Published:Updated:

ஈழ மண்ணிலிருந்து... ஈர மனதுடன்..!

ம.மோகன் படங்கள்: கே.ராஜசேகரன்

ஈழ மண்ணிலிருந்து... ஈர மனதுடன்..!

ம.மோகன் படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

ஸர்மிளா ஸெய்யித்... ஈழ மண்ணின் இளம் கவிஞர். ஈழ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் அடுத்தகட்ட வாழ்க்கைக்கான நலன் விரும்பி. இதழியல், உளவியல், கல்வியியல் என்று தன் சிறகுகளை விரித்து பயணித்து வருபவர். இலங்கையில் தான் நடத்தும் 'சமூக அபிவிருத்திக்கான நிறுவன’த்தின் (Organisation For Social Development) செயல்பாடுகளை விரிவுபடுத்தும் முனைப்புக்காக, சமீபத்தில் தமிழகம் வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

''யுத்தம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், எங்கள் மக்கள் இன்னும் சரியான வாழ்வாதாரம் இல்லாமல்தான் இருக்கிறார்கள். மீளமுடியாத மன வேதனை, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்குத் தடை என்று இன்றும் வேதனை சுமந்து வாழ்பவர்கள் ஏராளம். யுத்தத்துக்கு முன்பு நான் சந்தித்தவர்களில் 20 சதவிகிதத்தினருக்கும் மேலானவர்கள்... தற்போது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களாகி நிற்கின்றனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம். மனரீதியாக அவர்கள் அந்த வலியிலிருந்து மீண்டு வருவதற்கான முதல்கட்ட கவுன்சலிங் தருவதற்குகூட அங்கு வழிகள் இல்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஸர்மிளாவின் பேச்சில் அத்தனை துயரம் கசிகிறது.

''மக்களின் நிகழ்காலத் தேவைகளுக்கான பணிகள் அங்கு அதிகமாகவே செய்ய வேண்டியிருக்கிறது. சைக்கோ கவுன்சலிங் தொடங்கி, கல்வி முகாம், பெண்களுக்கான தொழில் பயிற்சி என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை இந்த ரணமான மனக்கூட்டிலிருந்து வெளியேற்றி, நல்மாறுதலை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். எங்களுடைய அனுபவங்களைக் கொண்டு மனநலம், கல்வி குறித்த பணிகளை செயல்படுத்தி வருகிறோம். 'தங்களுடைய உறவுகளை இழந்து, இருப்பிடங்களை விட்டு அகன்று வசித்து வருபவர்களுக்கு வருமானம் என்ன?’ என்று யோசிக்கும்போதுதான் வேலை வாய்ப்பு, சந்தைப்படுத்தும் முறை போன்ற ஆலோசனைகள் நிறைய தேவை இருக்கிறது என்பதை உணர முடிந்தது. அதற்காகத்தான் இந்தப் பயணம்.

ஈழ மண்ணிலிருந்து... ஈர மனதுடன்..!

திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராமத்துக்குச் சென்றேன். முழுக்க இயந்திரத்தனம் இல்லாமல்... இன்றளவும் பாரம்பரியமான முறைகளைக் கொண்டு எண்ணற்ற தொழில்கள் செய்து வருகிறார்கள். எனக்குத் தெரிந்த அளவில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள். அவர்களை சந்தித்து நிறைய அனுபவங்களை சேகரிக்க வாய்ப்பு கிடைத்தது. தனி நபர் தொழில், கூட்டாக சேர்ந்து தொழில் செய்யும் முறை, தொழில்களுக்கான அடிப்படை தேவைகள், ஆலோசனைகள் என்று நிறைய பார்க்க முடிந்தது. அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மக்களிடத்தில் பரவச் செய்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தை இப்போதே... இங்கிருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்!''

- கண்கள் பிரகாசமாகச் சொன்னவர், தொடர்ந்தார்...

''இந்தப் பயணத்தில் நாகர்கோயில், மதுரை, திருச்சி, சென்னை என்று பரவலாக பல இடங்களுக்கும் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. ஈழத்திலிருந்து ஒரு பெண் வந்திருக்கேன் என்று தமிழ் மக்களுக்குத் தெரிந்ததுமே அவர்கள் என் மீது காட்டிய அன்பு... ரொம்பவே நெகிழச் செய்தது. அதனால்தானோ என்னவோ, 'சிறகு முளைத்த பெண்’ என்ற தலைப்பில் வெளியான என்னுடைய கவிதை தொகுப்பையும்கூட இங்கேயே பதிப்பித்து இந்த பயணத்தின்போது மதுரையில் வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது!

கவிதைகள் எழுதுவது, பத்திரிகையாளராக இருந்தது என்று எழுத்து எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறது. மூன்று வருடங்கள் முழுநேர பத்திரிகையாளராக இருந்த காலம்... சமூகப் பிரச்னைகளை அறிவது, அவற்றை எதிர்கொள்வது என்று எனக்கான தேடலை திறந்துவிட்ட காலம். அவையெல்லாம்தான் தற்போது பாதிப்படைந்த பெண்களை சந்தித்து அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்து களப்பணியாற்றிட செய்கிறது'' என்றவரிடம்,

''குடும்பத்தைப் பற்றி...'' என்றதும்,

''சின்னக்குடும்பம். ஊர், மட்டக்களப்பில் ஏறாவூர். வீட்டில் அம்மா, நான், நான்கு வயதில் மகன் பத்ரி மூவரும்தான். அம்மா என்னுடைய பணிகளுக்கு நல்ல உத்வேகத்தைக் கொடுப்பார். நல்ல வழிகாட்டியும்கூட.

இங்கே வருவதற்காக ஊரில் இருந்து கிளம்பியபோதே மகன் பத்ரி, 'ஃபிளைட்டில்தானே போற... நானும் வர்றேன்!’ என்று ஒரே அழுகை. சமாதானப்படுத்த, 'திரும்பி வரும்போது ஃபிளைட் வாங்கிட்டு வர்றேன்!’ என்று சொல்லிவிட்டு வந்தேன். எதிர்பார்த்துக் கொண்டே இருப்பானே என, மனசு கேட்காமல் அவன் விளையாட இங்கே ஒரு குட்டி ஃபிளைட் பொம்மையும் வாங்கிஇருக்கிறேன். அதுதானே அம்மாக் களின் குணம். ஆனால், அங்கே அம்மாக்களும் பிள்ளைகளும் இதுபோன்ற சின்ன சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்ற வழியற்று இருக்கிறார்கள்!''

- ஸர்மிளாவின் கண்களில் துளிர்த்து நின்றது நீர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism