Published:Updated:

'இந்தச் சூழ்நிலையிலயும் இவ்வளவு மார்க்கா?'

நம்பிக்கை பாடம் சொல்லும் அம்மணிகள்

'இந்தச் சூழ்நிலையிலயும் இவ்வளவு மார்க்கா?'

நம்பிக்கை பாடம் சொல்லும் அம்மணிகள்

Published:Updated:

இரா.கலைச்செல்வன், க.நாகப்பன்

'இந்தச் சூழ்நிலையிலயும் இவ்வளவு மார்க்கா?'

காலையில் அலார்ம் வைத்து படிப்பு. பள்ளியில் எட்டு மணி நேரப் படிப்பு. பின் ஸ்பெஷல் கிளாஸ். முடிந்ததும் டியூஷன். ரிவிஷன் டெஸ்ட்ஸ். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள்... என ஆண்டு முழுக்கப் படித்தும், 'ஐயோ... பரீட்சை வருதே... பயமா இருக்கே... நல்ல மார்க் வாங்கிடுவோமா..?’ என்று பதறும் பள்ளி உள்ளங்கள் இங்கு நிறைய. அவர்களுக்கெல்லாம் தைரியம் சொல்லத்தான் வருகிறார்கள் இந்த டுடோரியல் தங்கங்கள்!

குடும்பச் சூழ்நிலை, உடல்நிலை போன்ற காரணங்களினால் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போக, டுடோரியலில் படித்து நேரடியாக பொதுத்தேர்வு எழுதியவர்கள் இவர்கள். அட்டண்டன்ஸ் இல்லை. அசைன்மென்ட் இல்லை. பேரன்ட்ஸ் மீட்டிங் இல்லை. புரோகிரஸ் ரிப்போர்ட் இல்லை. ஆனாலும், தங்களின் பொறுப்பு உணர்ந்து படித்ததால் இவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்கள், ஆச்சர்யப்பட வைக்கின்றன!

சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த பவித்ரா, வேந்தன் டுடோரியல் காலேஜில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் இல்லத்தரசி. பத்தாவது பொதுத்தேர்வில் இவர் எடுத்த மதிப்பெண்கள்... 412.

'இந்தச் சூழ்நிலையிலயும் இவ்வளவு மார்க்கா?'
##~##

''குடும்பச் சூழ்நிலை காரணமா பாதியிலயே படிப்பை நிறுத்திட்டு, கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. சோர்ந்துடாம, 'ஸ்கூல்ல படிக்கலைனா என்ன... டுடோரியல்ல படிக்கலாம்’னு சேர்ந்தேன். படிப்பு தவிர கணவர், குடும்பம்னு சில பொறுப்புகளும் தோள் மேல இருந்தாலும், 'நம்மளால படிக்க முடியும்’னு நம்பிக்கை வெச்சேன். 'டுடோரியல்தானே... பாஸானா போதும்’னு நினைக்காம, அங்க சொல்லிக் கொடுக்கற பாடங்களைக் கவனமா உள்வாங்கினேன். மேக்ஸிமம் நேரம் படிச்சேன். ரிசல்ட் வந்தப்போ, ரொம்ப சந்தோஷம் எனக்கு. இப்போ, ப்ளஸ் டூ படிச்சுட்டு இருக்கேன். பிராக்டிகல், தியரினு ஸ்கூல்ல டீட்டெய்ல்டா படிக்கற அளவுக்கு வாய்ப்புகள் இல்லைதான். ஆனாலும், மனசிருக்கே..! 1,000 மார்க்குக்கு மேல வாங்கணும்னு சபதம் போட்டிருக்கேன். அடுத்ததா, ரெகுலர் காலேஜ்ல பி.காம். சேர ஆசை. ஐ.ஏ.எஸ். ஆகணுங்கறதுதான் என் லட்சியம்!'' என்றார் உறுதியான குரலில்.

சென்னை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த கீதாவின் குடும்பச் சூழ்நிலையும் அவருக்கு பள்ளி செல்லும் வாய்ப்பை வழங்காமல் போக, டுடோரியலில் சேர்ந்திருக்கிறார். ''எங்கப்பா மினி டெம்போ ஓட்டறாரு. என்னைப் படிக்க வைக்கறதுக்கான பொருளாதாரம் வீட்டுல இல்ல. ஸ்கூல்ல இருந்து நிப்பாட்டிட்டாங்க. மனசு உடைஞ்சு போயிட்டேன். அப்புறம் வீட்டுல நிலைமை கொஞ்சம் சரியாகவும், 'டுடோரியல்ல வேணா படிக்கிறியா?’னு கேட்டாங்க வீட்டுல. சந்தோஷமா கிளம்பினேன். 'நீங்க என்னை ஸ்கூலுக்கு அனுப்பல... அதனால மார்க் வாங்க முடியல’னு எல்லாம் எந்த சாக்கும் சொல்லாம, கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு 'பத்தாவதுல 400 மார்க்குக்கு மேல எடுத்தாகணும்’னு வெறியோட படிச்சேன். 399 மார்க் வாங்கிட்டேன்!

இப்போ ப்ளஸ் டூ படிக்கறேன். 1,050 மார்காவது எடுத்தாகணும்னு உழைச்சுட்டு இருக்கேன். அடுத்ததா, பி.எட். முடிச்சுட்டு டீச்சர் ஆகணுங்கறதுதான் என் ஆசை. என் ஸ்டூடன்ட்ஸ்கிட்ட எல்லாம், 'உங்க பெற்றோரும், ஸ்கூலும் ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன்னு உங்களுக்காக எவ்ளோ மெனக்கெடறாங்க. அதையெல்லாம் நல்லா பயன்படுத்திக்கிட்டு நம்பிக்கையோட படிக்கணும். நானெல்லாம் டுடோரியல்ல படிச்சே டீச்சர் ஆயிருக்கப்போ, உங்களால முடியாதா என்ன?’னு என்னையே ஒரு பாஸிட்டிவ் பாடமா அவங்களுக்கு சொல்லணும்...'' என்று நீண்ட நாள் திட்டத்துடன் தயாராகிக் கொண்டிருக்கிறார் கீதா.

கோவை, இந்துஸ்தான் கல்லூரியில் பி.சி.ஏ., படிக்கும் லலிதா, முன்னாள் டுடோரியல் மாணவி. ''மிடில் கிளாஸ் குடும்பம் எங்களோடது. நான் ஒன்பதாவது படிச்சப்போ, அப்பாவுக்கு வியாபாரத்துல ரொம்ப நஷ்டமாயிடுச்சு. 'ஏரோனாடிக்கல் இன்ஜினீயர்’ ஆகணுங்கற என் கனவு பலிக்காதுங்கறதை குடும்ப வறுமை உணர்த்த, பத்தாவது பரீட்சை நேரத்துல விபத்து ஒண்ணும் சேர்ந்துகிட்டு என்னை முடக்கிடுச்சு. ஆனாலும், கை வலி உயிர் போக பரீட்சை எழுதினேன். கேள்வித் தாளில் எல்லாமே தெரியும். மெதுவா எழுதறதால போதுமான நேரமிருக்காது. தேர்வறையிலயே உட்கார்ந்து அழுவேன். 356 மார்க்தான் வாங்க முடிந்தது'' என்பவரின் போராட்டமும், விடாமுயற்சியும் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்திருக்கிறது.

'இந்தச் சூழ்நிலையிலயும் இவ்வளவு மார்க்கா?'

''தொடர்ந்து படிக்க முடியல. பக்கத்து வீட்டுல இருந்த சின்ன பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுத்தேன். ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். ஓரளவுக்கு வீட்டுல நிலமை சரியாக, 'டுடோரியல்ல படிக்கறேன்’னு அப்பாகிட்ட சொல்லி, 'ஸ்ரீராம் டுடோரியல்’ல சேர்ந்தேன். அங்க சயின்ஸ் குரூப் இல்லாததால ஏரோனாடிக்கல் இன்ஜினீயர் கனவு மொத்தமா அழிஞ்சுது.

அக்கவுன்ட்ஸ் குரூப்ல சேர்ந்தேன். 'பிளஸ் ஒன்’ங்கற அடிப்படை படிப்பு இல்லாததால ரொம்பவே சிரமப்பட்டேன். காலை 3 மணிக்கே எழுந்து படிப்பேன். டுடோரியல்ல அரை நாள்தான் படிக்க முடியும்னாலும், காலையிலிருந்து சாயங்காலம் வரை அங்கயே இருப்பேன். அதன் பலனா பரீட்சையில 982 மார்க் எடுத்தேன். இந்துஸ்தான் காலேஜ்ல பி.சி.ஏ கிடைச்சது. முதல் செமஸ்டர்ல 75% வாங்கியிருக்கேன். நான் படிச்ச டுடோரியல் காலேஜுல படிக்கற மாணவர்களுக்கு அப்பப்போ பாடம் நடத்தறேன். 'ஸ்கூலுக்கு போக முடியலையேனு கவலைப்படாதீங்க... பாட புத்தகம் மட்டும் போதும் நாம நல்ல மார்க் வாங்க’னு நம்பிக்கை அடிக்கடி விதைக்கிறேன்'' என்றார் அக்கறையுடன்.

''பல சூழ்நிலை தடுமாற்றங்களுக்கு நடுவுல, டுடோரியல்ல படிச்ச எங்களாலயே இவ்வளவு மார்க் வாங்க முடியறபோது, பார்த்துப் பார்த்து படிக்க வைக்க பெற்றோரும், பள்ளியும் கிடைச்சிருக்க நீங்க இன்னும் நிறைய நிறைய மார்க் குவிக்க முடியும்தானே?!''

- பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த மூவரும் கொடுத்த நம்பிக்கை குளூக்கோஸ் இது!

படங்கள்: து.மாரியப்பன்