Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

Published:Updated:

வாசகிகள் பக்கம்

 ஒவ்வொன்றுக்கும் பரிசு :ரூ.150

சாமி - அம்பாள் ரிலேஷன்ஷிப்!

குட்டீஸ் குறும்பு !

அமெரிக்காவில் இருக்கும் என் பெண்ணும், மாப்பிள்ளையும் தங்களின் மகளுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார்கள். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு... உறவுகள், நண்பர்கள் அனைவரும் கதை பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது என் மாப்பிள்ளை நாலு வயதான அவருடைய அண்ணன் மகளிடம் திருப்பதி வெங்கடாஜலபதி போட்டோவைக் காண்பித்து, ''இது யாரு குட்டிம்மா?'' என்று கேட்க... ''பாலாஜி சாமி'' என்றாள் அவள் சட்டென. அவளைத் திணறடிக்க, ''சரி, சாமி பக்கத்துல இருக்கற இந்த அம்பாள் யாரு சொல்லு பார்ப்போம்...'' என்றார். அந்த சுட்டி வாண்டு அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மகளைக் காட்டி, ''சித்தப்பா... சித்தி உங்களுக்கு எப்படி ரிலேட்டிவ் ஆனாங்களோ... அப்படித்தான் சாமிக்கும் இந்த அம்பாள் ரிலேடிவ்!'' என்று அடித்தாள் ஒரு சிக்ஸர்... அத்தனை கூட்டமும் அசந்துதான் போனது!

- சுந்தரி, ஹைதராபாத்

'எட்டயபுரத்துல எத்தனை பேரு பொறக்கறாங்க!’

குட்டீஸ் குறும்பு !

எங்கள் பக்கத்து வீட்டு குட்டி வால் பையன், படு ஷார்ப். ஒரு நாள் என் வீட்டுக்கு தோழிகள் வந்திருந்தனர். அப்போது இவனும் வீட்டுக்குள் நுழைந்தான். ''அஞ்சு வயசுதான் ஆகுது. என்ன கேள்வி கேட்டா லும் பதில் சொல்லுவான்டி... ரொம்ப துறுதுறு!'' என்றெல்லாம் அவனைப் பற்றிப் பெருமையாக சொன்னேன். உடனே என் தோழி ஒருத்தி, ''உங்கிட்ட ஒரு கேள்வி கேப்பேன். கரெக்டா பதில் சொல்றியானு பாப்போம்'' என்று சொல்லி, ''எட்டயபுரத்துல பிறந்தது யார்னு சொல்லு பார்க்கலாம்...'' என்றாள். அந்த வாய்சொல் வீரனோ, ''ஆன்ட்டி, எட்டயபுரம் ஆஸ்பிட்டல்ல தினமும் எத்தனை குழந்தைங்க பிறக்கறாங்க. அவங்க எல்லாரோட பேரும் எனக்கு எப்படித் தெரியும்?!'' என்று கேட்டபோது, 'அப்பா... அப்பப்பா!’ என்று சொல்லி அதிசயத்து சிரித்தோம்!

- எம்.சுபா முராரி, சேலம்

நானும் சோளா புலி...நீயும் சோளா புலி!

குட்டீஸ் குறும்பு !

 யு.கே.ஜி. படிக்கும் என் பேத்தி வர்ஷினி, தினமும் ஸ்கூலுக்கு வேனில் செல்கிறாள். அவள் கண்ணில் பவர் பிரச்னை உள்ளதால், டாக்டர் சொன்னபடி கண்ணாடி போட்டிருக்கிறாள். வேனில் அவளுடன் வரும் ஒரு வால் பையன், இந்தக் கண்ணாடிக்காக அவளைக் கிண்டலடித்திருக்கிறான். ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வந்ததும் முகத்தை ரொம்ப சீரியஸாக வைத்துக் கொண்டு, ''அம்மா, வேன்ல வர்ற ஒரு பையன், என்னைப் பாத்து 'சோளா புலி, சோளா புலி’னு கிண்டல் பண்றாம்மா'' என்று தன் அம்மாவிடம் சொன்னாள்.

முதலில் ஒன்றும் புரியாமல் தலைசொறிந்த என் மகள், 'சோடாபுட்டி' என்பதைத்தான் இவள் 'சோளா புலி' என்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள். சிரிப்பு பொங்கி வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு, '' 'இப்படியே சொல்லிட்டு இருந்தா... சீக்கிரமே நீயும் சோளா புலி ஆயிடுவே’னு திருப்பிச் சொல்லு'' என்று சொல்லி வைத்தாள்.

மறுநாளே... ''அம்மா நீ சொன்ன மாதிரியே, நீயும் 'சோளா புலி’ ஆகப்போறேனு சொன்னேன். அவன் பயந்து வாயை மூடிக்கிட்டான்மா...'' என்று அவள் சொன்னாள். இப்போது வாய்விட்டு குபீர் என்று சிரித்தோம். இதில் அவளும் சேர்ந்து கொண்டாள்!

- ஜெயலெட்சுமி சேஷாத்ரி, கும்பகோணம்

ஓவியங்கள் : ஹரன்

 உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம். அனுப்ப வேண்டிய முகவரி: 'குட்டீஸ் குறும்பு,’ அவள் விகடன், 757,அண்ணாசாலை, சென்னை-600 002