Published:Updated:

கூடவே ஒரு குற்றவாளி!

குடும்பத்தையே குலைக்கப் பார்த்த 'பிரவுசிங்'!

கூடவே ஒரு குற்றவாளி!

குடும்பத்தையே குலைக்கப் பார்த்த 'பிரவுசிங்'!

Published:Updated:

 ஆபத்துகளை அடையாளம் காட்டும் தொடர்
ஓவியம்: அரஸ்

''நம் செல்போன் உரையாடல்களை மற்றவர்களால் ஒட்டுக் கேட்க முடியுமா? நாம் அனுப்பும் எஸ்.எம்.எஸ்-ஐ மற்றவர்களால் படிக்க முடியுமா?''

- இப்படியரு பின்புலத்தில் எங்களிடம் வந்தது ஒரு வழக்கு.

திருச்சி அருகே ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு அழகான இளம் மனைவி. நான்கு வயதில் மகன். அசாம் மாநில காடுகளில் கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வரும் அவர்... மனைவி, மகனை தன் அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றிருந்தார்.

கூடவே ஒரு குற்றவாளி!

ஒரு நாள் தன் தாயிடமிருந்து அந்த நபருக்கு வந்தது போன். ''ராத்திரி பத்து மணியானா போதும்... உன் பொண்டாட்டி தனியா போய், யார்கிட்டயோ செல்போன்ல மணிக்கணக்கா பேசிட்டேயிருக்காப்பா. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு'' என்று அம்மா புலம்ப, அதிர்ந்தார் அவர். அதற்காக மனைவியை சந்தேகப்படக் கூடாது என்று பொறுமை காத்தவர், தான் ஊருக்குத் திரும்பியபோது மனைவியின் மொபைலில் இருந்து அடிக்கடி பேசப்பட்ட அந்த எண்ணை தேடி எடுத்தார். மனைவியின் போனில் இருந்தே டயல் செய்தார். ''ஹலோ...'' என்றது கணீர் ஆண் குரல். அதிர்ந்து போனை துண்டித்தார்.

இரவு தன் மனைவியிடம், ''உன் போன்ல இருந்து இந்த நம்பருக்கு நிறைய கால்ஸ் போயிருக்கே. போன் பண்ணிப் பார்த்தா யாரோ ஒரு ஆண் பேசறாரு. யாரும்மா இது..?'' என்று நாசூக்காகக் கேட்க, ''அதுவா... அவர், என்னோட ஒண்ணுவிட்ட அண்ணன்'' என்றிருக்கிறார் கூலாக. தன் கணவர் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார் என்பதுகூட தெரியவில்லை அவருக்கு.

இன்னொரு பக்கம் கணவருக்கு நிம்மதி தொலைந்தது. 'அண்ணனைப் போயி நாம சந்தேகப்படலாமா? ஆனா, அண்ணன்கிட்ட ஏன் தனியா நைட்டெல்லாம் பேசறா... அவன் நிஜமாவே இவளோட அண்ணன்தானானு இவ வீட்டுல விசாரிக்கலாமா, விசாரிச்சா விஷயம் வெளிய தெரிஞ்சுடாதா’ என்றெல்லாம் குழம்பித் தவித்தவர்... இறுதியாக எங்களிடம் வந்தார். ''என் மனைவிகிட்ட பேசறது நிஜமாவே அவளோட அண்ணன்தானா? உங்களால விவரங்களைத் திரட்டித் தர முடியுமா?'' என்று பரிதாபமாகக் கேட்டார்.

சமீபத்தில் வெளிநாட்டில் ஒரு பவர்ஃபுல் ரகசிய மென்பொருளை (Spy software) கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த மென்பொருளை ஒருவர் உபயோகிக்கும் செல்போனில் டவுன்லோட் செய்துவிட்டால், செல்போன் மூலம் நடக்கும் அத்தனை உரையாடல்களும், எஸ்.எம்.எஸ்-களும் குறிப்பிட்ட கம்ப்யூட்டருக்கு வந்து விடும். இந்த ஆயுதத்தை சாதாரண வழக்குகளில் நாங்கள் உபயோகிப்பதில்லை. இதற்கான விலை மிக அதிகம் என்பதோடு, இதை உபயோகிப்பது சட்டப்படி குற்றம். ஆனால், அந்த நபரின் சந்தேகத்தை தீர்ப்பதற்கு வேறு வழிஇருப்பதாகவும் தெரியாத நிலையில், இந்த மென்பொருள் ஆயுதத்தை உபயோகிப்பது என்று தீர்மானித்தோம். மற்றவர்கள் செல்போனை ஒட்டுக்கேட்டால்தானே குற்றம்? அதுவே நமது போனாக இருந்தால் அது குற்றமாகாது என்ற அடிப்படையில், உரிய அரசுத்துறையின் அனுமதியோடு இதில் இறங்கினோம். புது மொபைல், சிம்கார்டை அந்த நபர் பெயரிலேயே வாங்கச் செய்து, அந்த ரகசிய மென்பொருளையும் அதில் டவுன்லோட் செய்து, மனைவிக்கு பரிசாகக் கொடுக்கச் சொன்னோம்.

##~##

ஆரம்பமானது கண்காணிப்பு. அந்த 'ஒன்றுவிட்ட அண்ணனிடம்' இவர் நடத்திய செல்போன் உரையாடல்கள், இருவரும் பரிமாறிக்கொண்ட எஸ்.எம்.எஸ்-கள் அனைத்தும் எங்களின் கம்ப்யூட்டரில் பதிவாகத் தொடங்கின. அவை எங்களுக்கு வெளிச்சப்படுத்தியது இதுதான்...

கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஒரு பிரவுசிங் சென்டருக்கு அந்தப் பெண் செல்ல, அந்த சென்டரை நடத்துபவன் கணவனைப் பிரிந்திருக்கும் அவளின் தனிமையைப் புரிந்துகொண்டு வலை விரிக்க... சிக்கிவிட்டார். தினமும் போனில் கொஞ்சிப் பேசுவதும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதுமாக இருந்த பழக்கம், ''நாம் வெளியே செல்லலாம்'' என்று அவன் அழைக்க, இவள் தயங்கிக் கொண்டிருக்கும் வேளையில்தான் நம் 'டேப் படலம்’ குறுக்கிட்டிருக்கிறது.

செல்போன் உரையாடல் மற்றும் எஸ்.எம்.எஸ்-களை அந்தப் பெண்ணின் கணவரிடம் கொடுத்தோம். அவர் விம்மி வெடித்ததைப் பார்த்தபோது, தன் மனைவி மீது அவர் கொண்டிருந்த அதீத காதல் புரிந்தது. ''என் மனைவி, குழந்தைக்காகத்தானே ராப்பகலா அலைஞ்சு சம்பாதிச்சிட்டிருக்கேன். எனக்குத் துரோகம் செய்ய அவளுக்கு எப்படி மனசு வந்துச்சு? இந்த ஆதாரங்கள வெச்சு எனக்கு அவகிட்ட இருந்து விவாகரத்து வாங்கிக் கொடுங்க...'' என்றார் துரோகத்தின் வலி தாங்காமல்.

''இப்படி ஆதாரங்களை சேகரிச்சு தர்றது உண்மையைத் தெரிஞ்சுக்கதானே தவிர, யாரோட வாழ்க்கையையும் கெடுக்கறதுக்கு இல்ல. பணம் சம்பாதிக்கறதை பெருசா நினைச்ச நீங்க, மனைவியோட தனிமையை நினைச்சுப் பார்த்தீங்களா? உங்க மனைவி இன்னும் படி தாண்டல. உடனே ஊருக்குப் போய் நிலைமையை சரி செய்யுங்க. தப்பு செஞ்சவங்க அந்த தவறை உணரணும். அதனால, இந்த சி.டி-ய உங்க மனைவிகிட்ட போட்டுக் காட்டி, 'இதுக்கு அப்புறமும் நான் உனக்காக இருக்கேன்’னு உங்க அன்பை அவங்களுக்குப் புரிய வைங்க'' என்று அனுப்பி வைத்தோம். அதன்படியே அவர் செய்ய... குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி, கணவரின் காலடியில் விழுந்தார் மனைவி. இப்போது அந்த நபர் சொந்த ஊரிலேயே தொழிலைத் தொடங்க, கொண்டாட்டம் குதூகலம் என்று அந்தக் குடும்பத்தில் சந்தோஷ தாண்டவம்தான்!

அந்தப் பெண், கோடிக்கணக்கான ரூபாய்கள் டர்ன் ஓவர் செய்யும் கம்பெனிக்கு உரிமையாளர். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் பணிகளை இங்கே செய்து கொடுக்கும் அந்தக் கம்பெனியில் வேலை பார்ப்பது... முழுக்க முழுக்க ஆண்களே! 'ஒரு பெண் நமக்குத் தலைவியா...?' என்கிற ஈகோ சிலரிடம் எட்டிப் பார்க்க, ஆரம்பமானது... ஆபத்து!

- திகில் பரவும்...
இர.வரதராஜன்