Published:Updated:

என்னவரே...என்னவரே...

சந்திப்பு: ம.மோகன் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

பிரீமியம் ஸ்டோரி

ஜெயந்தி சு(ரேஷ்), யசோதா பா(லகிருஷ்ணன்)  

##~##

தமிழ் சினிமாவின் முன்னிலை இயக்கு னர்கள் பலரும் தற்போது விரும்பும் எழுத் தாளர்கள்... சுபா. கல்லூரித் தேர்வில் தமிழ் பாடத்தில் பெற்ற சரிநிகர் மதிப்பெண்ணால் அலைவரிசை ஒன்றி நண்பர்களானவர்கள். எழுத்து தந்த ஆர்வம் சுரேஷ், பாலகிருஷ்ணன் என்கிற இருவர் பெயரின் முதல் இரண்டு எழுத்தை சேர்த்துக்கொண்டு 'சுபா’ என பேனா பிடிக்க வைத்தது. சினிமா விமர்சனம், ஆன்மிக பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், சினிமா திரைக்கதை, வசனம் என்று பல பரிமாணங்களையும் தொட்டுத் தொடர்கிறார்கள் இந்த எழுத்து இரட்டையர்கள்.  

எழுத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதோடு முடிந்துவிடவில்லை இவர்களுக்கு இடையேயான சங்கிலி. குடும்ப வாழ்க்கையிலும் செழித்துக் கிடக்கிறது இவர்களின் அடர் நட்பு. அதன் வேர்... ஜெயந்தி சுரேஷ், யசோதா பாலகிருஷ்ணன்!

''என் அக்கா, எழுத்தாளர் அனுராதா ரமணனால் ஒரு நண்பராக அறிமுகமானவர்தான் சுரேஷ். இன்று ஒரு கிரியேட்டரின் மனைவியாக நான் பெருமைப்படும்வரை அழைத்து வந்திருக்கிறது அந்த அறிமுகம்!''

- பிரியம் பேச ஆரம்பித்தார் ஜெயந்தி!

''எங்களுடையது காதல் திருமணம் என்றோ, நிச்சயித்த திருமணம் என்றோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவ்வப்போது இலக்கிய கூட்டங்களுக்கு அக்காவுடன் நானும் செல்வேன். இவரும் அந்நிகழ்ச்சிகளுக்கு வந்து போவார். அக்காவுக்கு இவர் நல்ல பழக்கம். ஒரு நாள், 'சுரேஷையே திருமணம் செய்துக்கோயேன்!’ என்றார் அக்கா. இரு தரப்புக்கும் திருப்தி என்பதால், திருமணம் இனிதே முடிந்தது. சுரேஷ் என் இதயம் நுழைந்த கதை இதுதான்.

என்னவரே...என்னவரே...

அவருக்கு 'அட்வைஸ்’ பிடிக்காது. 'நீ... நீயா இரு’ என்பதுதான் அவரின் ஒன்லைன் ஃபார்முலா. நானும் அதே குணம்தான். எங்களுக் குள் இருக்கிற இந்த ஒற்றுமைதான் சந்தோஷமான வாழ்க்கைக்குச் சாவியாக இருக்கிறது. எழுத்துதான் அவரின் சுவாசம் என்பதை உணர்ந்தவள் நான். அதனால்... அவருக்கான எழுத்துச் சூழலை அமைத்துக் கொடுப்பதிலும், அதை தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வதிலும் முனைப்புடன் இருப்பேன். அவரோ... எழுத்தில் என்னை யும் ஈடுபடச் செய்வார். இன்றும் 'டிஸ்கஷன்’ல் பேசியதை எல்லாம் ஐ-பேடில் எடுத்து வந்து, என்னிடம் கொடுப்பார். அதை ஆர்வமுடன் கேட்டு, அவருக்கு டைப் செய்து கொடுக்கும் வேலையை, முதல் முறை கடல் பார்க்கும் குழந் தையின் சந்தோஷத்துடன் செய்து கொண்டிருக் கிறேன். 'வீட்டையும் கவனிச்சுட்டு, என் வேலைகளையும் செய்து கொடுக்குறியே!’ என்று அதற்கான பாராட்டை மறக்காமல் தந்துவிடும் அவரின் மனம், சுகம்.

கிருத்திகா, சுஜய்கிருஷ்ணா என்று இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கான சுதந்திரத்தில் சார் தாராளம். அதுதான் இன்று தன்னிச்சையாக வெற்றிகளை ஈட்டிக்கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. பிள்ளைகள் பற்றிப் பேசும்போது, ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. என் இரண்டாவது பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குச் செல்ல இவரிடம் அனுமதி கேட்டேன். 'வேண்டாம்’ என்று ஒரே சொல்லில் மறுத்துவிட்டார். ஆனால், பிரசவத்தின்போது, அம்மாவுக்கு இணையாக என்னையும், குழந்தையையும் பார்த்துக் கொண்ட இவரின் அன்பு... அம்மாவின் விஸ்வ ரூபம் என்றே சொல்ல வேண்டும். 'அதனால தான் உங்கம்மா வீட்டுக்கு உன்னைப் போக வேண்டாம்னு சொன்னேன்!’ என்று அவர் சிரிக்க, மனம் குளிர்ந்து போனது எனக்கு.

'கல்லூரியில் சேர்ந்து படித்த நண்பர்கள், சேர்ந்து எழுத ஆரம்பித்தவர்கள், இணை பிரியாமல் இயங்கிக் கொண்டிருப்பவர்கள்...’

- 'சுபா’வைப் பற்றிய இந்த பிம்பம், 'அது எப்படி?!’ என்று வெளியில் இருந்து பார்ப்பவர் களுக்கு நம்ப முடியாத ஆச்சர்யமாகத்தான் இருக்கும். ஆனால்... இவரையும் பாலாவையும் அருகில் இருந்து கவனிக்கும் எங்கள் இரண்டு குடும்பமும், இவர்களின் நட்பையும் புரிதலையும் முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளோம்.

சென்ற வருடம் பாலாவுடைய பெண்ணின் திருமணத்துக்கு பத்து நாட்கள் முன் என் மாமியார் இறந்துவிட்டார். இரு வீட்டில் நடக்கும் எந்த ஒரு விசேஷத்தையும் இணைந்தே நடத்தும் எங்களுக்கு, அந்தச் சூழல் மிகக் கொடுமையானதாக இருந்தது. 'திருமண தேதி குறிச்சுட்டு துக்க காரியங்களுக்கு வரவேண்டாம்...’ என்று எவ்வளவோ சொல்லியும், பாலா குடும்பம் அந்தச் சமயத்தில் காட்டிய அன்பும், ஆறுதலும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. 'சுபா’வின் நட்பை எண்ணி மீண்டும் ஒரு முறை எங்களின் இரு குடும்பமும் நெகிழ்ந்த தருணம் அது!''

- புன்னகையோடு முடித்தார் ஜெயந்தி!

அந்தப் புன்னகையின் சுடர் எடுத்துத் தொடர்ந்தார், யசோதா பாலகிருஷ்ணன்!

என்னவரே...என்னவரே...

''மாப்பிள்ளையும், அவரோட கல்லூரி நண்பரும் சேர்ந்து ஒரே பேர்ல கதை எழுதறாங்க. பேங்ல வேலை பார்க்கறாங்க. திருமணம் முடிஞ்சாலும் பக்கத்து பக்கத்து வீட்ல வசிக்கணும்னு இருக்காங்க. உனக்குச் சம்மதம்தானே..?! என்று என் வீட்டில் வரன் பேசி திருமணம் நிச்சயித்தபோது, ஆச்சர்யமும் ஆனந்தமுமாகச் சம்மதித்தேன்.

பயணம், சினிமா என்று ஏதாவது ஒரு ஊரில் இருக்கும்போது, போன் செய்வார். 'பூச்செடி களுக்கு எல்லாம் தண்ணி ஊத்தியாச்சா..?’ என்பார். வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கே இவ்வளவு அக்கறைப்படுபவர், எனக்கும் என் குழந்தைகளுக்கும் தரும் அன்பின் வெள்ளத்தை என்னவென்று சொல்ல! 'எழுத்து வேலைகளுக்கே நேரம் சரியா இருக்கு. பேங்க் வேலையில இருந்து வி.ஆர்.எஸ். வாங்கிக்கலாமானு ஒரு யோசனை தோணுது. உன்னோட அபிப்ராயம் என்ன..?’ என்றார் ஒரு நாள். நான் சம்மதம் சொல்ல, முழுமனதோடு வேலையை விட்டார். இப்படி அவரின் ஒவ்வொரு முக்கிய முடிவிலும் எனக்கும் இடம் தருவதில், பாலா கிரேட். எங்கள் பிள்ளைகள் வைஜெயந்தி, கமல் இருவருக்கும் எங்களின் இல்வாழ்க்கையை பெருமையாகவும், பாடமாகவும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் நிறைவு எங்களுக்கு உண்டு.

இவர் கதைகளில் பெண்களின் உள்ளுணர்வு களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதுகுறித்த சந்தேகங்கள், விளக்கங்களை எல்லாம் என்னிடம் கேட்டுப் பெறுவார். அந்தக் கதைகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும்போது, 'இந்த கிரெடிட் எல்லாம் உனக்குதான்!’ என்று சிரிப்பார். பதிப்பகம் தொடங்கியபோது, அதன் முழு பொறுப்பையும் என்னிடம் கொடுத்தார். குடும்பம், குழந்தைகள், பதிப்பகம் என்று எல்லா விஷயங்களிலும் 'என்னால் முடியும்!’ என்று நான் நம்புவதைவிட, 'உன்னால் முடியும்!’ என்று அவர் எனக்கு அளித்த நம்பிக்கை நிறைய!

'டி.வி. பார்த்துட்டே படிக்கிறாரே... அது எப்படி..?!’ என்று இவரைப் பார்த்து நானும் குழந்தைகளும் ஆச்சர்யப்பட, அதே ஆச்சர் யத்தை அங்கே ஜெயந்திக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்துக் கொண்டிருப்பார் சுரேஷ். 'இப்படி யான வித்தியாசமான ரசனைகள்தான் எங்க ளோட பலம்!’ என்று சிரிப்பார்கள் நண்பர்கள்.

இப்போது மட்டுமல்ல... எப்போதும் 'பயணக் கட்டுரை’, 'இலக்கிய விழா’, 'டிஸ்கஷன்’ என்று டிராவல் பேக் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள் இவரும் சுரேஷ§ம். எதிரெதிர் வீட்டில் எங்கள் இரு குடும்பமும் இருப்பதால், அந்தச் சமயங்களில் எல்லாம் நானும், ஜெயந்தி யும் சேர்ந்து குழந்தைகள், குடும்பம் என்று சமாளித்துக் கொள்வோம். 'இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்குற தைரியத்துலதானே நாங்க கைய வீசிட்டு கிளம்பிடுறோம்!’ என்பார்கள் இருவரும்.  

சு(ரேஷ்)பா(லா) எப்படியோ அதேபோல் எங்கள் இரண்டு வீட்டுப் பையன்கள் சுஜய் - கமல். இருவரும் நெருக்கமான நண்பர்கள். ஆம்... தலைமுறை பல தாண்டி வளர வேண்டும் இந்த நட்பு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு