Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள் !

டாக்டர் ஷாலினி

##~##

உங்களை, நீங்களே கொஞ்சமாவது சந்தோஷமாக்கிக் கொள்ள ஆரம்பித்துவிட்டீர்களா? இனி, அடுத்த ரொமான்ஸ் ரகசியத்துக்குள் போகலாம்!

பாரதியார் காலத்தில் பெண்ணின் திருமண வயது 11 - 13 மட்டுமே. ஆணுக்கு 13 - 18-க்குள். அதாவது, அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயதுக்கு வருவதற்கு முன்போ, வந்த உடனேயோ திருமணம் நடந்துவிடும். ஆக, பருவ ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கும்போதே, பக்கத்திலேயே ஒரு பார்ட்னர் ரெடியாக இருக்கும்படி இருந்தது அக்கால திருமண அமைப்பு.

குடும்பக் கட்டுப்பாடு இல்லாததால், குழந்தைகள் மானாவாரியாக பிறந்துவிடுவார்கள். மனித ஆயுட்காலமும் 30, 40 வயதுக்குள்தான். இவை எல்லாமுமாக சேர்ந்து அக்காலத்தில், சீக்கிரமே காதல்/கல்யாணம் செய்து, திருமணம் ஆன உடனேயே குழந்தை, குட்டி என்று சுயத்தை இழந்து, 'ரொமான்ஸாவது... கத்திரிக்காயாவது...' என்று யந்திரகதியில்தான் வாழ்ந்தார்கள் பெண்கள்.

ஆனால், இன்று காலம் ரொம்பவே மாறியிருக்கிறது. அதே 12 - 16 வயதில் வயதுக்கு வந்தாலும், திருமணம் என்பது 20-களுக்கு அப்புறம்தான் நடக்கிறது. பிள்ளைப் பேற்றை பெண்ணே நிர்ணயித்துக் கொள்ளக்கூடிய சுதந்திரமும் இருக்கிறது. மனித ஆயுட்காலமும் 70, 80 வரை நீடிக்கிறது. இதனால் மனித மனங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக் கின்றன.

 ஒரே ஒரு ஆணைப் பார்த்து, 'இனி ஏழேழு ஜென்மத்துக்கும் இவனே என் பிரணநாதன்’ என்கிற பழையகால சென்டிமென்ட், இப்போது வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளது. பதின் பருவத்தில் ஆரம்பித்து, பாட்டி ஆன பிறகும்கூட வெவ்வேறு மனிதர்களை விரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ரொமான்ஸ் ரகசியங்கள் !

பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், பெண்கள் தாய்மை ஒன்றிலேயே தங்களைத் தொலைத்துவிட்டு, 'ஆஹா... நான் எவ்வளவு நல்ல பெண்!’ என்று தேற்றிக்கொண்டு வாழ வேண்டிய கட்டாயம் இல்லை. பிள்ளை வளர்ப்புச் சுமை பெரிதும் குறைந்துவிட்டதால், இன்றைய பெண்கள் தம் வாழ்வில் தமக்கென்று சந்தோஷம், கேளிக்கை, சுவாரசியம் இவற்றுடன் நிறைய ரொமான்ஸையும் எதிர்பார்க்கிறார்கள்.

 ரொமான்ஸுக்குதான் வயசே இல்லையே... அதனால் அந்தக் காலத்தில் முதுமை என கருதப்பட்ட வயதில் உள்ள இந்தக் கால பெண்கள் எல்லாம்கூட மறுமணம் பற்றியும், மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றியும் யோசிக்க முடிகிறது.

ஆக, இன்றைய சூழலில் வாழும் அத்தனை பேருமே, தான் முதன் முதலில் பார்த்து, விரும்பிய மனிதரோடு மட்டுமேதான் குடும்பம் நடத்துகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. வளர் இளம் பருவத்தில் ஆரம்பித்து, தொடர்ந்து பல மனிதர்களை பரிசீலனை செய்துவிட்டு, கடைசியாக இந்த ஒட்டுமொத்த 'விரும்பிய மனிதர்கள் பட்டிய’லில் இருந்து யாரோ ஒருவருடன் குடும்பம் நடத்துபவர்கள்தான் அதிகம்.

ஆனால், இதில் சில சிக்கல்கள் உண்டு! இப்படிப் பல மனிதர்களை, 'இவனா இருக்குமோ, இல்லை இவனாக இருக்குமோ?’ என்று மனதில் வைத்து பொருத்திப் பார்க்கும் வாய்ப்பு இன்றைய பெண்களுக்குக் கிடைப்பதால், ஏற்கெனவே சந்தித்த மனிதரை தொடர்ந்து நினைத்துக் கொண்டு காலத்தை வீணடிக்கவும் அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்துக்கு சீதா. அவளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சக ஊழியன் ஒருவன் மீது அப்படி ஓர் ஈர்ப்பு. உருவம், உயரம், ஆளுமை, அன்பு என்று அவனை அணுவணுவாக நேசித்தாள் சீதா. இவள், 'ஸோ கால்ட் உயர்ந்த ஜாதி’, அவன் 'ஸோ கால்ட் தாழ்ந்த ஜாதி’. சீதாவின் பெற்றோர் இதைக் காரணம் காட்டி அவளுடைய காதலை மறுத்தனர். 'உனக்கப்புறம் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, உன்னால எல்லாரோட வாழ்க்கையும் பாழாப் போயிடும்... அப்புறம் நாங்க வெளியில தலைகாட்ட முடியாம செத்து தொலைய வேண்டியதுதான்!’ என்று அவர்கள் செய்த எமோஷனல் பிளாக் மெயிலில், காதலைத் தியாகம் செய்தாள் சீதா. அவனும் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டு போய்விட்டான்.

ஆனால், இதற்குப் பின்... 'திருமணமே வேண்டாம்' என்று சில வருடங்கள் இருந்தாள் சீதா. வந்த வரன்களை எல்லாம் 'பிடிக்கல’ என்றாள். 'இப்படி எங்க உயிரை வாங்குறியே...’ என்கிற அம்மாவின் ஆக்ரோஷத் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், ஒரு கட்டத்தில், 'கழுதையோ, குதிரையோ... எவனோ ஒருத்தனுக்கு கழுத்த நீட்டித் தொலைக்கிறேன்’ என்று பெற்றோர் காட்டிய வரனை கட்டிக் கொண்டாள்.

அதில்தான் பிரச்னையே. பெயருக்காகத் திருமணம் செய்துகொண்டவளுக்கு, மாப்பிள்ளையைப் பார்க்கும் போதெல்லாம் பற்றிக்கொண்டு வந்தது. 'அவனை வைத்து ரசித்து அழகு பார்த்த இடத்தில்... இவனா, ச்சீ!’ என்று இன்னும் பழைய காதலனின் நினைவிலேயே லயித்தாள். கணவனைக் காதலனோடு ஒப்பிட்டுக் குறைகள் கண்டுபிடித்து, அவனை வெறுத்தாள். அவனுடைய நல்ல குணங்கள் எதுவுமே அவள் கண்ணில் படவில்லை. அதேசமயம், தப்பித் தவறி அவன் ஏதாவது சொதப்பினால் போதும், 'போயும் போயும் இவனுக்கு கழுத்தை நீட்டிட்டேனே..!’ என்று நொந்துகொண்டாள். இந்த வெறுப்பும், விரிசலும் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையையும் தள்ளிவைத்தது. 'கல்யாணம் பண்ணிக்கிட்டு தொடக்கூடாதுனு சொன்னா என்ன அர்த்தம்?’ என்று இதற்கு ஆயிரம் காரணங்களை கற்பனை செய்துகொண்டு, அதற்கு மேல் அதிகமாகக் கண்டனம் தெரிவித்து, அவளை கரித்துக்கொட்ட ஆரம்பித்தார்கள் இருவீட்டுப் பெரியவர்களும். கடைசியில் இவள் மனதை மாற்ற மனநல ஆலோசனை பெறப்பட்டது.

சிகிச்சைக்கு செலவழித்து சீதா தெரிந்துகொண்ட சிம்பிளான மேட்டர் என்ன தெரியுமா?! கையில் இருப்பதை விட்டுவிட்டு, எப்போதோ பறந்து போய்விட்டதை பற்றி நினைத்து, நிகழ்கால வாழ்க்கையை கோட்டை விடுவது முட்டாள்தனம் என்பதைத்தான். பெரும்பாலான பெண்கள், முன் ஏதோ ஒரு சமயத்தில் யாரையோ மிகவும் தீவிரமாகக் காதலிப்பதாக நினைத்திருப்பார்கள். மிகச் சிலருக்கே காதலித்தவனை கட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கும். மற்ற பெண்கள், 'பழைய கதையை நினைச்சுக்கிட்டு பிரசன்ட் லைஃபை பாழாக்கிக்க வேண்டாம்’ என்று மனதை பக்குவப்படுத்திக் கொண்டு, தற்போதைய துணைவன் யாரோ, அவனோடு சந்தோஷமாக இருக்க முயல்கிறார்கள்.

இப்படி, கடந்ததை மறந்துவிட்டு, இருப்பதை தக்கவைத்துக் கொண்டு வாழ்வதுதானே கெட்டிக்காரத்தனம்! அதை விட்டுவிட்டு, 'அவனை மாதிரி வருமா?’ என்று, கிடைக்காமல் போன ஒருவனோடு, கிடைத்திருக்கும் இவனை ஒப்பிட்டு குறைகூறிக்கொண்டு இருந்தால்... அது வாழ்க்கையை ரசிக்க வைக்குமா?

'அதற்காக உடனே எப்படி மனதை மாற்றிக் கொள்வதாம், அதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்கிறீர்களா..?

உங்கள் மனம் என்பதே ஒரு மாய பிம்பம்தான், அதில் நிரந்தரமான பதிவுகள் என்று எதுவுமே கிடையாது. காலம், சூழல், தேவைக்கு ஏற்ப, தன்னை மீண்டும் மீண்டும் மீட்டுருவாக்கி, புதுப்பித்துக் கொண்டு, சூழலோடு தன்னை எப்படியும் பொருத்திக் கொள்வதே உங்கள் மனதின் ஒரிஜினல் வேலை. ஒன்றை மாற்றி ஏற்றுக்கொள்வது உங்கள் மனதுக்கு ஒன்றும் கடினமான காரியமே இல்லை. இப்படி மனமாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவே சில பிரத்தியேக சிகிச்சை முறைகள்கூட இருக்கின்றன. இவற்றின் உபயத்தால் உங்களது நெடுநாள் பயம், கவலை, காதல் என்று எந்த உணர்வாக இருந்தாலும் 'ஸ்வாஹா' செய்துவிட முடியும்.

அதனால் சகோதரிகளே... பழையதை கட்டிக்கொண்டு கூவம் மாதிரி தேங்கிக் கிடக்காமல், புதிய பாதைகளை நீங்களே உருவாக்கி, கங்கை மாதிரி ஓடிக்கொண்டே இருங்கள்!

- நெருக்கம் வளரும்...

அடுத்த கட்டுரைக்கு