Published:Updated:

படுத்தி எடுக்கும் 'எக்ஸாம் ஃபீவர்'...

பட்டென பறக்க சத்தான 'மாத்திரை'கள் !

படுத்தி எடுக்கும் 'எக்ஸாம் ஃபீவர்'...

பட்டென பறக்க சத்தான 'மாத்திரை'கள் !

Published:Updated:

எஸ்.கே.நிலா

படுத்தி எடுக்கும் 'எக்ஸாம் ஃபீவர்'...

நேற்று, இன்று, நாளை என்று... எந்தத் தலைமுறை மாணவர்களும் பரீட்சை நேரத்தில் கடக்க நேரிடும் முக்கிய நெருக்கடி, 'எக்ஸாம் ஃபீவர்’! தேர்வுக் காலம் நெருங்கிவிட்டதால், இறுதி கட்ட முயற்சியில் இருக்கும் மாணவர்களின் பதற்றம் சுமக்கும் மனதை, அவர்களின் கண்கள் நமக்கு காட்டிக் கொடுக்காமல் இல்லை.

##~##

'' 'கறை நல்லது’ என்ற விளம்பர வாசகம்போல ஆக்கபூர்வமான சிந்தனையில், தேர்வுக்கால பயமான இந்த 'எக்ஸாம் ஃபீவரும்’ கூட நல்லதே!'' என்று அதிரடியாக ஆரம்பித்தார் வேலூர் மனநல மருத்துவர் டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன்.

''தேர்வுக்கு முந்தைய சில மாதங்களில் துவங்கி, தேர்வு அறை வரை மாணவர்களை ஒட்டிக்கொள்ளும், 'எக்ஸாம் ஃபீவர்’ என வழங்கப்படும் இந்த 'எக்ஸாம் ஃபியர்’ குறித்த தெளிவான அணுகுமுறையை மாணவர்கள் மட்டுமல்லாது... அவர்களை அரவணைக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்'' என்று வலியுறுத்திய டாக்டர், அதைப் பற்றி விரிவாக பேசினார்.

''சிலர் எல்லா விஷயத்திலும் பதற்றப்படுவார்கள். இது பொதுப்படையான பதற்றம் (Generalised Anxiety).இதுவே ஏதாவது ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு தீவிரமாக சுழன்றடித்தால், அங்கே பதற்றம் என்பது தீவிர பயமாக (Phobia) மாறி விடுகிறது. அது கவனிக்கப்பட வேண்டியது. ஆனால், 'எக்ஸாம் ஃபியர்’ என்பது, அவசியமான அச்சமே! படிப்பு, மேற்படிப்பு, வேலை என்று ஆக்கபூர்வமாக, ஆரோக்கியமாக சிந்திக்கத் தூண்டும் நியாயமான அச்சம் இது. இது, புத்தியைத் தூண்டிவிட்டு, தேர்வுக் காலத்தில் மாணவர்களின் செயல்திறனை அதிகப்படுத்தும். எனவே, அவர்களின் இந்த ஃபீவரை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதுபடுத்தத் தேவையில்லை.

படுத்தி எடுக்கும் 'எக்ஸாம் ஃபீவர்'...

தங்கள் திறமையைப் பதிவு செய்தாக வேண்டிய களமாக 'தேர்வு’ என்ற நிகழ்வு இருப்பதால் 'எக்ஸாம் ஃபியர்’ ஒவ்வொரு மாணவருக்கும் இருந்தே ஆக வேண்டும். அதேசமயம், இந்த அச்சம் அளவை மீறக்கூடாது என்பது முக்கியம். அப்படி மாறினால், அது 'ஃபோபியா’வாக மாறிவிடும். அது பிரச்னை தரக்கூடிய விஷயமாக வடிவெடுத்துவிடும்'' என்று இடைவெளி விட்ட டாக்டர், தொடர்ந்தார்...

''சிலருக்கு புத்தகத்தை திறந்தாலே பயம் வந்து அழுத்தும். தேர்வு நாள் நெருங்க நெருங்க ஏதோ டைம்பாம் மீது அமர்ந்திருப்பவர்கள் «போல நிலை கொள்ளாமல் பரிதவிப்பார்கள். இந்த மிகையான அச்ச உணர்வு கட்டுப்பாடின்றி மீண்டும் மீண்டும் தலை தூக்கும். மருத்துவ வழக்கில், இம்மாதிரி தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட உணர்வில் தம்மையறியாமல் ஆட்படுவதை 'ரூமினேஷன் (Rumination)’ என்பார்கள். இம்மாதிரியான எதிர்மறை நிகழ்வுகள் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். படிக்கவே முடியாமல் போவது, தன்னம்பிக்கை குறைந்து போய் உள்ளுக்குள் குமைவது, பரீட்சை நேரத்தில் வீட்டை விட்டே ஓடுவது என்று ஆரம்பித்து தற்கொலை முயற்சி வரையிலும்கூட இந்த பகுத்தறியாத தேர்வு பயம் மாணவர்களை படுத்தி எடுக்கக் கூடியது'' என்றவர், மாணவர்களுக்கு அந்த ஃபோபியா ஏற்படுவதற்கான சூழல்கள் பற்றிப் பேசினார்...

''இயல்பாகவே, ஆளுமையில் மனப்பதற்றம் இருக்கும் மாணவர்களுக்கு 'எக்ஸாம் ஃபோபியா’ எளிதில் வரும். சிலசமயம் குடும்பத்தார், பள்ளி நிர்வாகம் என வெளியிலிருந்து நிர்ப்பந்தமாக திணிக்கப்படும் அழுத்தமும் கூட ஃபோபியாவை உருவாக்கலாம். பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் நியாயமான கவலைதான். அதேசமயம், இந்தக் கவலையானது நடைமுறை சார்ந்த எதிர்பார்ப்பாக (Realistic Expectation) இருக்க வேண்டும். அதாவது, மாணவர்களின் தகுதி, திறமை இவற்றின் அடிப்படையில் அவர்களுக்கான ஆரோக்கியமான நெருக்கடி தரப்படலாம். மாறாக, ஒரு மாணவனின் இயல்பான திறனை மீறி, தேர்வை ஒட்டி அதிக எதிர்பார்ப்பு திணிக்கப்படும்போது, இருக்கும் திறமையைகூட இந்த ஃபோபியா உறிஞ்சி விடும்'' என்று உணர்த்திய டாக்டர், மாணவர்களை அதில்இருந்து மீட்பதற்கான வழிகளையும் பகிர்ந்தார்...

படுத்தி எடுக்கும் 'எக்ஸாம் ஃபீவர்'...

''ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் எதிர்பார்ப்பை ஃப்ரெண்ட்லியாகவும், பாஸிட்டிவாகவும் மாணவர்களிடம் உணர்த்தினால் ஃபோபியாவுக்கு இடமிருக்காது. ஆனால், 'என் ஆபீஸ் 'கொலீக்’கோட பையனும் இந்த வருஷம் டென்த் எழுதறான். அவனைவிட மார்க் குறைச்சு வாங்கி என் மானத்தை வாங்கின, உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...’ என்று மாணவர்களை பிளாக்மெயில் செய்தால், நிலைமை மோசமாகத்தான் செய்யும். பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு தேர்வு குறித்த மிகையான அச்ச உணர்வு இருப்பதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் உழல்வார்கள். எனவே, குடும்பத்தார் பள்ளி ஆசிரியர்கள்தான் அந்த மாணவர்களை ஊன்றி கவனித்து ஆரோக்கிய அச்சம், தீவிர 'ஃபோபியா’வாக உருவெடுக்காமல் தடுக்க வேண்டும்'' என்று அழகாக வழிகாட்டிய டாக்டர் ஹர்ஷவர்தன், மாணவர்கள் தரப்புக்கான சில ஆலோசனைகளையும் வழங்கினார், இப்படி...

''மாணவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடம் சார்ந்த, தேர்வு சார்ந்த நடவடிக்கையிலும் திட்டமிட்ட 'ஷெட்யூல்’-ஐ வைத்துக் கொண்டால் தேர்வுக்கால ஃபோபியா அவர்களின் திசைக்கு திரும்பாது. மனப் பதற்றம், மன அழுத்தம், மிகையான அச்சம் போன்றவை தேர்வையட்டி தலை தூக்கினால்... பள்ளியில் இருக்கும் ஆலோசகர் அல்லது பிடித்த ஆசிரியரிடம் யோசனை கேட்கலாம். பெற்றோரும் மாணவர்களை மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது நல்லது. எப்போதுமே எந்தவொரு உணர்வும் நம்மை பாஸிட்டிவ்வாக செயலாற்றத் தூண்டினால் அதைப்பற்றிய கவலை வேண்டாம் என்ற எதிர்கொள்ளல் மாணவர்களுக்கு வேண்டும். மேலும், மூச்சுப்பயிற்சி, உடல் தளர்வுப்பயிற்சி, இரவில் ஆழ்ந்த உறக்கம் போன்றவை மாணவர்களை தேர்வுக்கால மன நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும்!''

உங்கள் வீட்டுக் குழந்தைகள் 'ஃபியர்’ல் இருக்கிறார்களா... 'ஃபோபியா’வில் இருக்கிறார்களா... கவனித்து கரை சேருங்கள்!

படங்கள்: கே.ராஜசேகரன், தி.விஜய்

'தோல்விகள் துவளுவதற்கல்ல!

படுத்தி எடுக்கும் 'எக்ஸாம் ஃபீவர்'...

' பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தினத்தன்று மாணவப் பிஞ்சுகளின் தற்கொலைப் புள்ளிவிவரம் வருடா வருடம் எகிறுவதுதான் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பீதிக்குள்ளாக்கிக் கொண்டுஇருக்கிறது.

''அறிவு, திறமை இவற்றை பரிசோதிக்கும் வாய்ப்பே மாணவர்களின் தேர்வுக் காலம். ஆனால்... பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகமே தேர்வுச் சூழலை ஏதோ வாழ்வா, சாவா யுத்தம் போல மாணவர்களிடம் உருவாக்குவதுதான் இதற்கு முக்கிய காரணம்'' என்கிறார் திருச்சியிலிருக்கும் 'நம்பிக்கை’ தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனை மையத்தின் மருத்துவ உளவியல் நிபுணர் டி.ரந்தீப் ராஜ்குமார்.

''எல்லோரையும்விட தங்கள் குழந்தை பெஸ்ட்டாக வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதெல்லாம் பெற்றோரின் குறைசொல்ல முடியாத எதிர்பார்ப்புகளே. ஆனால்... மனப் பதற்றம், மன இறுக்கம், ஒப்பீடு, அவமானம் என்று மாணவர்களின் வயதுக்கு சற்றும் பொருந்தாத இந்த இம்சைகளையெல்லாம் அவர்களுக்கு கொடுத்து, பலவகையிலும் படுத்தி எடுப்பதே... அவர்கள் 'தற்கொலை முயற்சி’ என்ற உச்சம் வரை போகக் காரணமாகிறது. இந்த மையத்தின் ஹாட்லைன் (98424-22121) தொடர்புக்கு வரும் 50 சதவிகித அழைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடையவை'' என்று கவலையுடன் சொல்லும் ரந்தீப் ராஜ்குமார்,

''அடிக்கடி சோர்வடையும் மாணவர்கள், முடிவை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள், தூக்கம் குறைவாக இருப்பவர்கள், சுற்றியிருக்கும் சமூகத்தினரிடம் ஒட்டாது விலகியிருப்பவர்கள், பேச்சில் அவ்வப்போது விரக்தி காட்டுபவர்கள், சிறு சறுக்கலுக்கும் தாங்க முடியாது பதறுபவர்கள்... இந்த ரீதியிலான மாணவர்கள் எளிதில் தவறான முடிவுக்கு தாவும் விபரீத வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு தேர்வுக்கால கண்காணிப்பையும், அதைவிட அதிகமான அரவணைப்பையும் குடும்பத்தார் அளித்தாக வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.

தொடர்ந்து பேசி ரந்தீப், ''பாஸ் ஆகவேண்டும் என்று போராடுபவர்கள், உச்ச மதிப்பெண்ணுக்காக உழைப்பை கொட்டியவர்கள்... இந்த இரண்டு ரக மாணவர்களையும் தேர்வு முடிவுகளோ அல்லது அது குறித்த பயங்களோ அதிகம் பாதிக்கக் கூடும். உடனடித் தேர்வு, ரீ டோட்டலிங், ரீ வேல்யூவேஷன் என ஏராளமான உபாயங்கள் இருக்கின்றன இத்தகையோரை சமாதானப்படுத்த. இவற்றையெல்லாம் எடுத்துச்சொல்லி தேர்வு முடிவுகள் எதுவானாலும் அதை ஒரு நல்ல அனுபவமாக ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமை. ஏனெனில், வெற்றிகள் தரும் பரிசுகளைவிட தோல்விகள் தரும் படிப்பினைகள் மதிப்பு மிக்கவை!'' என்றார் அக்கறையுடன்!