Published:Updated:

'ஊறுகாய்ல மை போட்டீகளோ..!'

கைமேல் பலன் தந்த கைப்பக்குவம் இரா.முத்துநாகு,படங்கள்: சக்தி.அருணகிரி

'ஊறுகாய்ல மை போட்டீகளோ..!'

கைமேல் பலன் தந்த கைப்பக்குவம் இரா.முத்துநாகு,படங்கள்: சக்தி.அருணகிரி

Published:Updated:
##~##

''கடல்ல இருக்குற உப்புக்கும் மலையில இருக்குற நார்த்தங்காய்க்கும் ஆண்டவன் எப்படி முடிச்சு போட்டானோ, அதே மாதிரிதேன் இந்தத் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத, நாங்க ஊறுகாய் போட ஆரம்பிச்சு முன்னேறினதும்!''

-  'பளிச்' எனப் பேசினார் மீனா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏதாவது கைத்தொழில் தெரிந்தாலும், அது நஷ்டமடைந்தால் சந்திக்க வேண்டிய இக்கட்டுகளை நினைத்தே, முதலாளிகளிடம் தொழிலாளிகளாக முடங்குபவர்கள் பலர். 'என்னதான் ஆகுது பார்ப்போம்’ என்று நம்பிக்கையுடன் ஒரு தொழிலை முன்னெடுப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒருவர்தான் மீனா. எளிய தொழிலான ஊறுகாய் தயாரிப்பைக் கையிலெடுத்து, வெற்றி பெற்றுள்ள தேனியைச் சேர்ந்த மீனா - அண்ணாதுரை தம்பதியைச் சந்தித்தபோது, வீடெங்கும் ஊறுகாய் மணக்க விரிந்தது பேச்சு...

''எங்க வீட்டுக்காரருக்கு ஹோட்டல்ல சப்ளையர் வேலை. ரெண்டு பிள்ளைக. குடும்பம் அவர் வருமானத்தை மட்டும் நம்பி ஏனோதானோனு ஓடுச்சு. நாங்க குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருந்த அம்மா ஒருத்தவுக... எப்ப மாவாட்டினாலும், 'நீ வந்து மாவு கரைச்சு வை மீனா... உன் கைப்பக்குவத்துக்கு, மாவு பதமா புளிக்கும்!’னு சொல்லுவாக. ஒருநாள் அவுக ஊறுகா போட்டப்போ, கச்சு போயிருச்சுனு வருத்தப்பட்டவுக, 'உன் கைப்பக்குவத்துக்கு ஊறுகா போட்டா ரொம்பவே ருசிக்கும்... அடுத்த தடவை நீயே போட்டுக் கொடு’னு சொன்னவுக, அதேமாதிரி மாங்கா வாங்கி நறுக்கி வெச்சுக்கிட்டு கூப்புட்டாக.

'ஊறுகாய்ல மை போட்டீகளோ..!'

அளவா உப்பு போட்டு, ஊறல் போட்டு, ஒரு மாசம் கழிச்சு அளவா வெந்தயம், மிளகாய்ப் பொடி, பெருங்காயம், நல்லெண்ணெய் எல்லாம் சேர்த்து ஊறுகாய் போட்டுக் கொடுத்தேன். அந்தம்மா சாப்பிட்டுப் பார்த்துட்டு, 'மாதா ஊட்டாத சோறை... மாங்காய் ஊட்டும்னு சொல்லுவாக. மீனா கைபட்ட ஊறுகாய் தொட் டுக்க இருந்தா ஒரு சட்டி சோறு சாப்பிடலாம் போலயே!’னு பாராட்டுனவுக, 'உனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கு. ஊறுகாய் போட்டேகூட பொழச்சுக்கலாம்!’னு சொன்னாக. அந்த வார்த்தைங்கதேன் இந்தத் தொழிலை எடுத்துச் செய்ய என் மனசுல பிள்ளையார்சுழி போட்டுச்சு'' என்றவரைத் தொடர்ந்தார் அண்ணாதுரை.

''ஒரு நாள், 'ஏங்க, நாம ஊறுகாய் போட்டு விக்கலாம்'னு மீனா எங்கிட்ட கேட்டுச்சு.   'நாம, நல்லெண்ணெய செக்குல ஆட்டி  ஊறுகா போட்டாலும்கூட, டி.வி. விளம்பரத்துல     வர்ற பண்டங்களத்தேன் சனங்க வாங்குவாக. போட்ட மொதல எடுக்கலேனா... வாழ்க்கையே வீணா போயிடும். இது ஒண்ணும் சினிமா இல்லம்மா, ஒரு பாட்டுல தொழில் அதிபர் ஆகறதுக்கு’னு சொன்னேன். ஆனா, அது மனசுல ஏதோ ஒரு தெடம். திடீர்னு காதுல, மூக்குல கெடக்குறதை எல்லாம் கழட்டிக் கொடுத்து, 'இத அடகு வெச்சு, ஊறுகாய்க்கு வேண்டிய பொருட்கள வாங்கியாங்க’னு லிஸ்ட் போட்டு கொடுத்துச்சு. அதோட நம்பிக்கை எனக்கும் தொத்திக்க, வாங்கியாந்து கொடுத்தேன்!'' என்று அண்ணாதுரை, மீனாவைப்  பார்த்தார்.

'ஊறுகாய்ல மை போட்டீகளோ..!'

''முதன் முதலா நூறு பாட்டில் பூண்டு ஊறுகாய் போட்டு, 'முனீஸ்வரன் ஊறுகாய்’னு லேபிள் ஒட்டி, அக்கம் பக்கத்துல இருக்கறவுகளுக்கு கொடுத்தோம். வாங்குனவுக என்ன சொல்றாகனு கேட்டுக்கிட்டு, அடுத்து போடலாம்னு காத்திருந்தோம். ஒரு வாரத்துக்குள்ள, 'சாப்பிடறதுக்கு எப்பவும் அடம்பிடிக்கற எங்க பிள்ளைக, உங்க ஊறுகாயால இப்போ மறுசோறு கேக்குதுக... பெரியவுகளுக்கும் ருசி உச்சிக்கு ஏறுது!’னு ஒருத்தர் தப்பாம எல்லாரும் பாராட்ட, எங்களுக்கு சந்தோஷம் தாங்கல. அடுத்த தடவை எலுமிச்சை ஊறுகாய் போட்டு, கடைகளுக்கும் சப்ளை செய்தோம். 'முனீஸ்வரன் ஊறுகா கொடுங்க’னு கடைக்கு ஆட்கள் வர ஆரம்பிக்க, எங்ககிட்ட ரொம்ப யோசிச்சு சரக்கு எடுத்த கடைக்காரர்... வீட்டுக்கே வந்துட்டாரு. 'என்னம்மா ஊறுகாயில ஏதும் மை ஒட்ட வெச்சிட்டீகளா..? ஒங்க ஊறுகா பிச்சுக்கிட்டுப் போகுது’னு பாராட்டுனதோட, 'உன் கைப்பக்குவத்துல பிரண்டை ஊறுகா போட்டுக் கொடு... சூப்பரா போகும்!’னு ஐடியாவும் ஆர்டரும் கொடுத்தாரு.

பகல் முழுக்க சர்வர் வேலை, ராத்திரி ஊறுகாய் போடுறதுக்கு உதவி செய்றது, காலையில எட்டு மணி வரைக்கும் கடைகளுக்கு ஊறுகாய் சப்ளை செய்றதுனு என்னோட சேர்ந்து உழைச்ச என் வீட்டுக்காரர், ஒரு கட்டத்துல சர்வர் வேலையை விடுற அளவுக்கு தொழில் முன்னேற்றம் கண்டது!'' என பேசிக்கொண்டே பிரண்டை ஊறுகாய் தயாரிப்பை முடித்தார் மீனா.

'ஊறுகாய்ல மை போட்டீகளோ..!'

தக்காளி, மாங்காய், எலுமிச்சை, பூண்டு, பிரண்டை, இஞ்சி, நார்த்தங்காய், மிளகாய் என்று 14 வகையான ஊறுகாய்களை மாதத்துக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு பாட்டில்கள் வரை தயாரிக்கிறார்கள். 400 கிராம் எடை கொண்ட இந்த ஊறுகாய் பாட்டில்களை, வகைக்கு ஏற்ப முப்பது முதல் அறுபத்து மூன்று ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்கிறார்கள். நான்கு பெண்களும் இவர்களுடன் பணியாற்றுகிறார்கள். தேனி, உசிலம்பட்டி மட்டுமல்லாது... கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும் இவர்களின் வியாபாரம் தற்போது விரிந்திருக்கிறது. மாதம் கிட்டத்தட்ட 15,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது!

''உங்கள் ஊறுகாய் சுவையின் ரகசியம் என்ன..?'' என்றால், சிரிக்கிறார் மீனா.

''டிவி-ய திருகுங்க... விதவிதமா சமைக்க தெனமும் சொல்லித் தர்றாக. எல்லாருக்கும் செய்யத் தெரிஞ்ச ஊறுகாய்க்கு நீங்க எங்கிட்ட ரகசியம் கேட்குறீக. என்னதேன் சமைக்கச் தெரிஞ்சாலும், கைப்பக்குவம்னு ஒண்ணு இருக்கு. அதுதேன் ரகசியமா இருக்குமோ!'' என்று மீண்டும் சிரித்தார். விருதுநகரில் இருந்து வந்து இறங்கிய, ஊறுகாய்க்கு பயன்படுத்தும் நல்லெண்ணெயைத் திறந்து, 'மணம் சரியாக இருக்கிறதா?' என சோதித்த அண்ணாதுரை, ஊறுகாய் பக்குவம் சொன்னார்.

''ஊறுகாய்க்கு சேகரிச்சு நறுக்கின காய்களை, நல்ல தண்ணியில பல தடவை கழுவணும். ஊறுகாய் அடைச்சு வைக்கிற கண்ணாடி புட்டிகளை ஆற்று குறுமணலை போட்டுக் கழுவி, சுடு தண்ணியில மணிக்கணக்கா போட்டு, கை படாம எடுத்து, ஈரப்பதம் இல்லாம காய வெக்கணும். ஊறுகாயைப் பொறுத்தவரை உப்புதேன் கைப்பக்குவம். மா, எலுமிச்சை இதெல்லாம் நாள் கணக்கா உப்புல ஊறணும். மத்ததெல் லாம் ஒரே நாள் தயாரிப்புதேன். நல்லெண்ணெயில ஊறுகா போட்டு நாக்குல ஒரு துண்டு எடுத்து வெச்சா எச்சி       ஊறும்!'' என்று அண்ணாதுரை சொல்ல,

''அம்புட்டுத்தேன்!'' என்று முடித்தார் மீனா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism