட்டுக் கச்சேரி... கீழே டீக்கடையில் பாட்டுக் கச்சேரி. இந்த நெருக்கடி யான சூழலிலும் இரவு பகலாகப் படிக்கிறார். அவருக்குள் இருக்கும் பொறியை ஊதி ஊதி வளர்க்கின்றனர் பெற்றோர். அகில இந்திய அளவில் 15-வது இடம்... தமிழகத்தில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுகிறார்.

மரங்களின் பசுமை படர்ந்து... மேகங்கள் இளைப்பாறிச் செல்லும் மசூரி மலைப்பகுதி. லால்பகதூர் பயிற்சிக் கூடத்தின் சர்தார் படேல் அரங்கம். ஐ.ஏ.எஸ். தேர்ச்சியடைந்து, பயிற்சி பெறும் இளைஞர்களால் நிரம்பியிருந்தது. அவர்களில் ஒருவராக, எதிர்கால கனவுகளுக்கு உயிரூட்டக் காத்திருக்கிறார் அந்தத் தமிழக இளைஞர். ஒரு காலை நேரம். ஒப்பனையில்லா முகத்துடன் நூல் புடவை உடுத்தியிருந்த அந்தப் பெண்மணி பேசத் தொடங்கினார்... கண்களில் தீட்சண்யம் நிரம்பியிருந்தது.

யாதுமாகி நின்றாள்

''இதோ... நர்மதையில் சர்தார் சரோவர் அணையைக் கட்டுகிறது அரசாங்கம். காலம் காலமாக அந்த வனத்திலிருக்கும் பழங்குடியினரை, அவர்கள் வாழவே முடியாத இடத்துக்குத் துரத்துகிறது. பணம் என்பது அவர்களுக்கு வெற்றுக் காகிதம். அதனைக் கொடுத்து விரட்டியடிக்கிறது. அது கரைந்தபின் கடன் வாங்கக் கற்றுக் கொடுக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் அவர்களது வாழ்க்கையை மாற்றி, உரிமையைச் சிதைக்கிறது..!''

- அவர் பேசத் தொடங்கியபோது சருகுகளை மிதிப்பது போன்ற சலசலப்பு.

''அணைகள் இந்தியாவோட கோபுரங்கள். அவை இல்லாம விவசாயம் எப்படி செய்யறது..?'' - கூட்டத்திலிருந்து ஒரு கேள்வி.

''அணை பெரிதாகும்போது பிரச்னைகளும் பெரிதாகும். அதனால் ஏற்படும் இழப்புகளும் அதிகம்!''

- பருத்திப்பூ வெடிப்பது போல வார்த்தைகள் வந்து விழுந்தன. அலட்சியமாகக் கேட்டவர்களும் ஆச்சர்யத்தால் நிமிர்ந்தனர். அவர்களின் இதயம் இளகியது.

''அது மட்டுமா..? கோடிக்கணக்கான உயிரி னங்கள், லட்சக்கணக்கான மரங்கள், பல்லாயிரக்கணக்கான அரிய வகைத் தாவரங்கள்... இப்படி ஒரு பள்ளத்தாக்கைத் தண்ணீரில் சாகடித்து விட்டு... அந்தச் சமாதியின் மேல் வாழும் வாழ்க்கை தேவையா? இயற்கை வளத்தை அழிக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது..?''

வெண்மேகங்கள் உட்புறம் வீசியிருந்த குளிர், அரங்கில் நிரம்பியிருந்தாலும் அந்தப் பெண்மணியின் பேச்சில் அனல் தெறித்தது. உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த அந்த இளைஞரின் கண்களில் ஈரம் கசிந்தது.

'அந்தப் பிரச்னையில இந்தப் பெண்மணிக்கு ஏன் இவ்வளவு அக்கறை..?’

எல்லா வளர்ச்சிகளுக்கு நடுவிலும் இதயத்தைத் தொலைத்துவிட்டது போன்ற அந்நியத் தன்மை... வாழ்க்கையைச் சுட்டெரிக்கிறது. அதனைச் சுட்டிக் காட்டிய அப்பெண்மணியின் பேச்சு... அந்த இளைஞரைப் புரட்டிப் போட்டது.

அந்தப் பெண்மணி... பழங்குடியினரையும், சுற்றுச்சூழலையும் காக்கப் போராடும் உரிமைப் போராளி மேதா பட்கர். அந்த இளைஞர்... வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

அலுவலக அறைக் கதவைத் தட்டியதும்... கதவு திறந்து, ''வாங்க பாஸ்..!'' என்று மிகச் சிநேகமாக வரவேற்றார் இறையன்பு. ''மசூரியில் 1988-ல் நடந்த அந்தப் பயிற்சிதான் என்னோட பரிமாணங்களை பட்டை தீட்ட உதவுச்சு...''

- தேன் கலந்த பச்சைத் தேநீரைக் குடிக்கக் கொடுத்து, மனம் குளிர்ந்து பேசத் தொடங்கினார் இறையன்பு.

''சின்ன வயசுல பார்த்த பல வறிய குடும்பங்களின் ஏழ்மை என்னை ரொம்ப பாதிச்சுது. அதுதான் சமூக அக்கறையை எனக்குள்ள விதைச்சுது. நிர்வாகத்துக்கும், இலக்கியத்துக்கும் பொதுவாகத் தேவைப்படுறது ஈர இதயம்.  'ஒவ்வொரு அரசாங்க கோப்பிலும் ஒரு அபலையின் சோகக் காவியம் நிறைந்திருக்கிறது’ங்கிற நினைப்போடு அணுகுறப்போ அதுல போடுற கையப்பம் கல்வெட்டா நெலைச்சு நிக்குது..!''

இடையில், உதவியாளர் கொண்டு வந்த ஃபைலை முழுவதும் படித்துவிட்டு, அப்போதே கையெழுத்திட்டு அனுப்புகிறார்.

''வாங்க... வெளியில எங்கேயாவது போய் பேசுவோம்..!''

ஒரு நீண்ட பயணத்துக்குப் பின்... கொள்ளிடம் ஆற்றின் அணைக்கரையில் ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்கிறோம். மரங்களோடு பசுமை சூழ்ந்த இடம். தூண்டிலில் மீன் பிடிக்கும் சிறுவர்கள் எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

''நான் உட்பட பத்து பேரை பயிற்சிக்காக தேர்ந்தெடுத்து மேதா பட்கரோட அனுப்புனாங்க. ஒரு மாசம் பயணம். நர்மதை நதிக்கரை பழங்குடியினரோட தங்கினோம். அந்த மக்களோட வாழ்க்கையைப் படிக்கவும், அவங்க இடம் பெயர்வது குறித்து ஆய்வு செய்யறதுக்குமான அந்தப் பயணத்துல... அவரோட இருந்த ஒவ்வொரு நாளும் நிறையத் தெரிஞ்சுகிட்டேன்.

கிராமத்துல வைக்கோல் போர்ல தூங்கினோம். கம்பஞ்சோறும், மக்காச்சோள ரொட்டியும், பருப்புக் கரைசலும் கொடுத்தாங்க. தினமும் ஏழெட்டு மைல்கள் நடப்போம். ஒவ்வொரு ஊருக்கும் உற்சாகமா வரும் மேதா பட்கரை சின்னக் கொழந்தைங்க கூட தீதி... தீதி...னு (அக்கா) அன்பா கூப்பிடுவாங்க. சமையல் செஞ்சு அவரே பாத்திரங்களைக் கழுவி எங்களை வெட்கப்பட வெச்சார். அப்புறம் நாங்களும் சேர்ந்து வேலைகளை செஞ்சோம். ஒரு தடவை டிரான்சிஸ்டர்ல பாட்டு கேட்டுக்கிட்டிருந்தப்போ... ஓடி வந்து அதை ஆஃப் செஞ்சுட்டு, 'பழங்குடியினருக்கு இதெல்லாம் தெரியாது. இந்த மாதிரி மெட்டீரியலிஸ்ட்டிக் வாழ்க்கை முறையை நாம காண்பிக்கக் கூடாது. அது அவங்களோட இயற்கையான வாழ்க்கையை, மனநிலையை சிதைக்கிற மாதிரி ஆயிடும்’னு சொன்னார். அந்த மக்கள் மேல அந்த அளவுக்கு புரிதல் மிக்க அன்பு வெச்சிருந்தார்.''

''அந்தப் பயணத்தில் மேதா பட்கரிடம் நீங்க கற்றுக் கொண்டது..?''

யாதுமாகி நின்றாள்

''எந்தப் பிரச்னைக்கும் இன்னொரு பக்கம் இருக்குங்கறதை உணர்ந்து... அவங்களையும் சந்திச்சு மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கணும். அரசாங்கத்தோட உதவிகள் சிதறாமல் ஏழைகளுக்குக் கெடைக்கணும். அறிவை, அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்கணுங்கறதை புரிஞ்சுக்கிட்டேன்''

ஒரு மல்லிகைக் கொடியைக் கையில் பிடித்துக் கொண்டே தொடர்ந்தார்.

''நான் பணியில இருந்தப்போ... வீடில்லாத மீனவர்களுக்கு அரசு நிதி கொடுத்து அவங்களையே வீடு கட்டிக்க வெச்சோம். சில வருஷத்துக்கப்புறம் அந்த கிராமத்துக்குப் போனேன். குடும்பங்களுக்கு சேமிப்பையும், இளைஞர்களுக்கு விளையாட்டு, கணிப்பொறி, இன்டர்நெட் தேவையையும், குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தையும் சொல்லிட்டு வந்தேன். அவங்களும் அதையெல்லாம் செயல்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. இது என்னோட பணிக்காலத்துல மறக்க முடியாதது. ஒரு அரசு அதிகாரிக்கும் அடித்தட்டு மக்களுக்குமான உறவு எப்படியிருக்கணும்னு எனக்கு உணர்த்தியவர் மேதா பட்கர்.''

அதுபோலவே... காஞ்சிபுரத்தில் கொத்தடிமைகளாக தறியில் வேலை செய்த குழந்தைகளை மீட்டு, நில வொளிப் பள்ளியின் மூலம் கல்வி தந்திருக்கிறார். பிறக் கும் குழந்தைகளில் சிலருக்கு 'இறையன்பு’ என்று பெயர் சூட்டி இன்றும் தங்கள் நன்றியைச் சொல்கிறார்கள் காஞ்சியின் அந்த மக்கள்.

''எனக்குள்ள விரிஞ்சிருந்த எண்ணங்களை இலக்கியமா எழுதணும்னு காத்திருந்த நேரம். அந்த நர்மதை வெளிப்பயண அனுபவம் என்னை ஒரு எழுத்தாளனாக்குச்சு. என்னோட முதல் நாவல் 'ஆத்தங்கரையோரம்’. அந்தக் கதையோட பிரதான நாயகி மேதா பட்கர். சீக்கிரமே நாவலோட ஆங்கில மொழிபெயர்ப்பை அவருக்குக் கொடுப்பேன்... புத்தகத்தோட ராயல்டி பணத்தை நிலவொளி பள்ளிக்கு தரப்போறேன்!''

- நெகிழ்வுடன் இருந்த இறையன்புவை... காற்றில் அசையும் தென்னை ஓலைகளைக் கடந்து சூரியனின் கதிர்கள் தொட்டன.

''ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணினா... உலகத்தின் உச்சத்துல, அதன் கூரையில உட்கார்ந்திருக்கும் மனோபாவம் ஏற்படும். எங்களோட அந்தப் பயணத்துல அதை உடைச்சு தூள் தூளாக்கி, எங்கள சாதாரண மனுஷனாவே வெளியுலகத்துக்கு அனுப்பி வெச்சார் மேதா பட்கர்.''

அழகிய நதியாய் கரைபுரண்டோடுகிறது இறையன்புவின் பயணம். மணல் வெளியாக விரிந்திருந்த கொள்ளிடத்தில் கொஞ்சமாக இருந்த தண்ணீர், ஓரமாக ஒடுங்கி நகர்ந்து கொண்டிருந்தது!

- வருவார்கள்...