Published:Updated:

வாழ்க்கை வாழ்வதற்கே..!

புரிய வைத்த புதுக்குடியிருப்புமகாலஷ்மி சுப்ரமணியன்,படங்கள்: ஆ.நந்தகுமார்

வாழ்க்கை வாழ்வதற்கே..!

புரிய வைத்த புதுக்குடியிருப்புமகாலஷ்மி சுப்ரமணியன்,படங்கள்: ஆ.நந்தகுமார்

Published:Updated:
##~##

'வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதை அனுபவித்து வாழ வேண்டும்' என்று நினைப்பவள் நான். ஆனாலும், ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பக் கடமைகளும், உறவுப் பொறுப்புகளும் அழுத்த... ரசிக்க நேரமின்றி நகர்ந்து கொண்டேதான் இருந்தன நாட்கள். அதிலும் வயது ஏற ஏற, வாழ்க்கையின் பக்கங்களை சுவாரசியமாகப் புரட்ட இயலாமல் இருப்பது... மனதின் ஒரு மூலையில் வருத்தத்தை வழிய வைத்துக் கொண்டேதான் இருந்தது!

இந்நிலையில்... மூன்று மாதங்களுக்கு முன், எங்கள் வீட்டின் எதிரே திறந்த வெளியில் புதிதாக குடியமர்ந்த விளிம்புநிலை மனிதர்கள், 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்கிற சின்ன, பெரிய பாடத்தை எனக்குப் புரிய வைத்து... தெளியவும் வைத்துவிட்டனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுச்சேரியைச் சேர்ந்த நான் ஓர் இல்லத்தரசி. ஒரே மகன், மருத்துவம் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறான். கணவர் வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டார். வசதிக்கும் சந்தோஷத்துக்கும் குறைவில்லாத குடும்பம். ஆனாலும், 'மகன் எம்.எஸ் படிக்கணும்னு சொல்றான்... அதுக்கு ஒண்ணரை கோடி செலவாகுமே’, 'அவன் படிப்பை முடிச்சதும்... ஹாஸ்பிட்டல், வீடுனு வசதி செய்து கொடுக்கணுமே...’ என்று எப்போதும் மனதுக்குள் கணக்குகளும் குழப்பங்களுமாக குடியமர்ந்துகொண்டிருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே..!

நான் மட்டுமல்ல... எங்கள் தெருவில் இருக்கும் அத்தனை பேரும் வசதியானவர்கள்தான். என்றாலும், புது கார், வீடு, ஃபேக்டரி, புரமோஷன் என்று ஏதாவது ஒரு கமிட்மென்ட்டில் சிக்கி, சதாசர்வமும் அந்த யோசனையாகவே இருப்பார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால், தேவைக்கு மேலேயே வசதிகள் இருந்தும், இல்லாததை இலக்கு வைத்து நகரும் அப்பர் கிளாஸ் மென்டாலிட்டி! என் இந்த மனநிலை, இம்மனிதர்களின் வரவால் இப்போது அடியோடு மாறியிருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அதிகாலை வேளையில், எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த இடத்தை பரபரப்பாக சுத்தம் செய்த சில குடும்பங்கள், அழகாக டென்ட் அமைத்து, அவற்றில் குடி புகுந்தனர். சமையலுக்குத் தேவையான மிகச் சில பாத்திரங்களே வைத்திருந்தனர். அதிகாலையில் கிளம்பிச் செல்லும் இவர்கள், இரவு ஏழரை மணி வாக்கில் திரும்பி வந்து சமையல் வேலைகளைச் செய்கின்றனர். சாதம், ஒரு குழம்பு என சிம்பிளான சாப்பாடு.

வாழ்க்கை வாழ்வதற்கே..!

ஆனால்... கணவன், மனைவி, குழந்தை என அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து ஆனந்தமாகச் சாப்பிடுகின்றனர். பின்னர் எஃப்.எம். ரேடியோவில் பாட்டுக் கேட்டபடி, பேச்சும் சிரிப்பும் கும்மாளமுமாக முடிகிறது அவர்களின் நாள்.

வேடிக்கையாக அவர்களை கவனிக்க ஆரம்பித்த நான், சில நாட்களிலேயே அவர்களின் லைஃப் ஸ்டைலை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். இருக்கும் இடம் வசதி இல்லை, உடுத்த நல்ல ஆடைகள் இல்லை, மூன்று வேளை உணவுகூட எல்லா நாட்களும் நிரந்தரமில்லை. ஆனாலும்... சந்தோஷம் ஆயுட்கால உறுப்பினராக இருந்தது அவர்களின் குடும்பங்களில்.

அன்று மாலை கையில் குழந்தையுடன் நின்றுகொண்டுஇருந்தார் அந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பெண். அவரிடம் நெருங்கிப் பேசினேன் ஆர்வமாக. பாப்பாம்மாள் என்று பெயர் சொன்னவர், ''கையில் இருக்கறது எம்பேத்தி பானு. கிருஷ்ணகிரிதான் சொந்த ஊரும்மா. ரோடு போடுற வேலை பார்க்குறோம். அதனால எந்தெந்த ஊருல ரோடு போடுறமோ, அங்கயே எங்கயாச்சும் டென்ட் போட்டு இருந்துக்குவோம். வயசுக்கு வந்த புள்ளைங்க இருந்தா, கிருஷ்ணகிரியிலயே வீட்டுல விட்டுட்டு வருவோம். மாச மாசம் பணம் அனுப்புவோம். சின்னப் புள்ளைங்கனா, போற எடத்துக்கு எல்லாம் கையோட தூக்கிக்கிட்டுப் போயிடுவோம். தெனக்கூலி

350 ரூபாய் கொடுப்பாங்க. பத்தாதா..?!'' என்று நிறைவுடன் அவர் கேட்டபோது, ஆச்சர்யமாக இருந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே..!

தொடர்ந்து, அந்த டென்ட் பெண்கள் பலரிடமும் நான் சிநேகமானேன்.

''என்னம்மா கரன்ட்டு இல்லைனு இப்புடிப் புலம்புறீங்க? எங்களுக்கெல்லாம் நெலாதான் லைட்டு, மரங்கதான் காத்தாடி!'' என்று, தன் செம்பட்டை கேசத்துக்கு எண்ணெய் வைத்துக்கொண்டே அவர்களில் ஓர் இளம் பெண் பேசியபோது, கூடுதல் அழகியாகத் தெரிந்தாள் எனக்கு.

எங்கள் தெரு குழந்தைகள் எல்லோரும் அவரவர் வீட்டு காம்பவுண்ட் சுவர்களுக்குள், கண்காணிப்புக்கு நடுவே விளையாடிக் கொண்டிருக்க, மணலிலும், மழையிலும், வெயிலிலும், வேப்ப மரத்தடியிலும் வியர்க்க விளையாடும் அந்த பயமறியா குழந்தைகளின் சந்தோஷம், நிச்சயமாக... எங்கள் குழந்தைகளுக்கு இல்லை என்பது புரிந்தது.

கையில் கொண்டு வந்த பொட்டலத்தில் இருந்த கடைப் பண்டங்களை தன் குழந்தைக்கு ஊட்டிவிட்டு, சொம்பு தண்ணீரை மடமடவென குடித்த அந்தத் தாயிடம், ''நீ ஒண்ணு சாப்பிட்டிருக்கலாம்ல..?'’ என்றேன். ''வாயக்கட்டுனவளுக்குதான் புள்ள!’' என்று திருக்குறளினும் சுருக்கமாக புரியவைத்த அந்த மத்திம வயதுப் பெண்ணின் முகம், என் ஆயுளுக்கும் மறக்காது.

எந்த உறவையும் எதிர்பார்க்காமல், ஜல்லி சுமந்து தன் வாழ்க்கையைச் செலுத்தும் அந்த 60 வயதுப் பாட்டி, ''கவலைப்பட்டு என்னாகப் போகுது? ஒடம்புல தெம்பிருக்கிறவரைக்கும் ஓடுவோம். உழைக்கறவரைக்கும் சாப்புடுவோம். இல்லியா... சாவு வர்ற அன்னிக்கு கிளம்பிடுவோம்!'' என்று பேசியபோது, வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் அந்த மக்களின் மீதான ரசனை, ஏக்கமாகவே மாறியது எனக்குள்!

எத்தனையோ வசதிகள் இருந்தும், மனதில் நிறைவும்... நிம்மதியும் இல்லாமல் இருக்கும்போது, எதுவுமே இல்லை என்றாலும் உலகமே தனக்காகத்தான் என்று கொண்டாடி வாழும் அந்த மக்களின் வாழ்க்கை எத்தனை அழகானது?! 'வாழ்க்கையை ரசிக்க அறிவுதான் தடை’ என்று படித்திருந்தாலும், வறுமை பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல் வாழும் அவர்களிடம்தான் அதை முழுமையாக கற்றுணர்ந்தேன். பல நாட்களாக அவர்களைப் பார்த்துப் பார்த்து ரசித்த, மகிழ்ந்த, ஏங்கிய என்னுள், இப்போது பல மாற்றங்கள்.

சேர்க்க வேண்டியதையே சதா சிந்திக்காமல், இருக்கும் நிலையில் நிறைவுற்று, இன்றைய பொழுதில் வாழப் பழகியிருக்கிறேன்!

இதை எழுதி முடித்த நேரம், தூரத்தில் மண்ணெண்ணெய் விளக்கொளியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன அந்த டென்ட்கள், நிம்மதியாக!

 நீங்களும் நிருபர்தான்!

வாசகிகளே... இது உங்களுக்கான பக்கம்! 'செய்திகளை சேகரிப்பதில், பெண்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியுமா என்ன?'

அசத்தலான, அற்புதமான, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கின்ற விஷயங்கள்; 'அட, நாமும் இதேபோல முன்னேறலாமே' என்று நம்மை சொல்ல வைக்கின்ற சாதனைப் பெண்கள்; இன்னும், இன்னும் பலதரப்பட்ட செய்திகளும் உங்களிடமும்... உங்கள் அக்கம் பக்கத்திலும் கொட்டித்தானே கிடக்கின்றன! அத்தகைய செய்திகளில், பிரசுரத்துக்குத் தகுதியான செய்திகளைத் தேர்ந்தெடுத்து, நேர்த்தியான புகைப்படங்களுடன், அசத்தலான செய்திக் கட்டுரையாக எழுதி அனுப்புங்களேன் தோழிகளே! பிரசுரமாகும் கட்டுரைகளுக்கு தகுந்த பணப்பரிசு உண்டு!

பின்குறிப்பு: உங்களின் கட்டுரைகள் நூறு சதவிகிதம் உண்மையானவையாக இருப்பது முக்கியம். கட்டுரைகளை தபால், இ-மெயில் மூலமாக அனுப்பலாம்.

தபாலில் அனுப்புபவர்கள்... 'நீங்களும் நிருபர்தான்’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்பவும். இ-மெயில்: aval@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism