Published:Updated:

இனித்தது...இயற்கை ஞாயிறு !

படங்கள்: ரா.மூகாம்பிகை சங்கீதா ஸ்ரீராம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கான்கிரீட் காடாகிவிட்ட சென்னையில், இயற்கையின் அருளை, அற்புதத்தை புரியவைக்க புலர்ந்தது அந்நாள். அது, சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள செயல்பாட்டாளர்கள் இணைந்திருக்கும் 'பூவுலகின் நண்பர்கள்’ தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைத்த 'ஐந்திணை சுற்றுச்சூழல் விழா!’

லயோலா கல்லூரியில் அந்த ஞாயிறு காலை, எளிமையான சணல் துணியால் செய்யப்பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடு ரசிக்க வைத்தது.  அரங்கில் உட்காரவே இடம் இல்லாத அளவுக்குக் கூட்டம். 'சுற்றுச்சூழலுக்காக, ஒரு ஞாயிற்றுக்கிழமையை செலவழிக்கத் தயாராக இருப்பவர்கள் சென்னையில் இத்தனை பேரா..?!’ என்று மனதுக்கு உற்சாகமாக இருந்தது. காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி, ஒளிப்படக் காட்சி, நாடகங்கள் என்று கண்களுக்கு விருந்து கிடைக்க, படப் புத்தகத்தைப் புரட்டிய குழந்தைகளின் பரவசம்... அனைவருக்கும்!

இனித்தது...இயற்கை ஞாயிறு !

ஆச்சார்யா வினோபா பாவே அவர்களின் 'பூமிதான இயக்க'த்தில், அவருடன் சேர்ந்து பணியாற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் பேச்சும், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரின் உரையும்... 'மனித இனம் வளர்ச்சி என்கிற பெயரில் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறது!’ என்கிற கசப்பான உண்மைகளை உணர வைத்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளின் வரலாற்று உண்மைகளையும், அவற்றின் இன்றைய அழிவு நிலையையும் பற்றி சிறப்பு விருந்தினர்கள் உருக்கமாக பேசியது... உருக வைத்தது!

இனித்தது...இயற்கை ஞாயிறு !

அடுத்தது... மதிய உணவு அறிவிப்பு. 'கார்ன் ஃப்ளேக்ஸ், ஓட்ஸ், பீட்ஸா, பர்கர், கோக்....' என்றே நாலுகால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மக்களுக்கு... ஐந்திணைகளின் உணவு வகைகளையும் பரிமாறிய அந்தப் பந்தி, நிச்சயம் ஒரு நல்லனுபவமே! தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, கம்பு என்று 'பசுமைப் புரட்சி'க்கு முந்தைய காலத்தில் இங்கே பரவலாகக் கிடைத்த இந்த தானியங்களின் பெயர்களை, பெரியவர்கள் சொல்லியும் புத்தகத்தில் படித்துமே பழக்கப்பட்டிருந்த பலருக்கும், அது தங்கள் தட்டில் பரிமாறப்பட்டபோது, மகிழ்விலும் மகிழ்வு! உணவு ஸ்டால்களில் அலைமோதிய

இனித்தது...இயற்கை ஞாயிறு !

கூட்டத்தைப் பார்த்தபோது, முயற்சித்தால்... பீட்ஸாக்களையும், பர்கர்களையும் ஒதுக்கித் தள்ள முடியும் என்ற நம்பிக்கை முளைவிட்டது.

நிகழ்ச்சி என்றாலே... லைட் மியூசிக், ஸ்டார் நைட் என்றாகிவிட்ட நகரத்துவாசிகளை... கொல்லிமலை மலையாளி பழங்குடிகளின் சேர்வையாட்டம் கட்டிப்போட்டது ஆச்சர்யமே!

நிகழ்ச்சி முடிந்து கிளம்புகையில், பச்சை பூமியை மீட்டெடுக்கும் பொறுப்பை அனைவரின் மனதிலும் ஏற்றிஇருந்தது, 'ஐந்திணை சுற்றுச்சூழல் விழா’வின் வெற்றி! 'பூவுலகின் நண்பர்களு’க்கு பாராட்டுக்கள்!

பின்குறிப்பு: குளுமையான, வெளிச்சமான நாளன்று, மரங்கள் நிறைந்த இயற்கையான சூழல் இருக்கையில், கதவுகளை அடைத்து செயற்கை மின் விளக்குகள் எரிய, குளிர்சாதன அரங்கில் நிகழ்ச்சி நடந்தது மட்டும் சிறு நெருடல்!

இனித்தது...இயற்கை ஞாயிறு !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு