Published:Updated:

அனாதைகள் என்று யாருமில்லை !

நெகிழ வைக்கும் நீலா வே.கிருஷ்ணவேணி படம்: ஆ.முத்துக்குமார்

##~##

''ஐம்பது வயசாச்சு. இன்னும் ஓடிட்டே இருக்கேன். கடவுள், இதே உடல்பலத்தைக் கொடுத்தா போதும்... அனாதரவா கிடக்கற சடலங்களை அடக்கம் செய்ற என் பணி தொடர்ந்துட்டே இருக்கும்!''

- சென்னை, தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் 'உத்ரா உதவும் சேவை மையம்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நீலாவின் வார்த்தைகளில் அத்தனைக் கனிவு!

சிணுங்கிக் கொண்டே இருக்கும் மொபைல் போனை, சைலன்ட் மோடில் போட்டுவிட்டுப் பேச்சைத் தொடர்ந்த நீலா, ''சொந்த ஊர் திருச்சி. சின்ன வயசுலயே உதவும் மனப்பான்மை அதிகம். திருச்சி, ஹோலி கிராஸ் பள்ளிக்கூடத்துல படிக்கறப்பவே ஒரு டீமை உருவாக்கி... முதியோர், ஊனமுற்றோர், அனாதரவானவர்கள்னு முடிஞ்ச உதவிகளைச் செய்துட்டு இருந்தவ நான். அதனால, பொதுச்சேவைங்கறது ரத்தத்துல ஊறிப்போச்சு.

பி.யு.சி., படிக்கும்போதே திருமணம் முடிய, சென்னையில் வாழ்க்கை ஆரம்பமாச்சு. கணவர் பிஸினஸ்மேன். அவர் துணையோட தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, பாதிக்கப்பட்டவங்கனு பலருக்கும் உதவிகளை செய்ய ஆரம்பிச்சேன். இருந்தாலும், சேவையில் முழுமையா ஈடுபடுத்திக்காத குறை மனசுல இருக்கத்தான் செய்துச்சு.

இந்த நிலையில, 2004-ம் வருஷத்துல ஒரு நாள் ராத்திரி 8 மணிவாக்குல... எங்க வீட்டுகிட்ட ரோட்டுல படுத்திருந்தாங்க ஒரு மூதாட்டி. 'யார் நீங்க.. என்னாச்சு..?’னு கேட்டேன். 'எங்கிட்ட எதையும் கேட்காதே’னு அழுதவங்க.... ரொம்ப கோபத்தோட அங்கிருந்து கிளம்பிட்டாங்க. 'நமக்கு யாரும் இல்லையே'ங்கிற நிராதரவுதான் அழுகைக்கு காரணம். 'மூணாவது மனுஷி நம்மள பார்த்து பரிதாபப்படறாளே'ங்கற துயர நிலைதான் அவங்களோட கோபத்துக்குக் காரணம்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. அடுத்த 20 நாள்ல... ரோட்டோரமா அந்தம்மா இறந்து கிடந்தது தெரிஞ்சப்போ, மனசெல்லாம் பாரமாயிடுச்சு.

'உலகத்துலயே துயரமானது மரணம்னா, இறுதிச் சடங்கு செய்யக்கூட நமக்கு ஆள் இல்லைங்கிற நினைப்பு, மரணத்தைவிடத் துயரம் இல்லையா? நம்ம உறவுக்கு செய்ற சடங்குகளைவிட, ஊர், பேர் தெரியாதவங்களுக்குச் செய்றப்போ கிடைக்கிற நிம்மதியும் புண்ணியமும் பெருசுதானே!' இப்படி அலை அலையா எனக்குள்ள கேள்விகள்.

அனாதைகள் என்று யாருமில்லை !

ஹாஸ்பிட்டலுக்கு போய், அந்தம்மா சடலத்தை வாங்கி, ஒரு வழியா நானே ஈமச் சடங்குகள முடிச்சு, அவங்க ஆத்மா சாந்திஅடையும்ங்கிற நம்பிக்கையோட ராத்திரி தூங்கப் போனேன். பொதுவா, இரவுல சரியா தூக்கம் இல்லாம அவதிப்படற எனக்கு, அன்னிக்கு அப்படி ஒரு நிம்மதியான தூக்கம். விடிஞ்சதும்... 'நாம செஞ்ச நல்ல காரியம்தான் மனசுக்கு அத்தனை நிம்மதி கொடுத்து உறங்க வெச்சுருக்கு' உணர்ந்த நான், 'இதைத் தொடரணும்'னு அந்த நிமிஷமே முடிவெடுத்தேன்!'' எனும் நீலா, அன்றே அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டார்.

''சென்னையில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன், ஹாஸ்பிட்டல், தொண்டு நிறுவனங்கள்னு எல்லாருக்கும் என்னோட போன் நம்பரைக் கொடுத்து, 'அனாதைப் பிணம், இறுதிக் காரியங்கள் செய்யக்கூட வசதியில்லாத ஏழைக் குடும்பத்துச் சடலம்னு எதுவா இருந்தாலும் தகவல் சொல்லுங்க’னு சொன்னேன். நிறைய போன் கால் வர ஆரம்பிச்சுது. உடனடியா அதையெல்லாம் அட்டென் பண்ணி, உரியவகையில சடலங்கள அடக்கம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

ஆம்புலன்ஸ்னா 600 ரூபாய், ஆட்டோனா 300 ரூபாய் செலவாகும். போகும்போதே கற்பூரம், தேங்காய், பழம், துணி, மாலை எல்லாம் வாங்கிட்டுப் போயிடுவேன். வீட்டை வாடகைக்கு விட்டு, அதுல கிடைக்கிற தொகையை வெச்சுதான் இந்த செலவுகளை சமாளிச்சேன்.

அனாதைகள் என்று யாருமில்லை !

ஒரு வருஷத்துல என்னோட சேவையைப் பார்த்துட்டு, இதுல கைகொடுக்க பலரும் முன் வர, 2005-ல் 'உத்ரா உதவும் சேவை மையம்’னு பெயர் பதிஞ்சு, தொண்டு நிறுவனமாக்கினேன். தொண்டுகளில் எல்லாம் பெரிய தொண்டா, இந்த பெண் வெட்டியான் வேலையைச் செய்துட்டு இருக்கேன். இத்தனை வருஷ அனுபவம், இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ற பலத்தையும் கொடுத்திருக்கு!'' என்பவர், வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட முதியோர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான கவுன்சலிங்கை சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஊட்டி, தேனி, வேலூர், பெங்களூர் என தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று அளித்து வருகிறார்.

''ஒரு முறை திண்டுக்கல்லில் கவுன்சலிங் முடிச்சப்போ, மூணு பெண்கள் மேடை ஏறி வந்து, 'இனி வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தற்கொலைக்கு முடிவுக்குப் போகமாட்டேன்’னு எழுதிக் கொடுத்து, என் கை பிடிச்சு அழுததை மறக்க முடியாது'' என்பவரின் சேவைகளைப் பாராட்டி 18-க்கும் மேற்பட்ட விருதுகள் குவிந்திருக்கின்றன!