Published:Updated:

சுபாஷ் சாய்லட்சுமி !

உயிர்களைக் காக்கிறார்... உயர்ந்து நிற்கிறார்..! சா.வடிவரசு, படங்கள்: ஆ.முத்துக்குமார்

சுபாஷ் சாய்லட்சுமி !

உயிர்களைக் காக்கிறார்... உயர்ந்து நிற்கிறார்..! சா.வடிவரசு, படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

''மருத்துவ சிகிச்சைக்குப் பணம் இல்லைங்கிற காரணத்தால, இனி ஒரு குழந்தைகூட இறந்து போகக் கூடாது!''

- அக்கறையும் அதற்கான முயற்சியும் ஒன்று சேர்ந்திருந்தன டாக்டர் சாய்லட்சுமியின் வார்த்தைகளில்! தமிழகமெங்கும் மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றித் தவிக்கும் குழந்தைகளின் உயிர்களைக் காக்க, 'ஏகம் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பை தொடங்கி, அதன் மூலம் பொருளுதவி பெற்றுத் தருகிறார் சாய்லட்சுமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, அரசினர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 'ஏகம் ஃபவுண்டேஷன்' சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 'ஹெல்ப் டெஸ்க்'கில் நாம் அவரைச் சந்தித்தபோதுகூட, யாரோ ஒரு குழந்தைக்கு உதவி கேட்டு வந்திருப்பவர் என்றே நம்மையும் எதிர்கொள்கிறார்!

சுபாஷ் சாய்லட்சுமி !

''உங்களுக்கு என்ன  வேணும்..?'' என்றவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவரின் கல்லூரிக் காலத்தில் இருந்து ஆரம்பமானது பேச்சு.

''சொந்த ஊர் ஹைதராபாத். அங்க, காந்தி மெடிக்கல் காலேஜ்ல படிச்சேன். இறுதியாண்டு படிச்சப்போ... 'இன்டர்ன்ஷிப்’-க்காக சென்னையில இருக்கிற காஞ்சி, காமகோடி மருத்துவமனைக்கு வந்தேன். அப்போ நான் சந்திச்ச சம்பவம்தான், இப்போ நான் செஞ்சுட்டு இருக்கற முயற்சிகளுக்கான முதல் புள்ளியை வைத்தது. பிறந்த ஒரு வாரமே ஆன குழந்தை அது. தொடர்ந்து வென்டிலேட்டர்லதான் வைக்கணும்னு டாக்டர் சொன்னாங்க. 'எங்களுக்கு அந்தளவுக்கு பண வசதி இல்ல சார்...’னு அழுதுட்டே குழந்தையை வாங்கிட்டுப் போயிட்டாங்க பெற்றோர். ரொம்ப நாளைக்கு அந்த சம்பவம் மனசை பாரமாக்கிட்டே இருந்துச்சு.

படிப்பை முடிச்ச பிறகு, சென்னை, மேத்தா மருத்துவமனையில டாக்டரா பணியை ஆரம்பிச்சேன். மருத்துவச் செலவுகளை செய்ய முடியாத, ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் இறந்து போறது தொடர்கதையாகவே இருந்துச்சு. 'அனுதாபம் மட்டும் பத்தாது, அவங்களுக்காக ஆக்கப்பூர்வமா ஏதாவது செய்யணும்'னு முடிவெடுத்தேன். மருத்துவ வசதி தேவைப்பட்ட ஒரு குழந்தையைப் பற்றி நண்பர்கள்கிட்ட சொல்லி உதவி கேட்டேன். சேர்ந்த பணத்தை குழந்தையோட பெற்றோர்கிட்ட கொடுத்தேன். அவங்க சொன்ன நன்றிக்கும், சிகிச்சை முடிஞ்சு அந்தக் குழந்தை சிரிச்ச சிரிப்புக்கும் இணை இந்த உலகத்தில் எதுவும் இல்லைனு தோணுச்சு. தொடர்ந்து பல குழந்தைகளுக்கும் இப்படி தெரிஞ்சவங்க, நண்பர்கள், மருத்துவர்கள்னு உதவிகள் பெற்றுத் தந்தேன். ஒரு கட்டத்துல, அந்த உதவியை முழுநேர சேவையாக்க நினைச்ச நான், மருத்துவமனை வேலையிலிருந்து முதல்ல விலகினேன். சில உதவும் உள்ளங்களை இணைச்சுக்கிட்டு... 2007-ல 'ஏகம் ஃபவுண்டேஷன்’ தொடங்கினேன்!''

- பெருமிதம் டாக்டர் முகத்தில்.

''ஒவ்வொரு மருத்துவமனையுடனும் தொடர்பு கொண்டு, அவங்க மருத்துவமனையில் பணவசதி இல்லாததால சிகிச்சை தடைபட்டுப் போற குழந்தைங்க இருந்தா தெரிவிக்கச் சொல்லிக் கேட்போம். நானும் நண்பர்களும் சமுதாயத்துல எல்லா தரப்புலயும் உதவி கோருவோம். அவங்க கொடுக்கற பணத்தை, சம்பந்தப்பட்ட குழந்தைங்க பேர்லயே நேரடியா மருத்துவமனைக்கு அனுப்ப சொல்லிடுவோம். சில மருத்துவமனைகள் எங்க வேண்டுகோளுக்கு இணங்க, ஏழ்மை நிலைக் குழந்தைகளோட மருத்துவச் செலவுக் கட்டணத்தை குறைச்சும் உதவறாங்க. சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 50 மருத்துவமனைகள், எங்களோட இந்த சேவையில் இணைஞ்சுருக்காங்க.

ஒருமுறை, செங்கல்பட்டைச் சேர்ந்த ரெண்டு குழந்தைகளோட மருத்துவ சிகிச்சைக்காக எங்களைத் தொடர்பு கொண்டாங்க. அந்தக் குழந்தைகளோட மூன்று மாத சிகிச்சைக்கான கட்டணம் 12 லட்ச ரூபாய். 'பணம் புரட்டிட முடியுமா..?’னு யோசனையா இருந்தாலும், நல்ல நோக்கங்கள் நிச்சயம் நிறைவேறும்னு தொடர்ந்து முயற்சி பண்ணி அதை நிறைவேத்தினோம்'' என்றபோது, சாய்லட்சுமியின் கண்களில் பிரகாசம்.

சுபாஷ் சாய்லட்சுமி !

''இதுவரைக்கும் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹார்ட் சர்ஜரி செய்ய உதவியிருக்கோம். வெளியூர்ல இருந்து போன் பண்றவங்க, தங்கள் குழந்தையோட நிலையைச் சொல்லி அழறதோட, 'பஸ்ஸுக்கு கொடுத்து வரக்கூட காசு இல்லையே...’னு கதறும்போது, ரொம்பக் கஷ்டமா இருக்கும். பயணம், சாப்பாடு, மருத்துவமனையில் அட்மிஷன்னு எல்லா ஏற்பாடுகளையும் அவங்களுக்கு செய்து கொடுத்து, குழந்தைக்கு சிகிச்சை அளித்து, சந்தோஷமா ஊருக்கு அனுப்பி வைப்போம். ஆரம்பகட்ட டெஸ்ட், மருந்துகள்னு மட்டும் அனுப்பி வைக்காம... ஒவ்வொரு குழந்தைக்கும் அதோட உச்சபட்ச சிகிச்சை வரை உதவுவோம், உடன் இருப்போம்'' என்றபோது, சாய்லட்சுமியின் உளமார்ந்த அக்கறை வெளிப்பட்டது.

சுபாஷ் சாய்லட்சுமி !

'ஏகம் ஃபவுண்டேஷன்’ புராஜக்ட் மேனேஜர் ஸ்டெல்லா, ''2008-லதான் இந்த அமைப்புல சேர்ந்தேன். ஒவ்வொரு குழந்தையோட சிகிச்சையும் நிறைவு பெறும்போது... எங்க உறுப்பினர்கள் அடையற சந்தோஷமும் நிம்மதியும் பெரிசு. குழந்தைகள் நல மருத்துவமனையில இருக்கற 'உதவிக்கு வரலாமா?’ ஹெல்ப் டெஸ்க் மூலமா... மருத்துவமனைக்கு வர்றவங்களுக்கு வழி காட்டுறதுல இருந்து எல்லா உதவிகளையும் செய்றோம்.

குழந்தைங்க சீரியஸான கண்டிஷன்ல இருக்கறப்போ அவங்களுக்கு வென்டிலேட்டர் கருவி தேவைப்படும். சமயங்கள்ல அதிகமான குழந்தைகள் அனுமதிக்கப்படும்போது, இந்த மருத்துவமனையில இருக்கற வென்டிலேட்டர்கள வெச்சு அதை சமாளிக்க முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல எங்க அமைப்பு மூலமா வாடகைக்கு வென்டிலேட்டர் எடுத்து கொடுத்து உதவுவோம். சென்னையில் இருக்கற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,12,000 குழந்தைகளுக்கு  பம்மல்ல இருக்கிற சங்கரா கண் மருத்துவமனை உதவியோட இலவச கண் பரிசோதனையும் செய்திருக்கோம்'' என்று தங்களின் செயல்பாடுகளை விவரித்தார்.

இந்த அமைப்பினரின் உதவிகள் குறித்துப் பேசும் சென்னை, அரசினர் குழந்தைகள்நல மருத்துவமனையின் பதிவாளர், டாக்டர் ஸ்ரீநிவாசன், ''டாக்டர் சாய்லட்சுமியோட உதவியால இன்னிக்கு 2,000 குழந்தைகளுக்கும் மேல உயிர் வாழ்ந்துட்டு இருக்காங்க. திருமணம்கூட செய்துக்காம, அவங்க இந்தச் சேவையில் செலுத்துற அர்ப்பணிப்பை பார்த்து பலரும் வியந்திருக்கோம். தோற்றத்துல ரொம்ப எளிமை... ஆனா, ஒரு குழந்தைக்கு உதவணும்னு களத்தில் இறங்கிட்டா, அவங்களோட முழு வலிமையையும் வெளிப்படுத்துவாங்க. ஃபவுண்டேஷனுக்காக பல இடங்கள்லயும் லட்சங்கள் வரை உதவி வாங்கிட்டு வருவாங்க. எங்க மருத்துவமனை மட்டுமில்லாம... தமிழ்நாட்டுல இருக்குற பல மருத்துவமனைகள் மூலமாகவும் எத்தனையோ குழந்தைகளுக்கு உதவிட்டு வர்றாங்க!'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

சுபாஷ் சாய்லட்சுமி !

''94459-22333... இதுதான் எங்களோட ஹெல்ப் லைன் நம்பர். பண வசதியில்லாததால மருத்துவம் செய்துக்க முடியாத குழந்தைகள் இருந்தா... எங்களுக்குத் தெரியப்படுத்துங்க!''

- சாய்லட்சுமியின் புன்னகையில் கனிவு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism