Published:Updated:

கல்லூரியையும் கவரும் 'கதர்'!

பாரம்பரியத்துக்கு வீ.கே.ரமேஷ் ,படங்கள்: எம்.விஜயகுமார்

கல்லூரியையும் கவரும் 'கதர்'!

பாரம்பரியத்துக்கு வீ.கே.ரமேஷ் ,படங்கள்: எம்.விஜயகுமார்

Published:Updated:
##~##

'சுதேசி இந்தியாவில் மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையே அணிய வேண்டும், அந்நிய ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்' என்று காந்தியடிகள் இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் செய்ததோடு, வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையே அணிந்தார். காலப்போக்கில் கைத்தறி ஆடைகள் புழக்கம் குறைந்து, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

ஆறுதலாக... நூறு சதவிகிதம் கைத்தறி ஆடைகளை மட்டுமே தயார் செய்து, அவற்றை இன்றைய ஃபேஷன் உலகுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து, கைத்தறி புடவைகள் உலகத்தை கல்லூரி மாணவிகள் வரை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்... சேலத்திலிருக்கும் ஜெயஸ்ரீ. இவருக்கு கைகொடுப்பது மும்பையிலிருக்கும் இவருடைய சகோதரி சுபஸ்ரீ. இவர்கள், பிரபல எழுத்தாளர் 'வாண்டு மாமா’வின் பேத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாத்தா பற்றிய பெருமையுடன் ஆரம்பித்தார் ஜெயஸ்ரீ... ''ஊருக்கெல்லாம் 'வாண்டு மாமா'னு அறிமுகமான எங்க தாத்தா கிருஷ்ணமூர்த்தி, பக்கா காந்தியவாதி. 'நம் பாரம்பரியம் அழிந்துவிடக் கூடாது, அதற்கென்று தனிச் சிறப்பு உண்டு'னு அடிக்கடி சொல்லும் தாத்தா, நாங்க சின்னக் குழந்தைகளா இருக்கும்போதே எங்களுக்கு பாரம் பரியத்தையும், தேசிய உணர்வையும் ஊட்டினார். அந்த தாக்கத்தின் ஆழம்தான் சேலத்துல நாங்க நடத்தற 'சில்க் த்ரெட்ஸ் ஷோரூம்’ உருவாகறதுக்கு அடிப்படை!

இந்த தலைமுறைப் பெண்கள், கைத்தறி ஆடைகளை அணியறதில்லைங்கிற வருத்தம் எங்களுக்கு உண்டு. அதைவிட, இதனால தறித்தொழில் செய்ற குடும்பங்கள் பல முடங்குற ஆதங்கம் நிறைய உண்டு. இந்த நிலையை மாத்தி, கதர் ஆடைகளை மக்கள் விரும்பச் செய்ய, சில புதுமையான முயற்சிகளை எடுக்க முடிவெடுத்தோம்.

கல்லூரியையும் கவரும் 'கதர்'!

'கைத்தறியா..? அது பாட்டி புடவை!’னு ஒதுக்கும் பெண்களுக்கு, அந்தப் புடவையில் நவீன ஹேண்ட் வொர்க் செய்து டிரெண்டியா மாத்திக் கொடுத்தப்ப, 'வாவ்!’னு வரவேற்பு தந்தாங்க. 'சில்க் த்ரட்ஸ் ஷோரூம்’ மூலமா இப்போ உள்ளூரில் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கறதோட, நம் பாரம்பரியக் கலையையும் தொழிலையும் புதுப்பிக்குற சந்தோஷமும் எங்களுக்கு கிடைச்சுருக்கு!'' என்று மனதார மகிழ்ந்த ஜெயஸ்ரீ, தொழிலின் நெட்வொர்க் பற்றி தொடர்ந்தார்.

''நெசவாளர்களை வைத்து புடவைகள் நெய்யச் செய்து, இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள்கிட்ட அந்தப் புடவைகளைக் கொடுத்து... காய்கறிகள், பூக்களில் இருந்து கிடைக்குற இயற்கை வண்ணத்தை (நேச்சுரல் பெயின்ட்ஸ்) பயன்படுத்தி, சேலையை பாலில் நனைத்து கையாலேயே வரையப்பட்ட டிசைன்கள் கொண்ட 'ஆர்ட் சாரீஸ்' தயாரிக்கிறோம்.

மஹாராஷ்டிரா புடவையில்... ஆந்திரா ஆர்ட் களம்காரி டிசைன், பெங்கால் காட்டனில்... மஹாராஷ்டிரா கன் டிசைன், காஞ்சிபுரம் பட்டுப் புடவையில்... குஜராத் ராஜ்கோல் பட்டோலா மாடல், திருபுவனம் பட்டுப் புடவையில்... காஷ்மீர் பஸ்மினா டிசைன், ஒடிசா காட்டன் புடவையில்.. சத்தீஸ்கர் பட்டு டிசைன்... இப்படி மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து புது வகையான மாடல்களை உருவாக்கித் தர்றோம்.

சமீபத்தில் சென்னையில் 'விமோனிஷா ஆர்ட் கேலரி’ சார்பில் நடந்த கண்காட்சியில் எங்களோட எல்லாப் புடைவைகளுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. புதுப்புது கஸ்டமர்களும் நிறையபேர் கிடைச்சுருக்காங்க. 'இதை உடுத்திட்டுப் போனா, பார்க்கறவங்களோட கண்கள் எல்லாம் புடவையிலதான் இருக்கு. அந்தளவுக்கு தனித்தன்மையா கலக்குது’னு எல்லாரும் பாராட்டினாங்க. இந்தப் புடவைகளோட வண்ணம், டிசைன் எல்லாம் காலத்தால் அழியாது. அதனால... பரம்பரையா பாதுகாத்து வெச்சுக்கலாம்கிறது கூடுதல் சிறப்பு!'' என்றார் ஜெயஸ்ரீ பெருமையோடு!

''நாங்க தயாரிக்கும் ஆடைகள்ல இயற்கை சாயம் பயன்படுத்தப்படுறதால, சருமத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது, கோடைக் காலத்தில்கூட குளுகுளுனு இருக்கும். சென்னை, பெங்களூருவுக்கு அடுத்தபடியா சேலத்தில்தான் இந்த மாதிரியான ஷோரூம் இருக்கு'' என்று சொல்லும் ஜெயஸ்ரீ, ஆடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களையும் விற்பனை செய்கிறார்.

''எங்ககிட்ட இருக்கிற ஹேண்ட்லூம் புடவைகளுக்கு மேட்சிங்கா குந்தன், டெம்பிள், ரியல்பால் அரேபியன் மாடல்கள்ல இயற்கையான கற்கள் பதிச்ச தோடு, செயின், வளையல்னு பலவகையான ஆபரணங்களும் உண்டு. விலையும் குறைவா இருக்கறதால, எல்லா தரப்பினரும் ஆர்வமா வந்து வாங்கிட்டுப் போறாங்க.

காசை வாங்கினோமா, பில்லைக் கொடுத்தோமானு இல்லாம... எங்களோட எல்லா கஸ்டமர்களுக்கும் இந்தப் புடவைகளோட சிறப்பு, உருவான விதம், பராமரிப்பு முறைனு எல்லாத்தையும் எடுத்துச் சொல்றோம். ஒவ்வொரு கஸ்டமரையும் எங்களோட கெஸ்ட்டாவே நடத்துறோம்!'' எனும் ஜெயஸ்ரீ,

நிறைவாக, ''நாம் ஒவ்வொருவரும் செயற்கை இழைகளால் தயாரான சிந்தடிக் ஆடைகள முடிஞ்சவரை தவிர்த்து... கைத்தறி காட்டன் ஆடைகள் அணியறத அதிகப்படுத்தும்போது, நம் நாட்டோட பாரம்பரியமும், அந்தத் தொழிலை நம்பியுள்ள பல லட்சம் குடும்பங்களோட நிலையும் நிமிரும். செய்வோமா..?!'' என்ற வேண்டுகோளை முன் வைத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism