Published:Updated:

வேலு பேசறேன் தாயி!

வயசு தொண்ணூத்தி ஏழு... மனசு இருபத்தியேழு! ஓவியம்: கண்ணா

பிரீமியம் ஸ்டோரி

வடிவேலு

நகைச்சுவை புயலின் நவரச தொடர்

##~##

பரம்பரையா பானை சட்டித் தொழில் செய்ற ஆட்களைப் பாக்க, நாலஞ்சு மாசத்துக்கு முன்ன போயிருந்தேன். மண்ணும் மனசுமா அவுக வாழுற வாழ்க்கை இருக்கே... அடேங்கப்பா. தண்ணி குடிக்கிற கொவள தொடங்கி... தலையில சொமக்குற கொடம் வரைக்கும் மண்ணப் பெனைஞ்சு அவங்க பண்ற மாயாஜாலம்... பாத்துக்கிட்டே இருக்கலாம். வீட்டுப் பொழங்குதலுக்கு மட்டுமில்லாம, கடம், நாதஸ்வரம்னு வாத்தியக் கருவிகளையும் மண்ணாலேயே செஞ்சு அந்த சனங்க அசத்திப்புட்டாக அசத்தி.

சக்கரத்த சுத்திவிட்டு மண்ணப் புடிக்கிற பக்குவத்த ஒரு மணி நேரத்துக்கும் மேல பக்கத்துலேயே ஒக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன். ஓரளவுக்கு ஐடியா புடிபட்டு நான் போயி மண்ணப் புடிச்சா, சக்கரம் ஒருபக்கம், நா ஒருபக்கம்னு செதறி, ஒடைஞ்சுபோன பூசணி மாதிரி ஏதோ ஒண்ணு உருவாச்சு.

''வெறுமனே பாத்துப் பண்ற பழக்கம் இல்ல வடிவேலு... மொதல்ல இந்த மண்ணோட நல்லா பொழங்கணும். இந்த மண்ணுக்கும் நம்ம கைக்கும் ஒரு பந்தம் உருவாகணும். நம்ம பரம்பர சாமிகள மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு சக்கரத்த சுத்திவுட்டா, நாம நெனைக்கிற பாத்திரம் பூ மாதிரி வரும்''னு ஒரு பாட்டி எங்கையப் புடிச்சுப் பக்குவம் பழகிக் கொடுத்துச்சு. எப்புடியும் எழுவது வயசுக்கு மேல இருக்கும். அந்த வயசுல எல்லாம் நம்மளால எந்திரிச்சு நிக்க முடியுமானுகூடத் தோணல.

''இத்தன வயசுலயும் எப்புடி பாட்டி பானை செய்யுறீக?''னு ஆச்சர்யமா கேட்டேன். எங்கையப் புடிச்சுப் பரபரனு ஒரு குடிசைய நோக்கி இழுத்துக்கிட்டுப் போச்சு. ''ஏ பார்வதி... வெளியே வாத்தா... ஒன்னைய பாக்க யாரு வந்திருக்கா பாரு!''னு பாட்டி சத்தம் போடுது.

வேலு பேசறேன் தாயி!

'யார்றா இந்தப் பார்வதி?'னு மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு நின்னேன். கையில குச்சி இல்ல... தொணைக்கு ஆளும் இல்ல... ஒரு வயசான பாட்டி குடிசைக்குள்ள இருந்து வெளியே வருது.

''யாருப்பு நீயி... அசப்புல வடிவேலு மாதிரியே இருக்கியே!''னு போட்டுச்சுப் பாருங்க ஒரு போடு! ''என்னோட வயசுக்கு ஆச்சர்யப்பட்டியே அப்பு... இந்தப் பார்வதிக்கு வயசு எத்தன தெரியுமா... தொண்ணுத்தி ஏழு... ஆனா.... மனசு இருபத்தி ஏழு! கண்ணு கொறையில்ல... காலு கொறையில்ல... தனி ஆளா சமைக்குது... நல்லது கெட்டது பாக்குது...''னு பாட்டி சொல்லச் சொல்ல எனக்கு அட்டாக் வராததுதேன் பாக்கி.

''அறுவது, எழுவது வயசுக்குள்ளேயே இன்னிக்கு இருக்குற சனங்க எல்லாம் கண்ண மூடிடுதுக. நா அப்புடி இல்ல. நூறத் தாண்டாம போமாட்டேன். இத்தனைக்கும் நாக்கை கட்டுப்படுத்தி வாழல. நெனச்சத சாப்புடுறேன். மண்ணுல வெளையிறதெல்லாமே இந்த வயித்துக்கு வஞ்சம் பண்ணாததுதேன். நாமதேன், 'அது வாயு, இது பித்தம்’னு பிரிச்சுப் பாக்குறோம். தேங்காய அதிகஞ் சேத்துக்கிட்டா கொழுப்புதேன். ஆனா, அந்தக் கொழுப்ப கரைக்கிற சக்தி... தேங்காப்பூவோட சக்கைக்கு இருக்கு. எதையும் ஒண்ணுமண்ணா சேத்துக் கொழைச்சு அடிச்சோம்னா ஒடம்புக்கு எந்தப் பாதிப்பும் வராது''னு மூணு தலமொறையா மூலிகை வைத்தியம் பாக்குற ஆளு மாதிரி பார்வதி பாட்டி சொல்லிக்கிட்டே போக, எனக்கு ஆச்சர்யந்தாங்கல.

நூறு வயசு வாழுறதுக்கான காரணமா அந்தப் பாட்டி அடுத்து சொன்ன விசயம் இருக்கே... தூதுயிலய வாட்டி எடுத்து, வடை பண்ணிக் கொடுத்த மாதிரி இருந்துச்சு.

''என்னதேன் சத்தா சாப்புட்டாலும்... மனசு நிம்மதியா இருந்தாத்தேன் ஒடம்பு சொகப்படும். மண்ணையும் மனுஷங்களையும் ஆசாபாசமா நெனைக்கிறவுக இப்போ கம்மியாகிட்டாக. காலையில எழுந்த ஒடனே ஒருபுடி மண்ண அள்ளி, 'என்னையத் தாங்குற கடவுளே’னு சொல்லுவாரு எங்கய்யா. மண்ணுல செஞ்ச கொவளையிலதேன் தண்ணி குடிப்பாரு. 'மண்ணுந் தண்ணியும் ஒடம்பவிட்டுப் பிரியக்கூடாது'னு எங்கய்யா சொன்ன சூட்சமத்த இன்னிக்கும் மதிக்கிறவ நானு. அதேமாதிரி சொந்தபந்தங்கள இன்னிக்கும் பாசமா அரவணைச்சு வெச்சுருக்கேன். பேரப்புள்ளைக, அங்காளி, பங்காளிக, மக, மருமகனு சொந்த, பந்தங்க பெருத்துக் கெடக்குதுக. ஒவ்வொண்ணையும் பாக்குறப்ப இந்த வயித்துக்கொடி குளுந்து போவுது. நாலு தாய புள்ளைககிட்ட பேசிச் சிரிச்சா, அதவுட என்ன வைத்தியம் வேணும்... சீக்குப் பிணி இல்லாம சாகுறத்துக்கு!''னு பார்வதி பாட்டி சொன்ன விசயம் இன்னிக்கும் மனசுக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கு.  

சென்னைவாசியா மாறிப்போயி மண்ணையும் மனுசங்களையும் மறந்து திரியிற எத்தனையோ மனுசங்களப் பாக்குறேன். 'நல்லா இருக்கீகளா மக்கா? சொந்த பந்தமெல்லாம் சொகமா? காடு, கண்ணி செழிச்சுக்கிடக்கா?’னு நாலு பேர நலம் விசாரிச்சு எத்தனை நாளாச்சு? வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தாகூட, 'என்னப்பா இந்தப் பக்கம்?’னு கேட்டு மூஞ்சியத் திருப்பிக்கிடுறோம். நம்ம வேலையோட மும்முரம் அப்படி!

சென்னை மாதிரி ராட்சச நகரங்கள்ல ஒருத்தரும் பேச மாட்டேங்கிறாக. என்ன மாயமோ தெரியலை... யாரப் பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்காக. காரு, பைக்குனு பெருகி... காலையில 10 மணிக்கு ஒரு இடத்துக்கு கிளம்பினோம்னா, நைட் 10 மணிக்குத்தேன் போய்ச் சேர முடியுது. இப்பவெல்லாம் சிக்னல்லேயே சீவி சிங்காரிச்சு பூ பொட்டு வெச்சுக்க ஆரம்பிச்சிட்டாக. நான்கூட ஒரு டைரக்டருக்கிட்ட சொன்னேன்... வெறும் லுங்கியோட ஆட்டோவை மறிச்சு ஏறுற ஒருத்தன் ஒவ்வொரு சிக்னலிலும் பல்லு விளக்கி, ஷேவிங் பண்ணி, குளிச்சு, துணிமணி மாத்தி ஆட்டோவைவிட்டு இறங்குறப்ப டிப் டாப்பா இறங்கிப்போற மாதிரி ஸீன் வையுங்கனு. கற்பனைக்காக அப்புடி சொல்லி இருந்தாலும், எதிர்காலத்தில கண்கூடா நடக்கப்போறதும் இதுதேன்!

காரு, பங்களா, செல்போனு, செட்-டாப் பாக்ஸுனு வசதி வாய்ப்புக இப்போ எவ்வளவோ பெருகிப் போயிடிச்சு. ஆனா, வேப்பமரத்தடியில துண்டை விரிச்சுப் போட்டு வெசனமத்து தூங்கின நிம்மதி இன்னிக்கு இல்லை. மெத்தையில படுத்தாலும் செத்த நேரம் கண்ணசர முடியலை. வசதி பெருகின அளவுக்கு அசதியும் பெருகிடிச்சு. பார்வதி பாட்டி சொன்ன வாழ்க்கையோட சூட்சமத்துக்கும், நாம வாழுற அவசர கதி வாழ்க்கைக்கும் கொஞ்சமாச்சும் சம்பந்தம் இருக்கா?

வேகம்... வேகம்... வேகம்னு ஓடி சீக்கிரமே 'போயி சேந்துடற’ நாம எங்க? மண்ணக் கடவுளாவும் மனுச மக்கள ஒறவுகளாவும் நெனச்சு, ஆசுவாசமா காலார நடக்குற மாதிரி வாழ்க்கைய ஓட்டி, நூறு வயசுக்கும் ஸ்ட்ராங்கா இருக்குற பார்வதி பாட்டி எங்க?!

- நெறய்ய பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு