Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

ஓவியங்கள்: சேகர்

அனுபவங்கள் பேசுகின்றன !

ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

 வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:150

விலைக்கு வாங்கிய விபத்து!

என் கணவரின் மேலதிகாரி, சமீபத்தில் விலை மதிப்புமிக்க சொகுசு கார் ஒன்று வாங்கினார். டிரைவிங்கும் கற்றுக்கொண்டார். கொஞ்ச நாளில் விடுமுறை வரவே, சத்தியமங்கலம் - திம்பம் மலைப்பாதையை அடுத்துள்ள தன்னுடைய சொந்த ஊருக்கு குடும்பத்தோடு காரில் சென்றார். 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அந்தப் பாதை... நன்கு வண்டி ஓட்டப் பழகியவர்களுக்கே கிலி கொடுக்கக்கூடியது. இதை அறிந்தே எச்சரிக்கையாக டிரைவரை ஏற்பாடு செய்துதான் சென்றார். ஆனால், ஊர் திரும்பியபோது, ஆர்வமிகுதியில் 13-வது கொண்டை ஊசி வளைவில், ''நான் ஓட்டுகிறேன்'' என்று காரை வாங்கியவர்... தடுமாற, சில நிமிடங்களிலேயே விபத்து ஏற்பட்டு, ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டார். அவர் மனைவி மற்றும் டிரைவருக்கும் பலத்த காயம்... புது வண்டியும் உருக்குலைந்து போக... துயரமோ துயரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுபவங்கள் பேசுகின்றன !

என்னதான் கார் ஓட்ட தெரிந்திருந்தாலும்... நெடுந்தூரப் பயணம், மலைப் பயணம் போன்றவற்றில் செல்ஃப் டிரைவிங் தவிர்க்கலாமே!

- வி.தீபா பிள்ளை, தாளவாடி

'ஜெனரல் செக்கப்’!

ஒவ்வொரு வருடமும் நான் 'ஜெனரல் செக்கப்’ எனப்படும் பொதுவான மருத்துவப் பரிசோதனை செய்வது வழக்கம். இ.சி.ஜி, ஸ்கேன், கார்டியோகிராம், எக்ஸ்ரே என வரிசையாக எடுக்க வேண்டும். முதல் முறை எக்ஸ்ரே எடுக்கச் சென்றபோது, அந்த 'லேப்’பில் இரண்டு நைட்டிகள் இருந்தன. அதில் ஒன்றை அணிந்து கொண்டு எக்ஸ்ரே எடுக்கும் இடத்தில் நிற்கச் சொன்னார்கள். 'காலையிலிருந்து எத்தனை பேர் அந்த நைட்டியை அணிந்து எக்ஸ்ரே எடுத்தார்களோ?' என்று நொந்துகொண்டே நின்றேன்.

அனுபவங்கள் பேசுகின்றன !

அந்த அனுபவத்தில், அதன்பின் எப்போது எக்ஸ்ரே எடுக்கச் சென்றாலும், வீட்டிலிருந்தே சாதாரண காட்டன் நைட்டி எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டேன்.

உங்களுக்கும் எப்போதாவது எக்ஸ்ரே எடுக்க அவசியப்பட்டால், வீட்டிலிருந்தே ஒரு நைட்டி எடுத்துச் செல்லுங்கள். அருவருப்பு, அலர்ஜியில் இருந்து தப்பலாம்!

- மீனாட்சி ரகுபதி, சென்னை-78

கிள்ளியது கீரை... கடித்தது புழு!

என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தன் ஆறுமாத குழந்தையை மடியில் படுக்க வைத்துக் கொண்டு கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள். நானும் அவளுக்கு உதவியபடி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையைத் தூக்கி தோளில் போட்டு தட்டும்போது, அதன் கை, கால்கள் எல்லாம் சிவப்பு சிவப்பாக தடித்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தோம். குழந்தை யின் சட்டையைக் கழற்றிப் பார்த்தால், சிறு புழு ஒன்று அதன் உடலில் ஒட்டியிருந்தது. அது தந்த அலர்ஜிதான் தடிப்புகள் என்பது புரிந்தது.

அனுபவங்கள் பேசுகின்றன !

குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கீரை ஆய்வது, காய் நறுக்குவது, பூ கட்டுவது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டாமே... ப்ளீஸ்!

- ஆர்.ஷபிரா, திருச்சி

'எலிக்காய்ச்சல்' டெலிவரி!

அனுபவங்கள் பேசுகின்றன !

என் தோழிக்கு வந்த காய்ச்சல்... மூன்று நாட்களாகியும் சரியாகாததால், டாக்டரின் பரிந்துரைபடி ரத்தப் பரிசோதனை செய்தாள். 'எலிக் காய்ச்சல்' (லெப்டோஸ்பைரோசிஸ்) என்று ரிசல்ட் வந்தது. ''குடிக்கும் நீர் அல்லது உண்ணும் உணவு போன்றவற்றில் எலி போன்ற ஜந்துக்களின் சிறுநீர் அல்லது எச்சம் கலந்திருந்து, அந்தப் பொருட்களை  சாப்பிட் டால், இது மாதிரியான நோய் வரும்’' என்று கூறிய டாக்டர், அதற்குரிய சிகிச்சை அளிக்க, காய்ச்சல் குணமானது!

'நம் வீட்டில்தான் சுத்தமாக எலித் தொல்லையே இல்லையே... நமக்கு எப்படி?' என்று குழம்பிய தோழி... மெள்ள ஆராய்ச்சியில் இறங்கினாள். முதலில் அவளுடைய பார்வை பட்டது... வீட்டுக்கு வரும் தண்ணீர் கேன் மீதுதான். கேன்களில் இருக்கும் ஸ்டிக்கர்கள் எல்லாமே கண்டபடி குதறப்பட்டிருக்க... டெலிவரி பாய் வந்தபோது, விசாரித்திருக்கிறாள்.

''காலியா இருக்கற கேன்களையெல்லாம் குடோன்ல வைப்போம்... அங்க ஒரே எலித்தொல்லை. அதுதான் இப்படி ஸ்டிக்கரை குதறி வெச்சுருக்கு'' என்று சொல்லியிருக்கிறான்.

தண்ணீர் கேன்களை டெலிவரி கொடுக்கும்போது கால்களால் உருட்டிக்கொண்டே போவது, அழுக்கான வண்டிக்குள் காலி கேன்களைத் தாறுமாறாக வீசுவது என்று எல்லாமே நாம் காணும் காட்சிகள்தான். அந்தக் கேன்கள் எல்லாம் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டுதான் மீண்டும் தண்ணீர் நிரப்பப்படுகிறது என்பதற்கு நமக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆக... எலிக்காய்ச்சல் டெலிவரிக்கு இதுவும்கூட காரணமாக இருக்கலாம்.

தோழிகளே, கேன் வாட்டர் என்றாலும்... கொதிக்க வைத்து அருந்துவதே நலம்!

- ஜெயசுந்தரி, மேற்கு மாம்பலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism