Published:Updated:

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

'விடிந்தது முடியும்... முடிந்தது விடியம் !'

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

'விடிந்தது முடியும்... முடிந்தது விடியம் !'

Published:Updated:

என்  டைரி  244

தனிமையிலும் தனிமை... கொடுமையிலும் கொடுமை !

வாசகிகள் பக்கம்

என் டைரி 243-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

இடைநிலைப் பள்ளி ஆசிரியை நான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, சித்தியின் பராமரிப்பில், பாசம் என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தேன். மிலிட்டரி ஆபீஸருடன் மணம் முடிந்தது. ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும் கணவருக்கு, மனைவியின் பாசமும், தவிப்பும் புரியாததுதான் வேதனை. கடமைக்குப் பேசி, ஊர் திரும்பி விடுவார்.

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
##~##

இதற்கு நடுவே எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனக்குக் கிடைக்காத அன்பு அனைத்தையும் அவளுக்குப் பொழிந்து வளர்த்தேன். ஆனால், அதிலும் விதி விளையாடி, ஆறு வயதில் கடுமையான மலேரியா காய்ச்சல் காரணமாக அநியாயமாக அவள் உயிரிழக்க... என் மொத்த சந்தோஷமும் மீண்டும் மரித்தது.

அதன் பின் ஆண்டுக்கு ஒரு தடவை அவர் ஊருக்கு வருவதுகூட அரிதாகிவிட, வாழ்க்கையிலிருந்த பிடிப்பே விட்டுப் போய்விட்டது. வெறுமையைப் போக்க, எதேச்சையாக ஒரு புத்தகத்தில் இருந்த படத்தை வரைந்து பார்த்தேன்... அது அவ்வளவு நேர்த்தியாக வந்து என்னை ஆச்சர்யப்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பின் என் மனதில் துளிர்த்த முதல், சிறு சந்தோஷம் அது. அதன்பிறகு, என் ஓவியங்கள்தான் நாட்களை நகர்த்தின. சென்ற வருடம் அவர் வந்திருந்தபோது ஆர்வமாக அவற்றைக் காட்டினேன். ''காசை ஏன் இப்படி கரியாக்கற..?'' என்றார் வெறுப்புடன். மீண்டும் ரணப்பட்டது மனது.

இந்நிலையில், சக ஆசிரியை தோழி என் ஓவியங்களைப் பார்த்து பாராட்டியதோடு, ஓவிய ஈடுபாடுள்ள தன் உறவினரிடம் அறிமுகப்படுத்தினாள். அவர் ஆசானாக நின்று மேலும் மெருகேற்றினார். ஓவியக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்தார். நல்ல தோழனாக என்னிடம் பழகியவரிடம் என் துக்க பக்கங்களைப் பகிர்ந்துகொள்ள, பாஸிட்டிவ் நம்பிக்கை கூறினார். அவரின் மனைவி, பிள்ளைகளும் என்னிடம் சிநேகமானார்கள். அது என் வாழ்க்கையில் புது வசந்தத்தைச் சேர்த்தது.

இடையில், கள்ளமில்லா இந்த நட்பில் என் புகுந்த வீட்டினர் புழுதியைத் தூற்ற... ''இனி உனக்கு அந்த நட்பு வேண்டாம்!'' என்று கண்டித்து, வழக்கம்போல ஊர் திரும்பிட்டார் கணவர். நண்பரும் சூழ்நிலை உணர்ந்து விலகினார். மீண்டும் தனிமை... கொடுமை!

சமுதாயத்தின் தவறான பார்வையால் நல்ல நட்பை இழந்ததின் நியாயம் கேட்டு குமுறுகிறது என் மனம். அதற்கு என்ன பதில் சொல்லட்டும் நான்..?

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத 'அவள்’ வாசகி

 என் டைரி 243ன் சுருக்கம்...

''வசதியான வீட்டில் பிறந்த செல்ல மகள் நான். கல்லூரி காலத்தில் வடமாநிலத்துக்கு என்.எஸ்.எஸ். கேம்ப் சென்றபோது, அநாதை இல்லத் தில் சேவையாற்றிக் கொண்டிருந்த மனிதரைச் சந்தித்தேன். அவர் மீது காதல் கொண்டு வீட்டின் எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்தேன். அழகான ஆண் குழந்தைக்கு நான் தாயான நிலையில், ஆக்ஸிடென்ட்டில் என்னவர் இறந்துவிட, அந்த ஹோமிலேயே தங்கி வேலை பார்க்கிறேன். இந்நிலையில், என்னைத் தேடி வந்த என் அம்மா, 'வேறு வாழ்க்கை அமைச்சுக்கலாம். குழந்தையை அநாதை இல்லத்தி       லேயே விட்டுட்டு வந்துடு’ என்கிறார். நிகழ்கால சூழல், எதிர்கால பயம் என்னை வாட்ட, பிள்ளைக்காக வாழ்வதா... பிற சுகங்களுக்காக வாழ்வதா? என்று தடுமாறுகிறேன். வழி சொல்லுங்கள் தோழிகளே!''

'தந்தையில்லா குழந்தை... பாதி அநாதை; தாயில்லாக் குழந்தை முழு அநாதை’ என்பார்கள். விதியின் சதியால், கணவரை இழந்துவிட்டாய். அவர் விட்டுச் சென்ற நற்பணியைத் தொடர்ந்து செய்து, நீ பெற்றெடுத்த சிங்கக் குட்டியை சீராட்டி, பாராட்டி வளர்ப்பதை விடவா சிறந்த பணி காத்திருக்கிறது..? எங்கள் முன் வைத்த கேள்வியை மாற்றிக் கொண்டு குழந்தைக்காக வாழ கற்றுக் கொள்!

- பி.கீதா, சென்னை-68

காதலித்து, கரம் பிடித்தபோது இருந்த உன் துணிச்சல்... இப்போது எங்கே போனது? ஒரு நிமிடம் நிதானமாக யோசித்துப் பார். தன் பெண் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் உன் அம்மாவைப் போல், நீ உன் குழந்தை விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டாமா? அரவணைக்க ஆயிரம் பேர் இருந்தாலும், தாயின் இடத்தை எவராலும் ஈடு செய்ய முடியாது. மறுமணம் செய்து கொள்ள ஆசை ஏற்பட்டாலும், அதில் தவறில்லை. குழந்தையோடு, உன்னையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பரந்த மனம் படைத்தவர் வரும்வரை பொறுமையாகக் காத்திரு.

- நாகை சந்திரா, நாகப்பட்டினம்

நிகழ்கால சூழல் மற்றும் எதிர்கால பயம் இரண்டையும் தவிர்த்து, பிள்ளைக்காக வாழ்வதே வாழ்க்கை. அம்மாவிடம் எடுத்துச் சொல்லுங்கள்... 'வந்தால் குழந்தையுடன்தான் வருவேன்’ என்று. அவரும் ஒரு தாய்தான். காலம் அவருக்கு புரிய வைக்கும். காலம் மாறும். நல்ல உள்ளம் கொண்ட ஆண்கள் யாராவது உங்களை குழந்தையுடன் ஏற்கலாம். அப்படி இல்லாவிட்டால்... மன உறுதியுடன் பிள்ளையை வளர்த்து சான்றோனாக்கி பெருமிதப்படுங்கள்.

- ஆர்.மீனலதா, மும்பை

விடிந்த பொழுது முடியாமலும் இருப்பதில்லை. முடிந்த பொழுது விடியாமலும் போவதில்லை. எந்த பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு. தேவை... அமைதியும், ஆழ்ந்து சிந்திக்கும் யோசனையும்தான். உங்கள் பிள்ளையின் முகத்தில் உன் கணவரைப் பார். அவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கோழையாக இல்லாமல், எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வரவழைத்துக் கொள். அதுவே உன்னை வழி நடத்தும்!

- வத்சலா சதாசிவன், -சென்னை-64