Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள் !

டாக்டர் ஷாலினி

##~##

'பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான் தனக்குப் பிறக்கும் பிள்ளைகளை நல்ல குடிமகன்களாக வளர்க்க முடியும்' என்ற காரணத்துக்காகவே தாகூர், பாரதி, பெரியார், நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட பெரியவர்கள்... பெண்ணின் திருமண வயதை உயர்த்தப் போராடினார்கள். ஆனால், ஒரு பெண்ணுக்கு 13 வயதிலேயே திருமணத்தை முடித்து, அவளை ஓர் ஆணுக்கு அடிமையாக்கிவிட்டால், அவள் கற்புக்கு வேலி போட்டுவிட்டதாக நம்பினார்கள் நம் முன்னோர்கள்.

உண்மை அதுவல்ல. திருமணம், காதலுக்கு முற்றுப் புள்ளியும் அல்ல. 13 வயதில் ஆரம்பித்து தொடர்ந்து வாழ்நாள் முழுக்க மீண்டும் மீண்டும், புதியவர்களுடன் துளிர்த்துக் கொண்டே இருக்க சாத்தியமுள்ள உணர்வுதான் காதல். அதன் இலக்கையும், இலக்கணத்தையும் பற்றி பேசுவதற்கு முன், 'என்னது... காதல் திரும்பத் திரும்ப துளிர்விட்டுக் கொண்டே இருக்குமா, இது எல்லாம் தமிழ் கலாசாரத்துக்கு அடுக்காதே?’ என்று போர்க்கொடி தூக்க சிலர் தயாராக இருக்கலாம். ஆனால், அறிவியல் உண்மைகள் என்பவை, மிகத்தெளிவாக கலாசார எல்லைக் கோடுகளை கடந்துதானே நிற்கின்றன.

பருவ வயது துவங்கும்போதே ஆரம்பிக்கும் காதல் வேட்கை... மதம், இனம், மொழி, பிராந்தியம் என்கிற எல்லா கட்டமைப்புகளையும் தகர்த்து, ஒருவர் உயிரோடு இருக்கும் கடைசி நாள் வரை நீடிக்கிறது. அதனால் எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் கொள்ளும் தன்மை மனிதர்களுக்கு உண்டு. ஏன் தெரியுமா? நாம் ஏற்கெனவே இந்தத் தொடரில் பேசிக்கொண்டது போல, மனிதக் காதல் என்பது பெரும்பாலும் தாய் - சேய் உறவின் இன்னோர் மீட்டுருவாக்கமே. அதனால் தான் மனித பெண்ணுக்கு காதல் பெருகிவிட்டால்... தன் காதலனை அவள் குழந்தையைப்போல பாவிக்கிறாள். அவனை கொஞ்சுவதில் ஆரம்பித்து, அவனுக்கு அறிவுரைகள் கூறுவது எல்லாமே அவனை தன் மகன் என்று பாவித்தே.

ரொமான்ஸ் ரகசியங்கள் !

பொதுவாக ஒரு தாய், தன் முதல் குழந்தையின் மீது கொட்டும் அதே பாசத்தை, தன் நூறாவது குழந்தையிடமும் பொழிவாள். அதே இலக்கணம்தான் காதல்களிலும், காதலன்களிலும்! இப்படி வற்றாமல் பாசத்தைப் பொழியும் தன்மை பெண்களுக்கு இருப்பதால்தான்... துணைவன் மாறி புதிய துணை கிடைக்கும்போதும் மீண்டும் அதே அன்பை ஆத்மார்த்த மாய் பெண்களால் தர முடிகிறது.

அதனால்தான் சொல்வதுண்டு... 'காதல் வயப்பட்ட பெண்களுக்கு கவுன்சலிங் தருவது எப்போதுமே கொஞ்சம் சுலபம். ஆனால், காதலில் தோல்வி வயப்பட்ட ஆணுக்கு ஆறுதல் சொல்வது எப்போதுமே கொஞ்சம் கஷ்டம்' என்று. காரணம் பெண்கள் டக்... டக்... என்று காதல் வயப்பட்டாலும், டக்... டக்... என்று

ரொமான்ஸ் ரகசியங்கள் !

காயம் மாறி நகர்ந்து கொண்டே போய்விடுகிறார்கள். ஆனால், ஆண்கள் நிறுத்தி நிதானமாகக் காதல் வயப்பட்டாலும், ஒரு தடவை அடிபட்டால்... அவர்களின் காயம் ஆற அதிக காலம் பிடிக்கிறது. அது பதின் பருவ காதலானாலும் சரி, பழுத்த வயது காதலானாலும் சரி.

'பழுத்த வயதில் கூட காதல் வருமா... நம்மூரிலுமா... பெண்களுக்குக் கூடவா?' என்றெல்லாம் நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால், எல்லா வயதிலும், எல்லா ஊர்களிலும் இரண்டு பாலினருக்குமே காதல் வரத்தானே செய்கிறது! 65 வயதில் காதல் வயப்பட்டு, அதை தடுத்து நிறுத்த அரும்பாடுபட்ட நம்மூர் பெண்மணிகள் பலரை எனக்குத் தெரியும். காதல் எந்த வயதில் வருகிறது என்பது அல்ல விஷயம், அதை எதற்காக வரவழைக்கிறது இயற்கை என்பதுதான் அதில் இருக்கும் உள் விஷயம்.

இயற்கையை பொறுத்தவரை காதல் என்பது ஓர் வேடந்தாங்கல் கூடு. ஆண் - பெண் என்ற இரண்டு எதிர்பாலினத்தவரும் இணைந்தே இருக்க இயற்கை ஏற்படுத்தும் மன்மத பசைதான் காதல் எனும் கெமிஸ்ட்ரி. கூடு இல்லை, குட்டி இல்லை, இணைந்தே இருக்க வேண்டிய தேவை இல்லை என்றால்... அப்போது அந்தக் காதலுக்கு பெரிய மரியாதையும் இருப்பதில்லை.

ஒரு காதல், திருமணத்தின் முன்பு இருந்ததா, திருமணத்துக்கு பிறகு ஏற்பட்டதா, கற்புக்காதலா, கள்ளக்காதலா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அந்த காதலுக்கு அவசியம் இருக்கிறதா? இந்த இருவர் காதலிப்பதினால், ரொமான்ஸ் செய்வதினால் இவர்கள் குட்டிகளுக்கு பிரயோஜனமா என்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறது இயற்கை.

எல்லாவற்றையும் போல இதற்கு பல விதிவிலக்குகள் உண்டு. ஆனால், அதுபற்றி எல்லாம் பேசுவதற்கு முன், உங்கள் ரொமான்ஸ் விகிதத்தை அதிகரித்துக் கொள்ள சில முக்கியமான டெக்னிக்குகளை நான் சொல்லியாக வேண்டும்!

- நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு