Published:Updated:

வாட வைத்த மணவாழ்க்கை... வாழ வைத்த வைராக்கியம் !

வே.கிருஷ்ணவேணி படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஒரு பொண்ணுக்கு நேரக்கூடிய உச்சகட்ட துன்பம் எது தெரியுமா? 'உலகமே நீதான்'னு நம்பியிருந்த கணவர், திடீர்னு ஒருநாள் வேற ஒரு பொண்ணோட போயிடறதுதான்''

- துன்பம் நிரம்பியிருந்தன சென்னை, மடிப்பாக்கம் லட்சுமிபிரபாவின் வார்த்தைகளில்.

ஜன்னல் காற்றில் ஆடிக்கொண்டிருந்த திரைச்சீலையை சிறிது நேரம் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட 41 வயது லட்சுமிபிரபாவின் வாழ்க்கைப் பாதையில்... ஏமாற்றிய கணவர், வாட்டிய வறுமை, காலன் பறித்துக்கொண்ட மகன் என வலிகள் நிறைய. ஆனால், அதையெல்லாம் கடந்து... இன்று ஒரு வெற்றிப் பெண்மணியாக எழுந்து வந்திருக்கிறார். ஒரு தையல் மெஷினில் ஆரம்பித்த அவர் வாழ்க்கை... இப்போது 'ஹேமா ஆர்ட் அண்ட் கிராஃப்ட்’ மற்றும் 'ஹேமா பொட்டீக் ஷாப்' உரிமையாளராக உயர்த்தியிருக்கிறது.

'இதுவும் கடந்து போகும்’ என்று மீண்டு வந்திருக்கும் லட்சுமிபிரபாவின் கதை... தன்னம்பிக்கை விதை !

வாட வைத்த மணவாழ்க்கை... வாழ வைத்த வைராக்கியம் !

''எங்க வீட்டுல அஞ்சு பொண்ணுங்க. நான்தான் மூத்தவ. பத்தாவது படிச்சு முடிச்ச பிறகு, 17 வயசுலேயே தாய்மாமாவுக்கு கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க. ஒரு பொண்ணு, ஒரு பையன்னு ரெண்டு குழந்தைங்க. எந்தக் குறையும் இல்லாத வாழ்க்கைனு நினைச்சுக்கிட்டிருக்க, 11 வருஷத்துக்கு முன்ன திடீர்னு இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு அனாதையா விட்டுட்டுப் போயிட்டார்.

ஆனா, அதுக்காக நான் கலங்கல. கிணத்துலயும்... ரயில்லயும் விழுறவங்க வரிசையில சேராம... 'என்னை விட்டுட்டுப் போனவருக்கு கண்முன்னயே வாழ்ந்து காட்டணும்!’ங்கற வைராக்கியம் எனக்குள்ள தீயா பரவுச்சு'' என்பவருக்கு அப்போது இருந்த ஒரே பிடிமானம், தையல் தொழில்.

''தையல் மெஷின்ல சம்பாதிச்சுதான் புள்ளைகள படிக்க வெச்சு, குடும்பச் செலவுகளை சமாளிச்சேன். பசங்க ஸ்கூல் படிப்பை முடிச்சதும்... எங்கம்மா, அப்பாகூட பாண்டிச்சேரியில் போய் தங்கினேன். அங்கதான் கல்லூரிப் படிப்பை தொடர்ந்தாங்க. அதுவரை அடிப்படை தையல் வேலைகளை மட்டுமே பார்த்திட்டிருந்த நான், எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க், ஃபேஷன் டிசைனிங்னு கத்துக்கிட்டது அப்போதான். பி.பி.ஏ. படிச்சுட்டு இருந்த பொண்ணு... பார்ட் டைம்ல 'ஆர்ஜே’ வேலை பார்த்து, லேட்டஸ்ட்  தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தா. அதுக்குப் பிறகு நல்ல வருமானம் பார்க்க ஆரம்பிச்சேன். அப்போதான் என் வாழ்க்கையில் இன்னொரு மிகப் பெரிய இடி...'' என்றவரின் வார்த்தைகள் தடைபட்டு, பின் தொடர்ந்தன...

''என் பையன் சச்சின், பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் வருஷம் காலேஜ்ல சேர்ந்திருந்தான். அவனுக்கு திடீர்னு உடம்பு முடியாமப் போக, எல்லா டெஸ்ட்ஸும் எடுத்துப் பார்த்த டாக்டர்ருங்க... 'கேன்சர்'னு சொன்னாங்க. அழுது தவிக்கக்கூட அவகாசம் தராம மூணே மாசத்துல இறந்துட்டான். இந்த இழப்பு சுக்குநூறா என்னை கிழிச்சுப் போட்டுடுச்சு'' என்பவருக்கு கண்களில் நீர் திரையிட்டது.

வாட வைத்த மணவாழ்க்கை... வாழ வைத்த வைராக்கியம் !

''என் பொண்ணுதான், 'நமக்காக இல்லைனாலும், நம்மள அனாதையா விட்டுட்டுப் போனவங்களுக்கு முன்ன நல்லபடியா வாழ்ந்தே காட்டணும்’னு ஆறுதல் சொன்னா. இவளையாச்சும் நல்லபடியா கரையேத்தணும்னு மறுபடியும் போராட்டத்தை ஆரம்பிக்க சென்னைக்கு வந்தோம். முன்னைவிட அதிகமா கஷ்டப்பட்டாலும், என் பொண்ணு வாங்கிக் கொடுத்த மெஷினை முழுசா நம்பி களமிறங்கினேன்'' என்பவருக்கு பெரிய வெற்றிகள் வரத் துவங்கியிருக்கிறது.

''புதுப்புது விஷயங்களை கத்துக்கிட்டு, கஸ்டமர்கள அதிகரிச்சதோட... டெய்லரிங் கிளாஸும் எடுக்க ஆரம்பிச்சேன். ஆரி வொர்க், ஸ்டோன் வொர்க், தஞ்சாவூர் பெயின்ட்டிங், மிரர் வொர்க், ஃபர் டாய்ஸ், பிரைடல் வொர்க்குனு கத்துக்கிட்டு, மத்தவங்களுக்கும் கத்துக் கொடுத்தேன். அதுதான்... 'ஹேமா பொட்டீக்’ மற்றும் 'ஹேமா ஆர்ட் அண்ட் கிராஃப்ட்’ வரை வளர்ந்து நிக்குது. மாசம் 25 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறேன். முகூர்த்த மாதங்கள்ல இது இன்னும் அதிகமாகும். பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் கடவுள் சேர்த்துக் கொடுக்க, நல்லபடியா என் பொண்ணு கல்யாணத்தை முடிச்சேன்'' என்றவர்,

''விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவங்கனு கஷ்டத்துல இருக்கற பெண்களுக்கு விரும்பி வகுப்புகள் எடுக்கறதோட, என் கதையை அவங்களுக்குச் சொல்லி, அவங்களையும் வாழ்க்கைச் சுழல்ல துடுப்பு போட வைக்கிறேன்'' எனும்போது கண்கள் மலர்ந்தவர்,

''வாழ்க்கையில வறண்டு போன அத்தனை சந்தோஷங்களையும் இப்போ என் பேரன் யுவன் வெங்கடேஷ் மீட்டுக் கொடுத்திருக்கான். வாழ்க்கை அழகானதுதான்!''

- பல புயல்களையும் சந்தித்து வந்திருக்கும் லட்சுமிபிரபா சொல்லும்போது, அது இன்னும் அழகாக இருந்தது !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு