பிரீமியம் ஸ்டோரி
வெண்கலம் வென்ற தங்கங்கள் !
##~##

ஒலிம்பிக் 2012... மகளிர் உலகம் பெருமிதம்கொள்ளச் செய்த அற்புத நிகழ்வு! 116 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், இம்முறை கிட்டத்தட்ட 45% பெண்கள் பங்கேற்றது சிறப்புக்குரிய அம்சம். இதுவரை ஆண்களை மட்டுமே அனுப்பி வந்த சவுதி அரேபியா, கத்தார் மற்றும் புரூனே ஆகிய நாடுகள், முதன் முறையாக தங்கள் நாட்டுப் பிரதிநிதிகளாக பெண்களையும் சேர்த்துக் கொண்டது, கொண்டாட்டத்துக்குரியது.

மகளிர் சக்தியின் கை ஓங்கிய லண்டன் ஒலிம்பிக்கில், இந்தியாவுக்குக் கௌரவம் சேர்த்ததிலும் பெண்களின் பங்கு மகத்தானது. வறுமையைத் திறமையால் வென்ற மேரி கோம் இந்தியப் பெண்களின் ஆளுமைக்கும், விடாமுயற்சியால் வெற்றிக்கொடி நாட்டிய சாய்னா நேவால் நம் நாட்டு இளம் பெண்களின் உத்வேகத்துக்கும் சூப்பர் உதாரணங்கள்!

மெய்சிலிர்க்க வைத்த மேரி கோம் !

'உள்நாட்டினரால் கண்டுகொள்ளப்படாத எங்கள் மாநில வரைபடத்தை உலகுக்குக் காட்டியதற்காக தலைவணங்குகிறோம்!’ என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் சாதனையைக் கண்டு நெகிழ்கிறார்கள் மணிப்பூர் மக்கள். ஒலிம்பிக்கில் முதன்முதலாக மகளிர் குத்துச்சண்டை இந்தத் தடவை அறிமுகப்படுத்தப்பட, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் மீதான எதிர்பார்ப்பு மிகுதியானது. வெண்கலம் வென்றதன் மூலம் அதைப் பூர்த்தி செய்து இருக்கிறார், 29 வயது மேரி கோம். இரட்டைக் குழந்தைகளின் தாயான மேரி கோம், இந்தச் சிறப்பைப் பெறுவதற்காகக் கடந்துவந்த பாதை வியக்கத்தக்கது!

வெண்கலம் வென்ற தங்கங்கள் !

பெற்றோர்... மணிப்பூரின் கங்காதேய் கிராமத்தின் விவசாயக் கூலிகள். வறுமையில் உழன்ற மேரியின் ஆரம்ப கால லட்சியம் பதக்கங்கள் வாங்கிக் குவிப்பதல்ல, விளையாட்டில் பரிசுப் பணம் வாங்கி, பெற்றோருக்கு உதவ வேண்டும் என்பது மட்டும்தான். அதற்காக ஓட்டப் பந்தயம், அது... இது என எல்லா விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினார். அவருடைய வாழ்க்கையை பாக்ஸிங் நோக்கி திருப்பி பெருமை தேடிக்கொண்டவர் பாக்ஸிங் வீரர் டிங்கோ சிங். இவரும் மணிப்பூர்காரர்தான். ஆனால், கைக்குப் போடும் கிளவுஸ் வாங்க கூட பணமில்லாத சூழல் மேரிக்கு. அனைத்தையும் சமாளித்தார். இரண்டே வாரங்கள்தான். விளையாட்டின் அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்!

இவர் பாக்ஸிங் கற்றுக் கொள்வது வீட்டில் யாருக்குமே தெரியாது. ஒரு நாள் எதேச்சையாக பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த மேரியின் தந்தையின் கண்களின் தட்டுப்பட்டது ஒரு பெண், பதக்கத்துடன் சிரிக்கும் படம். உற்றுப் பார்த்தால்... மேரி கோம். மாநில அளவில் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்ற செய்தி அது. ஆனந்தப்படுவதற்குப் பதிலாக கோபம் முகத்தில் பொங்கியது. ''நீ குத்துச் சண்டை போடறியா? அப்புறம் யாரு உன்னை கல்யாணம் செய்வான்?’' என பல கவலைகள் தந்தைக்கு. ஆனால், தாய் ஆதரவுக் குரல் கொடுத்தார்.

வெண்கலம் வென்ற தங்கங்கள் !

எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். இவருடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது... இவருடைய கணவர் ஆன்லெர் கோம். குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு மனைவியையும் உற்சாகப்படுத்தும் இரட்டை வேலை அவருக்கு. அதுதான் லண்டன் ஒலிம்பிக் வரை, மேரி கோமை பயணிக்க வைத்தது!

ஒலிம்பிக் குத்துச்சண்டையைப் பொறுத்தவரை, 51 கிலோ, 60 கிலோ மற்றும் 75 கிலோ ஆகிய மூன்று பிரிவுகள் மட்டுமே சேர்க்கப்பட்டன. நாட்டுக்கு புகழ்சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, 48 கிலோ பிரிவில் இருந்த மேரி கோம், 51 கிலோ எடைப் பிரிவில் தகுதி பெற, தன் உடல் எடையைக் கூட்டினார். போட்டியில் தன்னைவிட உயரம் மிகுந்தவர்களையே பெரும்பாலும் சந்திக்க வேண்டும் என்பதால், உயரம் மிகுந்தவர்களைக் கொண்டே பயிற்சியில் ஈடுபட்டார்.

அரையிறுதிப் போட்டியில் தன்னைவிட எடையும் உயரமும் கூடுதலாக இருந்த பிரிட்டன் வீராங்கனை நிகோலாவிடம் போராடி வெண்கல பதக்கத்தைப் பெற்றிருக்கிறார். 'ஒட்டுமொத்த தேசமும் எனக்காக பிரார்த்தனை செய்தது. என்னால் தங்கத்துடன் வரமுடியவில்லை; என்னை மன்னித்துவிடுங்கள்!’ என்று மேரி சொன்னபோது, இந்தியர்கள் மெய்சிலிர்த்துக் கலங்கினார்கள்!

சொல்லிச் சாதித்த சாய்னா !

'ஒலிம்பிக் பேட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்’ என்ற மகத்தான சாதனையைச் செய்திருக்கிறார், இளம் வீராங்கனை சாய்னா நேவால். உலகத் தரநிலையில் 4-ம் இடத்தில் உள்ள சாய்னா, தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை வாங் ஜின்னின் வேகத்துக்கு ஈடுகொடுத்து விளையாடினார். எனினும், 18-21 என்ற கணக்கில் நூலிழையில் முதல் செட்டை இழந்தார். இரண்டாவது செட்டின் துவக்கத்தில், தன் கால் பிசகிக்கொண்டதால் போட்டியில் இருந்து சீன வீராங்கனை விலக... சாய்னா பக்கம் சாய்ந்தது வெற்றி. பதக்கம் வென்றதைக்கூட கொண்டாடாமல், சீன வீராங்கனையிடம் உடல் நிலையை விசாரித்து, அவரைக் கட்டி அணைத்து விடைபெற்ற சாய்னாவின் ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட்... ரியலி கிரேட்!

ஹரியானாவின் ஹிஸ்ஸார் எனும் ஊரில் பிறந்திருந்தாலும், ஹைதராபாத்தில்தான் வளர்ந்தார் சாய்னா. தந்தை ஹர்விர் சிங் ஒரு டாக்டர். அப்பா, அம்மா இருவரும் தேசிய அளவில் பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்றவர்கள். சாய்னா, எட்டு வயதில் பேட்மின்டன் மட்டையை இறுக்கமாகப் பிடித்து, இடைவிடாமல் சுழற்ற ஆரம்பித்தார். சிறுவயதிலிருந்தே சினிமாவுக்குச் சென்றது இல்லை. ஓய்வு நேரங்களில் விளையாட்டு மற்றும் செய்தி சேனல்களில் மட்டுமே சாய்னாவின் கவனம் இருக்கும்.

வெண்கலம் வென்ற தங்கங்கள் !

வெற்றித் தருணங்களில் சாய்னா மறக்காமல் உச்சரிக்கும் பெயர்... 'கோபிசந்த்'. முன்னாள் பேட்மின்டன் வீரரான இவர்தான், சாய்னாவின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் இருக்கும் பயிற்சியாளர்! கடந்த 2010 -ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்து சாம்பியன் பட்டங்களை வென்ற சாய்னா, 2011-ல் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தார். தொடர் தோல்வியால் துவண்டிருந்தவரை, விமர்சனங்களும் வாட்டியெடுத்தன. டென்மார்க்கில் ஒரு தோல்வியைச் சந்தித்துத் திரும்பிய சாய்னா, பயிற்சியாளர் கோபிசந்திடம் கண்ணீர்விட்டு அழுதார். ''இனி நான் பேட்மின்டன் பேட்டை தொடப்போவது இல்லை'' என்று கதறினார்.

நிதானம் காத்த கோபிசந்த், ''உன்னால் நிச்சயம் சாதிக்க முடியும். நீ ஒலிம்பிக் பதக்கம் வெல்வாய். அதற்கு நான் உத்தரவாதம். அதுவரை ஓயமாட்டேன்'' என்று சத்தியம் செய்தார். அந்த டானிக் வார்த்தைகளால் மீண்ட சாய்னா, தன் பயிற்சியாளரின் சத்தியத்தைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார்!

இந்தியாவுக்காக இரண்டு வெண்கலங்களை வென்று தாயகத்தைத் தலைநிமிரச் செய்திருக்கும் தங்கங்களுக்கு தலை வணக்கம்!  

வெண்கலம் வென்ற தங்கங்கள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு