Published:Updated:

கட்டி இழுத்தால்... கப்பலும் நகரும் !

கூந்தல் ராணியின் கின்னஸ் சாதனைஆர்.ஷஃபி முன்னா படங்கள்: ராஜீவ் குப்தா

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

பெண்களின் கூந்தலை, அழகுடன் தொடர்புபடுத்துவதே வழக்கம். ஆனால், தன் கூந்தல் மூலம் பல வீரசாகசங்களைச் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் 28 வயது ராணி ரெய்க்வார். தலைமுடியில் பஸ், லாரி, ரயில் இன்ஜின், விமானம் மற்றும் கப்பல் என கட்டி இழுத்து, ஏற்கெனவே படைக்கப்பட்டிருக்கும் உலக சாதனைகளை முறியடித்துள்ள இவர், ஆச்சர்யத்தின் எல்லை!

போபாலில் வசிக்கும் ராணியை, அவள் விகடனுக் காக சந்தித்தோம். படிய வாரிய தலையுடன் வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

''பிறந்தது உ.பி மாநிலம், ஜான்சி அருகேயுள்ள ஜாஸ்லோம் கிராமம். பொதுப்பணித்துறையில் சாதாரண பணியாளராக இருந்தார் என் அப்பா. ஏழ்மையான குடும்பம்தான். மூத்த சகோதரிக்கு 11 வயதிலேயே மணம் முடித்தவர்கள், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க... நானோ, என் அம்மாவுடன் பிரம்மகுமாரி ஆசிரமங்களுக்குச் செல்வதிலேயே ஆர்வமாக இருந்தேன்.

கட்டி இழுத்தால்... கப்பலும் நகரும் !

ஒரு தடவை, ஆசிரமத்தில் நடந்த யாகத்துக்காக மணல் அள்ளுவது, செங்கற்களை கொண்டு வருவது என அனைவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். நானும் அதைச் செய்தபோது, விளையாட்டுக்காக ஒரு துணியில் ஐந்து செங்கற்களை வைத்து, அதன் இருமுனைகளை எனது இரட்டை ஜடைகளில் கட்டித் தூக்கினேன். அது பத்தாகி, இருபத்தைந்தாகி, ஐம்பதானது. பிறகு தள்ளுவண்டியில் நூறு செங்கற் களை வைத்து, ஜடையில் கட்டி இழுத்தேன். ஒருமுறை என் தந்தையைக் காண, அவருடைய

கட்டி இழுத்தால்... கப்பலும் நகரும் !

அலுவலகத்தில் இருந்து ஜீப்பில் சில நண்பர்கள் வந்திருந்தனர். அதையும் கூந்தலில் கட்டி இழுத்தேன். இதை என்னுடைய பள்ளியில் சொன்னபிறகு, அங்கேயும் ஜீப்பை இழுத்துக் காண்பிக்க... என்னுடைய சாதனை முதன்முறையாக அரங்கேறியது!'' எனும் ராணிக்கு, பாராட்டுக்குப் பதில் பழிச்சொல்லே கிடைத்திருக்கிறது.

''ஒரு சாதாரண சிறுமி, தன் கூந்தலில் இவ்வளவு எடைகளை இழுக்க முடியாது... பேய் பிடித்திருப்பதால்தான் இதைச் செய்ய முடிகிறது என்றெல்லாம் ஊர் மக்கள் பலவாறாகப் பேசினார்கள். அதை நம்பிய என் வீட்டாரும், மந்திரவாதியிடம் கூட்டிச் சென்று, தாயத்து கட்டினார்கள். 'ஜடைகளில் எதையும் இழுக்கவோ, தூக்கவோ கூடாது' என நிபந்தனையும் விதித்து, வீட்டிலேயே அடைத்தனர். என் திறமையைப் புரிந்து கொண்டு ஊக்குவிக்காததுடன், பள்ளியிலிருந் தும் நீக்கிவிட்டனர். இரண்டு ஆண்டுகள் வரை வீட்டை விட்டே வெளியில் அனுப்பாமல் இருந்தனர்'' எனும்போது ராணியின் கண்களில் பொங்குகிறது சோக ஊற்று!

அப்படியும் மனம் தளராமல், ஆசிரமம் செல்லும் சாக்கில், போபால் வந்து சேர்ந்திருக் கிறார் ராணி. ஆசிரமத்தின் உறுதுணையுடன், பொது இடத்தில் ஒரு மினி பஸ்ஸை தலை முடியால் இழுத்துக் காட்ட, அவருடைய சாதனைக்கு உரிய பாராட்டுக்கள் கிடைத்தன. அடுத்தடுத்து... லாரி, விமானம், கப்பல், சதாப்தி ரயில் இன்ஜின் என ஜடைகளில் கட்டி இழுத்துக் காட்டியிருக்கிறார். கொரியா நாட்டுக்குச் சென்றவர், பயணிகள் நிரம்பிய இரண்டு அடுக்கு பேருந்தை இழுத்துக் காட்ட, உலக அளவில் பாராட்டுகள் குவிய ஆரம்பித்து விட்டன.

''எந்த வாகனமாக இருந்தாலும், அதில் கயிறைக் கட்டி, அதன் மறுமுனையை என் ஜடைகள் இரண்டையும் இணைத்து முடிப்பேன். அந்த முடிச்சு அவிழாமல் இருக்கும் பொருட்டு அதன் மீது ஒரு சிறு துண்டையும் கட்டுவேன். பிறகு, வாகனத்தைப் பார்த்தபடி நின்று, என் இரு கைகளையும் தொடைகளில் அழுத்தி பேலன்ஸ் செய்தபடி மெள்ள பின்னோக்கி நகர... அந்த வாகனமும் என்னை நோக்கி அழகாக நகரத் தொடங்கும்!'' என்று சாகச சூட்சமம் சொன்ன ராணி கின்னஸிலும் இடம்பிடித்திருக்கிறார்.

கட்டி இழுத்தால்... கப்பலும் நகரும் !

''ஏற்கெனவே வெறும் எட்டு டன் எடையை மட்டுமே தனது தலைமுடியால் இழுத்து கின்னஸ் புக்கில் சாதனையை பதிவு செய்திருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஓர் ஆண். இதை முறியடிக்க நினைத்து எண்பதுக்கும் அதிகமான டன் எடையுள்ளவற்றை இழுக்க தயார் என்றேன். ஆனால், கின்னஸிலிருந்து வந்திருந்தவர்கள்... அவ்வளவு எடை தேவை இல்லை எனக் கூறிவிடவே... வெறும் லாரியுடனான டிராலியில் 80 கிராமவாசிகளை அமர வைத்து இழுத்துக் காட்டி, எட்டரை டன்களில் சாதனையை பதிவு செய்தேன்'' என்று கொஞ்சம் ஏக்கம் கலந்த குரலில் சொன்ன ராணியிடம், கூந்தலின் ரகசியம் கேட்டால், பெருமையுடன் கொஞ்சம் வெட்கமும் ஏறுகிறது முகத்தில்.

கட்டி இழுத்தால்... கப்பலும் நகரும் !

''வடஇந்திய பெண்கள், கேசத்துக்கு சரிவர எண்ணெயே தடவுவதில்லை. தென் இந்தியாவில் சீராக தேங்காய் எண்ணெய் தடவுவதாகவும், அவர்களின் கூந்தல் நீளமாகவும் உறுதியாகவும் இருக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். மிக அழகு!'' என்று சிலிர்க்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு