Published:Updated:

'ஆடுகளத்தில் மட்டுமல்ல... தேர்வுகளத்திலும் நாங்க கில்லி !'

பாதை காட்டும் ஸ்போர்ட்ஸ் கேர்ள்ஸ்

'ஆடுகளத்தில் மட்டுமல்ல... தேர்வுகளத்திலும் நாங்க கில்லி !'

பாதை காட்டும் ஸ்போர்ட்ஸ் கேர்ள்ஸ்

Published:Updated:

மோ.கிஷோர்குமார்

 பரீட்சை திருநாளை முன்னிட்டு, டி.வி., ஃப்ரெண்ட்ஸ், சாட்டிங் எல்லாம் துறந்து விரதமிருந்து, ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரமெல்லாம்கூட படித்துக் கொண்டுஇருக்கிறார்கள் மாணவர்கள். விதிவிலக்காக, இப்போதும் 'விளையாடிக் கொண்டே’ இருக்கிறார்கள் 'ஸ்போர்ட்ஸ் கேர்ள்ஸ்’! கிளாஸ் ஆரம்பிப்பதற்கு முன்பே பள்ளிக்குச் சென்று கிரவுண்டில் பிராக்டீஸ் செய்து, வகுப்புகள் முடிந்த பின்னும் மைதானத்தில் கிடந்து எழுந்து, பாடங்களை விட்டுவிடக் கூடாதே என்ற பயத்தையும் சுமந்து, 'பொதுத் தேர்வா, ஸ்டேட் லெவல் மேட்ச்சுக்கு கோச்சிங்கா...?’ என மதில் மேல் பூனையாக இருக்கும் விளையாட்டு வீராங்கனை மாணவிகளுக்கு... இரண்டிலும் ஜெயிக்க வேண்டிய கட்டாயம்!

அவர்களுக்கெல்லாம், 'கவலையே வேண்டாம்...’ என்று படிப்பையும், ஸ்போர்ட்ஸையும் பேலன்ஸ் செய்யும் வித்தை சொல்ல வருகிறார்கள், படிப்பிலும், விளையாட்டிலும் ஸ்கோர் செய்திருக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 'ஸ்போர்ட்ஸ் சீனியர்ஸ்’!

'ஆடுகளத்தில் மட்டுமல்ல... தேர்வுகளத்திலும் நாங்க கில்லி !'
##~##

தடகளம், பேஸ்கட் பால், ஃபுட்பால் பிளேயரான ஆர்த்தி, ஸ்ரீவில்லிபுதூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாணவி.

''ஸ்கூல் டேஸ்ல அடுத்தடுத்து டோர்னமென்ட்களுக்கு போயிட்டே இருந்ததால், அப்பப்போதான் கிளாஸுக்குப் போவேன். எப்பவுமே கிரவுண்ட்லதான் கிடப்பேன். டென்த் வந்தப்போ, 'இத்தனை நாள் ஸ்போர்ட்ஸ்னு இருந்தது சரி... இனி படிப்பை பாரு’னு எல்லாரும் அட்வைஸ் செஞ்சாங்க. ஆனா, ஸ்போர்ட்ஸை விடறதுக்கு எனக்கு மனசில்ல. ரெண்டையும் எப்படி பேலன்ஸ் பண்றதுனு வழிகளைத் தேடிக் கண்டுபிடிச்சு, அதையெல்லாம் செயல்படுத்தினேன்.

'ஆடுகளத்தில் மட்டுமல்ல... தேர்வுகளத்திலும் நாங்க கில்லி !'

டோர்னமென்ட் நாட்கள்ல மட்டும் பயிற்சிக்கான நேரத்தை அதிகப்படுத்திகிட்டு, மத்த நாட்கள்ல வார்ம் அப், ஃபிட்னெஸுக்கான பயிற்சிகளை மட்டும் எடுத்துக்கிட்டு, ஸ்டடி ஹவர்ஸை அதிகமாக்கினேன். டோர்னமென்ட் இருக்குனு தெரிஞ்சா, பாடங்களை முன்கூட்டியே படிச்சு வெச்சேன். போட்டிகளுக்கு போற நாட்கள்ல எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸ் நோட்ஸ் கொடுத்து ஹெல்ப் பண்ணினாங்க. கூடுதலா, புரியாததை அவங்கள சொல்லித் தரச் சொல்லி கேட்டேன். அப்படியும் கிளியர் ஆகலனா, தயங்காம டீச்சர்ஸ்கிட்ட போய் கேட்டேன்.

ஸ்போர்ட்ஸ், படிப்புனு அப்போ நிறைய எனர்ஜி தேவைப்பட்டதால, நல்ல சத்தான சாப்பாடா சாப்பிட்டேன். வெற்றிகரமா டென்த்ல 80% மார்க் ஸ்கோர் பண்ணினேன். அதே வருஷம் என் ஸ்போர்ட்ஸ் புரொஃபைல்ல சேர்ந்த மெடல்களும் பல. ப்ளஸ் டூவுலயும் இதே ஃபார்முலா. 72% மார்க் + ஸ்போர்ட்ஸ் மெடல்ஸ்!'' என்றார் பெருமையுடன் ஆர்த்தி.  

இவருடைய இன்றைய கிளாஸ்மேட்டான சரண்யா, பள்ளி நாட்களில் தடகள சாம்பியன். ''நைன்த் வரைக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு அட்ஜெஸ்ட் பண்ணி, ரீ டெஸ்ட் வெச்சுனு ஸ்கூல்ல நம்மள கரையேத்துவாங்க. ஆனா, டென்த், ப்ளஸ் டூ-ல ஸ்போர்ட்ஸ் கேர்ள்ஸுக்கு கொஞ்சம் தடுமாற்றம்தான். இருந்தாலும், பிளான் பண்ணிக்கிட்டா... சுலபமா கடந்துடலாம்'' என்ற சரண்யா,

''கிளாஸ்ல கவனமா இருந்து, பாடங்களை புரிஞ்சுக்கிட்டா... எக்ஸாமுக்கு முந்தின நாள் புக்கை எடுத்தாலும் ஈஸியா பிக்-அப் பண்ணிடலாம். என்னதான் பிராக்டீஸ்னு, போட்டிகள்னு பிஸியா இருந்தாலும், கிளாஸ் டெஸ்ட்ல இருந்து ரிவிஷன் டெஸ்ட் வரைக்கும் எந்த டெஸ்டையும் மேக்ஸிமம் மிஸ் பண்ணக் கூடாது. ஒருவேளை அப்படி நடந்தாலும், அந்த கொஸ்டீன் பேப்பர்களை ஃப்ரெண்ட்ஸ்கிட்ட வாங்கி, நாமே வீட்டுல எழுதிப் பார்க்கணும். என்னதான் பி.இ.டி. டீச்சருக்கு நாம 'பெட்’னு இருந்தாலும், மத்த டீச்சர்ஸ்கிட்டயும் நல்ல பெயர் வாங்கணும். மாறா, 'ஐயையோ... இன்னிக்கு தமிழ் மிஸ் டெஸ்ட் சொல்லியிருக்காங்க. நான் படிக்கல. அதனால, 'பிராக்டீஸ்’னு சொல்லிட்டு கிரவுண்டுக்கு போகப் போறேன்’னு 'ஸ்போர்ட்ஸ் கேர்ள்’ங்கற சலுகையை தவறா பயன்படுத்தக் கூடாது!'' என்றார் ஸ்ரிக்ட்டாக!

'ஆடுகளத்தில் மட்டுமல்ல... தேர்வுகளத்திலும் நாங்க கில்லி !'

தட்டு எறிதல், குண்டு எறிதல், கபடி என்று தன் ஸ்கூல் கிரவுண்டில் கில்லியாக இருந்தவர், இப்போது மதுரை, பாத்திமா கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் கண்ணாத்தாள். ''சிவகங்கை மாவட்டத்துல இருக்கற ஸ்கூல்லதான் படிச்சேன். ஷாட்-புட்லயும், டிஸ்கஸ்லயும் ஸ்டேல் லெவல்ல தங்கம் வாங்கியிருக்கேன். மும்பையில நடந்த சீனியர் நேஷனல் கபடி போட்டி, ஹைதராபாத்ல நடந்த ஜூனியர் நேஷனல் கபடி போட்டினு காம்படிஷன்களுக்காக நிறைய டிராவல் பண்ண வேண்டியது இருக்கும். அப்போ எல்லாம் ஏதோ 'ஹாலிடேஸ்’ல இருக்கோம் நினைக்காம, கையோட புக்ஸையும் எடுத்துட்டுப் போய்... பிராக்டீஸ், போட்டிகள் தவிர்த்த நேரங்கள்ல, டிராவல்ல எல்லாம் படிச்சுட்டேதான் இருப்பேன். 'இந்த நேரத்துல நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஸ்கூல்ல கிளாஸ்ல உட்கார்ந்திருப்பாங்க’னு எனக்கு நானே சொல்லிட்டு, கவனத்தை குவிச்சு படிப்பேன். அதனால, பாடங்கள் எதுவும் மிஸ் ஆகாம பார்த்துப்பேன்! ப்ளஸ் டூ பப்ளிக் எக்ஸாமுக்கு பதினஞ்சு நாளுக்கு முன்னாடி வரைக்கும் ஸ்போர்ட்ஸ் பிராக்டீஸ், டோர்னமென்ட்னுதான் இருந்தேன். இருந்தாலும், ஏற்கெனவே ரிவிஷன் முடிச்சு வெச்சிருந்ததால, பிக்-அப் பண்ணி வந்துட்டேன்!'' என்று உற்சாகமாக சொல்லும் கண்ணாத்தாள், வெயிட் லிஃப்ட்டிங் சாம்பியனும்கூட!

'ஆடுகளத்தில் மட்டுமல்ல... தேர்வுகளத்திலும் நாங்க கில்லி !'

''நான் படிச்சது வாடிப்பட்டி அரசுப் பள்ளியில. தடை தாண்டும் போட்டியில நான் ஸ்டேட் லெவல்ல கோல்ட் அடிச்சது, என்னோட டென்த் எக்ஸாமுக்கு சில மாதங்களுக்கு முன்னால!'' என்று அதிரடியாக ஆரம்பித்தார் மதுரை, பாத்திமா கல்லூரியில் பி.பி.ஏ., இரண்டாமாண்டு படிக்கும் திவ்யா.

''டைம் இல்லைனு சொல்ற கான்செப்ட்ல எனக்கு உடன்பாடில்ல. நம்மளோட எல்லா வேலைகளையும் செய்யறதுக்கான நேரம் நமக்கு இருக்கு. அதை நாம ஒழுங்கா திட்டமிடறதில்ல, பயன்படுத்திக்கறதில்ல. மாறா, வீணாக்கறோம். நான் டென்த், ட்வெல்த் படிச்சப்போ படிப்பு, ஸ்போர்ட்ஸ்னு ரெண்டுக்குமே ஒதுக்க எனக்கு நேரம் போதுமான அளவு இருந்தது.

என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் படிக்கற நேரத்துல நானும் படிச்சேன். அவங்க டி.வி., அரட்டை, கதை புக்ஸ்னு செலவழிச்ச நேரங்களை பிராக்டீஸுக்காக நான் செலவழிச்சேன். அவ்ளோதான்! சொல்லப்போனா, அவங்களோட பொழுதுபோக்குகளைவிட, என்னோட ஸ்போர்ட்ஸ் என்னை உடலளவுலயும், மனசளவுலயும் அழகா ரிலாக்ஸ் ஆக்குச்சு!'' என்று சிம்ப்பிளாக சொல்லும் திவ்யா, இப்போது கல்லூரியிலும் தடை தாண்டும் போட்டியில் பல்கலைக்கழக அளவில் ரெக்கார்ட் வைத்துள்ளார்!

ஜூனியர்ஸ்... ஃபாலோ!

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியம்