Published:Updated:

திருத்துபவர் மகிழ்ந்தால்... 100 -100 நிச்சயம்..!

இதோ... ஆன்ஸர் பேப்பர் சீக்ரெட்ஸ்

திருத்துபவர் மகிழ்ந்தால்... 100 -100 நிச்சயம்..!

இதோ... ஆன்ஸர் பேப்பர் சீக்ரெட்ஸ்

Published:Updated:

எஸ்.ஜானவிகா

திருத்துபவர் மகிழ்ந்தால்... 100 -100 நிச்சயம்..!

எல்லா மாணவர்களுக்கும் தங்களின் திறமையைப் பொறுத்து 'இவ்வளவு மார்க் எடுத்துடணும்...’ என்று ஒரு கணக்கு மனதில் இருக்கும். அந்த இலக்கை அடைய, தேர்வுக்காகப் படிப்பது, படித்ததைச் சரியாக தேர்வுத்தாளில் வெளிப்படுத்துவதுடன் அவர்களுக்குக் கை கொடுக்கும் இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கிறது! அது, விடைத்தாள் திருத்துபவருக்கான விதிமுறைகள் மற்றும் அவரின் எதிர்பார்ப்புகளை அறிந்து, அவற்றை பரீட்சைத் தாளில் சமன் செய்ய முயற்சிப்பது!

''நூற்றுக்கு நூறு வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல, ஆவ்ரேஜ் மதிப்பெண்கள் பெறுபவருக்கும், பார்டரில் பாஸாகும் வாய்ப்புள்ளவர்களுக்கும்கூட, விடைத்தாள் திருத்தும் ஆசிரியரை வசியப்படுத்தும் வகையிலான குறிப்புகள், மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்'' என்று அதை இங்கு வரிசைப்படுத்தித் தருகிறார்கள் கற்பித்தல் மற்றும் விடைத்தாள் திருத்துதலில் அனுபவம் பெற்ற தலைமை ஆசிரியர்கள் சிலர்.

திருத்துபவர் மகிழ்ந்தால்... 100 -100 நிச்சயம்..!
##~##

''தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 பேப்பர்கள் வரை திருத்துவதற்காகத் தரப்படும். ஒவ்வொரு பேப்பரிலும் விடைகளைத் திருத்துவது மட்டுமல்லாது, மார்க் என்ட்ரி, டோட்டல் போடுவது, தனித்தாளில் தேர்வு எண்ணுக்குரிய மதிப்பெண்ணை குறிப்பது... பிறகு, கண்காணிப் பாளர் பார்வைக்குத் தாளை அனுப்பி அங்கு ஏதேனும் கேள்விகள் கேட்கப்பட்டால், அதற்கு பதில் அளிப்பது என வரிசையாக வேலைகள் நெருக்கும். இந்த நெருக்கடியோடு விடைத்தாளிலும் மாணவர்கள் ஏதேனும் குழப்பங்களைச் செய்திருந்தால்... அது மாணவர் மீதான அபிப்ராயத்தை குறைத்து, மார்க்குகள் குறைவதற்கு வாய்ப்பு கொடுத்தது போலாகிவிடும்'' என்று அந்தத் தவறுகள் நிகழாதிருக்க, முதலில் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான பொதுக்குறிப்புகளை பகிர்ந்தார் அரியலூர், மெட்ராஸ் சிமென்ட்ஸ் லிட்., வித்யாமந்திர் பள்ளி முதல்வர் டி.ராஜ்குமார். மேற்கொண்டு அவர் சொன்ன டிப்ஸ்கள் கீழே...

முக்கியமான பாயின்ட்டுகளை அடிக்கோடிடும்போது, அதீதமாக நிறங்களைப் பயன்படுத்தக் கூடாது. முக்கியமாக சிவப்பு, இளஞ்சிவப்பு (பிங்க்), பச்சை ஆகிய நிறங்கள், தேர்வுத்தாளை திருத்துபவர்கள் பயன்படுத்துபவை என்பதால் அவற்றை தவிர்த்தே ஆகவேண்டும்.

 தேர்வுத்தாளில் பொதுவாக ஈஸியான பதில்களை முதலிலும், சுமாராகத் தெரிந்ததை கடைசியாகவும் பதிலளிக்க வேண்டும் என்பார்கள். ஒரு வினாத்தாளில் சுமார் 90 முதல் 150 வரையிலான எண்ணிக்கையில் வினாக்கள் இருக்கும்போது, தேர்வுத்தாளில் விடைகளை மாற்றி மாற்றி எழுதுவது ஆசிரியருக்கு அயர்ச்சியைத் தரும். டாப்பர் மாணவர்கள் இம்மாதிரியான அசௌகரியங்களை பேப்பர் திருத்துபவருக்கு தராதிருப்பது நல்லது. மற்றவர்களும் ஒரு சப்-டிவிஷனுக்குள் என்றளவோடு வைத்துக்கொள்ளலாம்.

ஒரு பதிலுக்கான பாயின்ட்டுகளை எழுதும்போது, முடிந்தளவு அதே வரிசையில் எழுதுவது நல்லது. சில ஆசிரியர்கள் பக்கத்திலேயே 'கீ’ (விடைக்குறிப்புகள்) வைத்துக்கொண்டு ஒவ்வொரு விடைத்தளையும் அதன்படியே திருத்துவார்கள். பாயின்ட்டுகள் வரிசை மாறுவது சில சமயம் அரை அல்லது ஒரு மதிப்பெண்ணை இழக்க வாய்ப்பாகி விடலாம்.

சாய்ஸ் கேள்விகளில் 5 கேள்விகள் எழுத வேண்டிய இடத்தில் சில மாணவர்கள் தங்களை புத்திசாலியாக நினைத்துக்கொண்டு கூடுதலாக இரண்டு கேள்விகளை வெவ்வேறு பக்கங்களில் எழுதி வைத்து கூடுதல் மதிப்பெண் பார்க்க முயல்வார்கள். பள்ளியில் நடந்த மற்ற தேர்வுகளில் ஒருவேளை இம்மாதிரியான தகிடுதத்தங்களில் அவர்கள் மார்க் வாங்கிஇருக்கக் கூடும். ஆனால், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்போது 'மதிப்பெண் போஸ்டிங் முறை’ இம்மாதிரியான முறைகேடுகளை எளிதில் அடையாளம் காட்டிவிடும்... ஜாக்கிரதை.

திருத்துபவர் மகிழ்ந்தால்... 100 -100 நிச்சயம்..!

சாய்ஸ் கேள்விகளுக்கு விடையளிக்கையில் ஐந்து கேள்விகளுக்கு விடையளித்துவிட்டு, பின் அதில் சுமாராக எழுதியுள்ள இரண்டு பதில்களைவிட பெட்டரான வேறு இரண்டு பதில்கள் ஞாபகம் வந்துவிட்டது என்று அவற்றை கடைசியாக எழுதி வைப்பார்கள் சிலர். ஞாபகமாக முதலில் எழுதிய ஐந்தில், சுமாரான அந்த இரண்டு பதில்களை அடித்துவிட வேண்டும். ஏனெனில், வரையறுக்கப்பட்ட ஐந்து சாய்ஸில் முதலில் உள்ள ஐந்து பதில்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு திருத்துவார்கள். முதல் ஐந்துக்குள் இருக்கும் இரண்டு பதில்கள் தவறாகி, அடுத்ததாக எழுதப்பட்ட இரண்டு விடைகள் சரியாக இருப்பினும், மதிப்பெண்கள் தரப்பட மாட்டாது.

ஒரு சிலர் கேள்விக்கான வரிசை எண்களை எழுத மறந்திருப்பார்கள். அல்லது மாற்றி எழுதியிருக்கக்கூடும். எனவே, கடைசி பத்து நிமிடங்களையேனும் எழுதிய விடைகளை சரிபார்ப்பதற்காக கட்டாயம் ஒதுக்க வேண்டும்.''

சென்டம் அடிக்க வேண்டுமா?

சென்டம் அடிக்கத் துடிப்பவர்களுக்கான பிரத்யேகக் குறிப்புகளை வழங்க முன்வந்த திருச்சி, குண்டூர், ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.சரஸ்வதி, ''100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் விடைத்தாள்களை, கண்காணிப்பாளர் மேலும் ஒருமுறை சரி பார்ப்பார். அதேபோல 99 அல்லது 98 வந்தாலும் அந்த விடைத்தாள்களும் 'ஒருவேளை நூறு மதிப்பெண்ணுக்குரியதாக இருக்கலாமோ’ என்ற பரிதவிப்பில் சரிபார்க்கப்படும். எனவே 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்க நம்பிக்கையோடு தேர்வுகளைச் சந்திக்கலாம்!'' என்ற வாழ்த்துதலோடு, அவற்றை வழங்குகிறார் இங்கே...

திருத்துபவர் மகிழ்ந்தால்... 100 -100 நிச்சயம்..!

 ''சென்டம் வாங்குவற்கு, அடித்தல், திருத்தல் இல்லாத தெளிவான கையெழுத்தும் உறுதி கொடுக்கும். விடையளிக்கும்போது ஹெட்டிங், சப்-ஹெட்டிங் போன்றவற்றை பிரித்து அதற்குள் பாயின்ட்டுகளையும் ஹைலைட் செய்து காட்ட வேண்டும்.

 இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் 'யூனிட்’ எனப்படும் அலகுகளை விடையுடன் சரியாகக் குறிப்பிட வேண்டும். விடை சரியாக இருப்பினும், யூனிட் இல்லையெனில் அரை மார்க் போய்விடும்.

 மொழிப்பாடங்களில் மட்டுமல்ல, 'சென்டம்’ வாங்க பிற பாடங்களிலும் கிராமட்டிக்கல் தவறு இருக்கக்கூடாது. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் அவ்வாறே.

 மொழிப்பாடங்களில் கிரியேட்டிவாகவும் சொந்த நடையிலும் எழுதுவது மதிப்பெண்களை வாரி வழங்கச் செய்யும்.

எழுதும் பாடம் எதுவானாலும் மொழியில் சரளம் இருப்பின், திருத்துபவர் எளிதில் இம்ப்ரஸ் ஆகிவிடுவார்.

பார்டரில் பெயிலாவதைத்

தவிர்க்க!

''பார்டரில் பெயிலாக உள்ள வாய்ப்புகளையும் தவிர்க்க முடியும்'' என்று சொல்லும் குன்னம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டாக்டர் எம்.அன்பழகன் தந்த டிப்ஸ்கள்-

 ''சுமாராக படிப்பவர்கள் ஏனைய வினாக்களைவிட, மார்க் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாத ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம்.

பெரிய கேள்விகளுக்கு சரிவர பதில் தெரியாவிட்டாலும் கூட, ஸ்டெப்ஸுக்கு மதிப்பெண் உண்டு என்பதால், அந்த ஸ்டெப்ஸ் நிறைவு பெறாவிட்டாலும்கூட துவக்கி வைத்து விடலாம். உதாரணத்துக்கு லெட்டர் ரைட்டிங்கில் ஃப்ரம், டூ, பாடி ஆப் த லெட்டர், கடிதத்தை முடிக்குமிடம், தேதி, ஊர் என... இந்த ஸ்டெப்கள் அதற்குரிய மதிப்பெண்களை பெற்றுத் தரும்.

கணக்கு, அறிவியல் பாடங்களிலும் முடிந்தவரை ஸ்டெப்புகளை கவர் செய்வது அதற்குரிய மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.

35 மதிப்பெண் எடுத்தால் பாஸ் எனில், பெரும்பாலான ஆசிரியர்கள் முப்பதை தாண்டிய விடைத்தள்களை மறுபடியும் ஒருமுறை சரிபார்த்து பாஸ் போட முயற்சிப்பார்கள். எனவே, கேள்வித்தாளை பார்த்த கணமே மிரண்டு சுருளாமல், பரீட்சையின் இறுதி மணித் துளிவரை கவனத்தை குவித்து எழுத வேண்டும்!

ஆக... பரீட்சையும் ஒரு சைக்காலஜி அணுகுமுறைதான்... புரிந்து கொண்டால், 'புஸ்’ என்று ஊதிவிடலாம்... இனி வரப்போகும் குறிப்பையும் மறக்காமல் நெஞ்சில் குறித்துக் கொண்டால். அது-

தேர்வுத் தாள்கள் திருத்தப்படுவது... வெயில் வாட்டியெடுக்கும் ஏப்ரல், மே மாதங்களில்தான். ஏதோ ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்தில், சுத்துவேனா... மாட்டேனா என்று சுழலும் மின்விசிறிக்கு கீழே, வியர்வையில் நனைந்தபடி எரிச்சலோடுதான் பெரும்பாலான ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்துவார்கள். நம்முடைய விடைத்தாள் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் இருந்தால்... கவலையே இல்லை. அதற்கு மாறாக அமைந்தால், 35, 40 டிகிரி வெயில் ஏற்படுத்தியிருக்கும் எரிச்சலோடு, இதுவும் சேர்ந்து கொண்டு... ஒரேயடியாக 'பற்றிக் கொள்ள' வாய்ப்பிருக்கிறது... ஜாக்கிரதை!  

படங்கள் : கே. குணசீலன்