Published:Updated:

உன்னால் முடியும் பெண்ணே !

கணவனின் உயிரைப் பறித்தது விதி... கைகொடுத்து காப்பாற்றியது அவல் - பொரி !ஞா.அண்ணாமலை ராஜா படங்கள்: செ.சிவபாலன்

உன்னால் முடியும் பெண்ணே !

கணவனின் உயிரைப் பறித்தது விதி... கைகொடுத்து காப்பாற்றியது அவல் - பொரி !ஞா.அண்ணாமலை ராஜா படங்கள்: செ.சிவபாலன்

Published:Updated:

பிஸினஸ் வெற்றிக் கதைகள்

##~##

கட்டுப்பாடுகளையும், கஷ்டங்களையும் தாண்டி முன்னேறும் பெண்கள்தான் வெற்றியை அடைகிறார்கள். அப்படி ஓர் வெற்றிப் பெண்தான், கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஜீவரத்தினம். கையில் இரண்டு குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, சிறுவயதிலேயே கணவர் காலமாகிவிட, தன் உழைப்பால் இன்று தானும் கரையேறி... கூடவே சில பெண்களையும் கரையேற்றிஇருக்கும் ஜீவரத்தினத்தின் பிடிமானம், அவல், பொரிகடலை தயாரிப்புத் தொழில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரெண்டு புள்ளைகள கையில வெச்சுக்கிட்டு, மாசம் 500 ரூபாய்க்குள்ள குடும்பம் நடத்த கஷ்டப்பட்ட நான், இன்னிக்கு இந்தத் தொழிலோட அத்தனை நுணுக்கங்களையும் கத்துக்கிட்டு மாசம் 7,500 ரூபாய் சம்பாதிக்கிறேன். வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டதுதான் வெற்றிக்குக் காரணம்!'' என்று எளிமையாக ஆரம்பிக்கிறார் ஜீவரத்தினம்.

''லாரி டிரைவரா வேலை பார்த்த வீட்டுக்காரர், கல்யாணமாகி பத்து வருஷத்துல உடம்பு சரியில்லாம திடீர்னு இறந்துட்டார். அதுவரை வெளியுலகம் தெரியாமலே இருந்துட்ட நான், என்னோட ரெண்டு ஆம்பளப் புள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கணுமேங்கிற வைராக்கியத்துல, மில் வேலைக்குப் போனேன். அந்த வேலைதான் எங்கள பசியாத்துச்சு. ஒரு கட்டத்துல நைட் ஷிஃப்ட்ல போட்டு, சில்மிஷ தொந்தரவுகள் ஆரம்பமாக, அந்த வேலையை விட்டுட்டேன்.

அதுக்குப் பிறகு, குளித்தலையில 'கிராமியம்’ங்குற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செஞ்சுட்டு இருந்த எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்கான புராஜெக்ட்ல எனக்கும் வேலை கொடுத்தாங்க. சுத்துவட்டார கிராமங்கள்ல எயிட்ஸால பாதிக்கப்பட்டவங்கள சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு வர்றதுதான் வேலை. மாசம் 300 ரூபாய் சம்பளம். அதோட அரசாங்கத்தோட விதவைகள் உதவித் தொகை ரூபாய் 200-னு, 500 ரூபாய் வருமானத்துல வண்டி ஓடிட்டு இருந்தது. ஒரு கட்டத்துல 'கிராமியத்’தோட அஞ்சு வருஷ 'எய்ட்ஸ் புராஜெக்ட்’ முடிஞ்சு போயிட, கல்யாணங்கள்ல எச்சிலை எடுக்குறது, வீட்டுப் பாத்திரம் கழுவுறதுனு வேதனையோட கழிஞ்சுது வாழ்க்கை.

உன்னால் முடியும் பெண்ணே !

அப்போதான் 'கிராமியத்’துல இருக்குற டிரெயினர் கருப்பண்ணன் சாரும், டாக்டர் நாராயணன் சாரும் என் குடும்ப நிலையை தெரிஞ்சுக்கிட்டு, குழந்தைகளோட படிப்புச் செலவை ஏத்துக்கிட்டாங்க. அவங்களோட அடுத்த புராஜெக்ட்லயும் வேலை கொடுத்தாங்க. சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் பயிற்சிகள் கொடுக்குறதுதான் புராஜெக்ட். இதுக்காக நான் முதல்ல பயிற்சி எடுத்துக்கிட்டு, அப்புறம் சுய உதவிக்குழுப் பெண்களுக்கு கற்றுத் தந்து வழிநடத்தணும்னு சொன்னாங்க. அப்படித்தான் ஆறு வருஷத்துக்கு முன்ன ராஜசுலோச்சனா மேடம்கிட்ட அவல், பொரி தயாரிக்கிற தொழிலை கத்துக்கிட்டேன்.

ஒவ்வொரு குழுவுக்கும் இந்தத் தொழிலை சொல்லிக் கொடுக்கும்போது, அதுல இருக்குற அத்தனை நெளிவு, சுளிவுகளும் அத்துப்படி ஆயிடுச்சு. இதைத் தொழிலா எடுத்துச் செய்யற ஆர்வமும், நம்பிக்கையும் வந்தது. நான் கொடுத்த நம்பிக்கையில 'சோனியா காந்தி குழு’ மற்றும் 'ஜவகர்லால் நேரு குழு’வைச் சேர்ந்த 12 பெண்கள் என்னோட கைகோக்க... சுய உதவிக் குழு பெண்களுக்கான வங்கிக் கடன் வாங்கி, அதை முதலாக்கி, தொழிலை ஆரம்பிச்சோம்.

உணவு சம்பந்தப்பட்டதுங்குறதால, இந்தத் தொழிலுக்கு கவனம் தேவை. நெல்லை சுத்தம் செஞ்சு, ஊற வச்சு, காய வச்சு மில்லுல அரைக்கக் கொடுத்தா, நெல்லும் அரிசியும் பிரிஞ்சிடும். அரிசியை ரோஸ்டர் இயந்திரத்துல போட்டா, பொரிஞ்சு, பொரியா வரும். அதை பாலிதின் கவர்ல பத்திரப்படுத்தி, மூட்டையா கட்டிடுவோம். வியாபாரிகள் வந்து வாங்கிட்டுப் போவாங்க. இதுல மூட்டைக்கு கிட்டத்தட்ட 200 ரூபாய் லாபம் கிடைக்கும். தொழிலை ஆரம்பிச்சப்போ வாரம் 10 மூட்டை பொரி வரை தயார் செஞ்சுட்டு இருந்த நாங்க, இப்போ வாரத்துக்கு 100 மூட்டை தயாரிக்குறோம். பொரியில சாதா பொரி, கார பொரி, மிக்சர்ல போடுற அவல் பொரினு மூணு வகை இருக்கு.

அவலும் தயாரிக்குறோம். அரிசியில இருந்துதான் அவல் தயாராகுதுனு பலரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, நெல்லுல இருந்துதான் அவல் தயாராகுது. நெல்லை மூட்டைக் கணக்குல வாங்கி, ஊறப்போடணும். ரோஸ்டர்ல 2 கிலோ, 3 கிலோனு நெல்லைக் கொட்டினா, அந்த வெப்பத்துல ரோஸ்டரோட மற்றொரு பாகத்துல அது தவுடு பிரிஞ்சு அவலா கொட்டும். அவல்லயும் மூணு ரகம் இருக்கு. பாயசத்துக்கு பயன்படுத்துற அவலோட விலை கிலோ 40 ரூபாய், உப்புமாவுக்குப் பயன்படுத்துறது 35 ரூபாய், பொரிகடலையில போடுற பொடி அவலோட விலை 20 ரூபாய். வாரம் 50 மூட்டை அவல் தயாரிப்போம். ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும். பிரிஞ்சு விழுற தவுடு, மாட்டுக்குத் தீவனமாயிடும். கூடவே, சர்க்கரை நோய் உள்ளவங்க சாப்பிடுற வரகு அவல், கேழ்வரகு அவல் மற்றும் உப்புக்கடலை கூட தயாரிக்குறோம்.

உன்னால் முடியும் பெண்ணே !

தரம் சிறப்பா இருக்கறதால, வெளியூர்கள்ல இருந்து வர்ற பொரி வியாபாரிகள் 10 மூட்டை, 20 முட்டைனு லோடு எடுத்துட்டுப் போறாங்க. நாங்களும் டி.வி.எஸ்-50 வண்டியில வெச்சு பக்கத்துல இருக்குற கடைகளுக்கு சப்ளை பண்றோம்.

நெல் ஊறப்போடுற தொட்டி கட்டினது, அவல் தயாரிக்கிற ஆஸ்பெஸ்டாஸ் கூரையை ஓடா மாத்துனது, மொத்தமா ஒரு லட்சம் ரூபாய்க்கு நெல் கொள்முதல் பண்ணினதுனு வங்கிக் கடன் மூலமா தொழிலை மேம்படுத்தினதோட, உற்பத்தியையும் ரெண்டு மடங்கா உயர்த்தியிருக்கோம். எல்லா செலவுகளும் போக மாசம் ஒவ்வொருத்தருக்கும் 3,500 ரூபாய் லாபம் கிடைக்குது.

இன்னொரு பக்கம், இந்தத் தொழிலை பல பெண்களுக்கும் கற்றுத் தர்ற டிரெயினர் வேலையும் 4,000 ரூபாய் சம்பளத்துக்கு தொடர்ந்து பார்த்துட்டுதான் இருக்கேன். என்னையே முன் உதாரணமாச் சொல்லி, 'இதை தைரியமா எடுத்துப் பண்ணலாம்’னு சொல்லும்போது, எல்லாருக்கும் நம்பிக்கை வருது. இப்போ என் பெரிய பையன் பாலிடெக்னிக் முடிச்சு, வேலைக்குப் போறான். சின்னவன் 12-வது படிச்சுட்டு இருக்கான். வாழ்க்கை யில் என்னை இவ்வளவு தூரம் பொருளாதாரப் பாதுகாப்போட நகர்த்திட்டு வந்தது, என் உழைப்பும் இந்தத் தொழிலும்தான்!''

- நன்நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளுடன் முடித்தார் ஜீவரத்தினம் !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism