Published:Updated:

கலப்படமில்லாத காய்கறிகள்...கண்டுபிடிக்கும் சூத்திரங்கள் !

ஜி.பிரபு படங்கள்: வி.ராஜேஷ், வீ.சிவக்குமார்

 ##~##

புவி வெப்பமயமாதல், மனிதர்களுக்கு பரவும் பலவிதமான ஆட்கொல்லி நோய்கள், இளம் வயதிலேயே முதுமை... எனப் பலவற்றுக்கும் சொல்லப்படும் ஒரே காரணம்... 'நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகிவிட்டோம்’ என்பதுதான். உலகம் முழுக்கவே இத்தகைய மாற்றங்களால் பாதிக்கப்பட்டதன் விளைவு... உண்மையை உணர்ந்து அனைவரும் பின்னோக்கிப் பயணிக்க வேண்டிய சூழலை உணர ஆரம்பித்திருக்கிறோம்.

குறிப்பாக, பெருநகரங்களில் இயற்கை பற்றிய விழிப்பு உணர்வு அதிகமாக இருப்பதால், இயற்கை உணவு, இயற்கை காய்கறி, இயற்கை பால்... என தேடித் தேடி வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் நகரவாசிகள். ஆனால், தேவை பெருகும்போது கலப்படமும் ஏமாற்று வேலைகளும் பெருகும் என்பதும் இயற்கைதானே. அப்படிப்பட்ட சூழ்நிலையில், 'எப்படிக் கண்டுபிடிப்பது இயற்கை விளைபொருட்களை?’ என்பதுதான் பலருக்கும் எழும் கேள்வி.

இதுபற்றி இங்கே விளக்குகிறார், கோயம்புத்தூரில் உள்ள 'ஸ்ரீவத்சா ஆர்கானிக் பண்ணை’யின் உரிமையாளர், சாந்தா ராமசாமி. ''காய்கறிகளைப் பார்த்த உடனே... இயற்கை விவசாயத்தில் விளைந்ததா, ரசயான உரம், பூச்சிக் கொல்லி போட்டு விளைந்ததானு கண்டுபிடிக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும், சில விஷயங் களை டெஸ்ட் பண்ணிப் பார்த்து, ஓரளவுக்கு உறுதி பண்ணிக்கிட்டு, கடைக்காரங்க மேல நம்பிக்கை வந்த பிறகு, தொடர்ந்து வாங்கிக்கலாம். ஏன்னா,     நாம இயற்கை விளைபொருள்னு கூடுதல் விலை கொடுத்து வாங்கியும் ஏமாந்துடக் கூடாது பாருங்க.

கலப்படமில்லாத காய்கறிகள்...கண்டுபிடிக்கும் சூத்திரங்கள் !

அமெரிக்காவுல ஆர்கானிக் சர்டிஃபிகேட் வாங்கின காய்கறிகளை, லேபிள் பண்ணி... டீப் ஃப்ரீஸர்ல வெச்சுதான் விக்கிறாங்க. ஒருவேளை நமக்கு சந்தேகம் வந்தா, அந்த லேபிளை வெச்சு கோர்ட்டுக்குகூட போகலாம். நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்கெனவே இயற்கை விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கற நிலையில, ஃப்ரீஸர், பாக்கெட் பண்றதெல்லாம் இன்னும் காஸ்ட்லி. அதனால இங்க நம்பிக்கைதான் முக்கியம்.

இயற்கைனு சொன்னதுமே என்ன விலை கொடுத்தும் வாங்கிடாம, 'எங்கயிருந்து வருது, ஆர்கானிக் சர்டிஃபிகேட் இருக்கா..?’னு நாம கேள்விகள் கேட்டா, கடைக்காரங்க துணிஞ்சு ஏமாத்த மாட்டாங்க'' என்ற சாந்தா, இயற்கை விளைபொருட்களை கண்டுபிடிக்கும் சில சூட்சமங்களைக் கற்றுத் தந்தார்.

''பொதுவா இயற்கையில விளைஞ்ச காய்கறிகள், பழங்களோட மேல்தோல் திக்கா இருக்கும். இயற்கை காய்கறி, பழங்கள்லாம் பார்க்க 'பளபள’னு அட்ராக்டிவா இருக்காது. உதாரணத்துக்கு, இயற்கை சாத்துகுடி பழம் பிரவுன் கலரா இருக்கும். இந்த பிரவுன்தான் நேச்சுரல் பொட்டாஷ். தோலை எடுத்துட்டுப் பாத்தா உள்ள நல்லா இருக்கும். இயற்கை விளைபொருட்கள் சீக்கிரம் அழுகாது; அடிபட்ட இடம் மட்டும்தான் லேசா அழுகுமே தவிர, பழம் முழுக்க கெட்டுப் போகாது.

இதையெல்லாம் பார்த்ததும் கண்டுபிடிச்சுட முடியாது. வாங்கி ரெண்டு நாள் வெச்சிருந்து பார்த்துதான் கண்டுபிடிக்க முடியும். நாலு நாட்கள் அப்படியே ரூம் டெம்பரேச்சர்ல வெச்சுருந்தாகூட காய்கறிகளோட தோல்தான் சுருங்குமே தவிர, காயோ, பழமோ அழுகாது. காய்கறி, பழங்களோட மேல் தோல் சுருங்கியிருந்தாலும்... அரை மணி நேரம் தண்ணிக்குள்ள வெச்சுருந்தா, ஃப்ரெஷ்ஷாயிடும். கீரைகள் பார்க்க வாடி வதங்கின மாதிரிதான் இருக்கும். அதை ஒரு ராத்திரி முழுக்க பக்கெட் தண்ணிக்குள்ள வெச்சுருந்தாலும்... மறுநாள் காலையில அழுகாம ஃப்ரெஷ்ஷா இருக்கும். ஆனா, ரசாயனத்துல விளைஞ்ச கீரையை இப்படி வெச்சுருந்தா அழுகிப் போயிடும். இதேமாதிரி, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியையும் டெஸ்ட் பண்ணிக்கலாம்'' என்று அழகாக யுக்திகளை எடுத்துத் தந்தவர்... வாசனையையும் கண்டுபிடிக்கும் கருவியாகச் சொன்னார்.

கலப்படமில்லாத காய்கறிகள்...கண்டுபிடிக்கும் சூத்திரங்கள் !

''காய்கறிகளை முகர்ந்து பார்த்தால் ரசாயன ஸ்மெல் தெரிய வாய்ப்பிருக்கு. வெங்காயத்துல இந்த ஸ்மெல் ரொம்ப நல்லா தெரியும். இயற்கை அரிசியில சமைச்ச சாதம்... ரெண்டு நாள் ஆனாலும் ரூம் டெம்பரேச்சர்ல கெட்டுப் போகாது. வடிகஞ்சிகூட கெட்டுப் போகாது.

அதிகமா மக்கள் ஏமாறுற ஒரு பொருள்... தேன். இதையும் முகர்ந்து பார்த்து பூக்களோட மகரந்த வாசம் வர்றதை வெச்சுக் கண்டுபிடிக்கலாம். தவிர, சுத்தமான தேனா இருந்தா... தண்ணியில் ரெண்டு சொட்டு விட்டு பாருங்க. அது அப்படியே கரையாம இருக்கும்'' என்ற சாரதா,

''பொதுவா, விவசாயிகளே நடத்துற இயற்கை விளைபொருள் கடைகள்ல, வெளி பொருட்களை விற்பனை செய்றதில்லை.  கமர்ஷியலா நடத்தறவங்கள்ல சிலர், அதிக லாபத்துக்காக கம்பெனி தயாரிப்புகளையும் விற்பனை பண்ண வாய்ப்பிருக்கு. இப்படி செய்றது ரொம்ப ரொம்ப தப்பு. நம்பிக்கை துரோகமும்கூட!'' என்றார் நிறைவாக.  

இதுதான் ஒரிஜினல் நாட்டுக்கோழி!

'பிராய்லர் கோழி சாப்பிட்டால்... உடலுக்கு பலவிதமான பிரச்னைகள் வரும்' என்றொரு செய்தி பரவிக் கிடப்பதால்... நாட்டுக்கோழி மீது பலரின் பார்வையும் திரும்பி இருக்கிறது. ஆனால், 'நாட்டுக்கோழி' என்கிற பெயரிலும் ஏமாற்றுவேலை நடப்பதுதான் கொடுமை. அதைப்பற்றி விளக்குகிறார், தேனி மாவட்ட உழவர் பயிற்சி மையத்தின் தலைவர் டாக்டர் பீர்முகமது.

'பொதுவா, பிராய்லர் கோழியை கொட்டகைக்குள்ள அடைச்சு வெச்சு, நேரா நேரத்துக்கு 'கம்பெனித் தீவனம்’ மட்டும் கொடுத்து வளர்ப்பாங்க. தீவனத்துல, வளர்ச்சிக்கான மருந்துகளையும் சேர்ப்பாங்க. இந்த ரசாயனங்களோட எச்சம் கறியில சேர்ந்திருக்கும்.  இந்தக் காரணங்களாலதான், பிராய்லர் கறியை சாப்பிடறவங்களுக்கு நிறைய பாதிப்புகள் வர்றதா சொல்றாங்க.

கலப்படமில்லாத காய்கறிகள்...கண்டுபிடிக்கும் சூத்திரங்கள் !

இந்த நிலையில, எல்லாரோட கவனமும் நாட்டுக்கோழி பக்கம் திரும்பவே... அதுலயும் வில்லங்கம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாட்டுக்கோழிகள், அலைஞ்சு திரிஞ்சு... சின்னச் சின்ன செடிகள், புழு, பூச்சி...னு பிடிச்சுச் சாப்பிடும். அதனாலதான் அதோட கறியில கொழுப்பு கம்மியாவும்... புரதம் அதிகமாவும் இருக்கும். நல்ல சுவையாவும் இருக்கும். வீட்டுக்கு வீடு பத்து கோழிகளை வெச்சுருப்பாங்க. காலையில திறந்துவிட்டா தானா மேய்ஞ்சுட்டு சாயங்காலம்தான் வீட்டுக்கு வரும். கூடைக்குள்ள அடைச்சு வெப்பாங்க.

ஆனா, இப்போ தேவை அதிகமா இருக்கறதால, நாட்டுக்கோழிகளையும், கலப்பின நாட்டுக்கோழிகளையும் பிராய்லர் கோழி மாதிரியே கொட்டகைக்குள்ள மொத்தமா அடைச்சு வெச்சு... கம்பெனி தீவனம், மருந்தெல்லாம் கொடுத்து வளர்க்கறாங்க. இதனால, நாட்டுக்கோழியோட தன்மையே மாறிடும். பிராய்லர் கறியை சாப்பிடுறதால வர்ற பிரச்னைகளும் வரும். அதனால, கிராமச் சந்தைகள்ல அல்லது தோட்டத்துல வளர்க்கற அறிமுகமான நபர்கள் மூலமா நாட்டுக்கோழிகளை வாங்கறது நல்லது'' என்ற பீர்முகமது, நகரவாசிகளுக்கு சந்தைகள் சாத்தியமில்லை என்பதால், ஒரிஜினல் நாட்டுக்கோழியை கண்டுபிடிக்க ஒரு க்ளூ கொடுத்தார். அது -

''நாட்டுக்கோழிகளுக்கு இயல்பாவே கொத்தி, சண்டை போட்டுக்குற பழக்கம் உண்டு. பண்ணைகள்ல மொத்தமா அடைச்சு வளர்க்குறப்போ... சண்டையால ஏகப்பட்ட கோழிகள் இறந்துடும். இதைத் தடுக்குறதுக்காக கோழிகளோட அலகை சூடான மண்வெட்டியில தீய்ச்சு விடுவாங்க; அல்லது முனையை பிரத்யேகமான கட்டர் மூலமா வெட்டி விடுவாங்க. இயற்கையா வளர்ந்த நாட்டுக்கோழிக்கு அலகோட முனை கூர்மையா இருக்கும். பண்ணையில வளர்ந்த நாட்டுக்கோழிக்கு அலகோட முனை சப்பையா, வடிவமில்லாம இருக்கும். இதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம்.''

அட கொடுமையே!

அடுத்த கட்டுரைக்கு