
##~## |
தாம்பத்யம் ஒரு சங்கீதம்... வீணையும், அதை மீட்டும் விரல்களும் சுகமாகத் தொட்டுக் கொள்ளும்போதுதான் நல்ல இசை பிறக்கும். அப்படியிருக்க... 'கட்டிய மனைவியையே கசக்கி நுகர முற்பட்டிருக்கிறான் கலியுகக் கணவன்' என்ற செய்தியைப் படித்தபோது... நெஞ்சம் நடுங்கிப் போனது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'முதலிரவிலேயே மனைவி தாம்பத்ய உறவுக்குத் தயார் ஆகவில்லை என்பதில் வெறுப்படைந்த கணவன், மனைவியைக் கட்டிப்போட்டு... நினைத்தை சாதித்தானாம். இக்கேவலத்துக்கு, அவன் உடன்பிறந்த சகோதரியும் துணையாம். புதுமணப் பெண் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி' என்கிற செய்தி... அதிர்ச்சியிலும் அருவருப்பிலும் கண்களைக் கலங்கடிக்கிறது.
உடல்ரீதியான நிறைவை மட்டுமல்ல... மனரீதியான நெருக்கத்தையும்கூட கட்டாயப்படுத்தி வென்றுவிட முடியாது. இது புரியாமலே பல ஜென்மங்கள், குடும்ப வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கின்றன.
எல்லா உயிர்களிலும்தான் நடக்கிறது இனப்பெருக்கச் செயல். ஆனால், மனித இனத்தில் மட்டுமே... அது புனிதமாகவும் போற்றப்படுகிறது. ஒரு பூவின் மலர்ச்சி போல... புனித நிகழ்வாக நடக்க வேண்டிய ஒன்று அது. 'தொட்டால் பூ மலரும்... தொடாமல் நான் மலர்ந்தேன்...' என்று இதயம் பரிமாறும் இனமல்லவா நாம்!
மேற்சொன்ன வேதனைச் சம்பவத்தை அரங்கேற்றிய கணவர் - கீழ்த்தட்டைச் சேர்ந்தவர். அதற்காக, 'அறிவின்மைதான் கண்களை மறைத்துவிட்டது' என்று முடிவுகட்டிவிட முடியாது. இதைவிட வக்கிரமான காரியங்கள் மேல்தட்டுகளிலும் அரங்கேறத்தான் செய்கின்றன. குடும்ப கோர்ட்டுக்குப் போய் நின்று கவனித்தால்... பல இருட்டறைப் பரிதாபங்கள் வெளிச்சத்துக்கு வருவது தெரியும்.
இத்தனைக்கும் நடுவில், பட்டதாரிப் பெண் ஒருவர் எடுத்த துணிச்சலான முடிவு, ஆறுதல் செய்தி! 'லட்சக்கணக்கில் நகை, பணம் வாரிக்கொடுத்த பிறகும், வரதட்சணை போதவில்லை என்று நெருக்குகிறார்கள். இப்படி ஒரு கணவனே எனக்குத் தேவையில்லை' என்று பொங்கி எழுந்து, தாலி ஏறிய சில மணிகளிலேயே போலீஸில் புகார் கொடுத்து... பலரையும் நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார் அந்த 22 வயதுப் பெண். தாலி கட்டியவர் - போர்ச்சுகல் நாட்டு இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி!
மிரட்டலும் உருட்டலும் அல்ல ஆண்மையின் அடையாளங்கள்.... வாழ்க்கையை பங்கிட்டுக் கொள்ள வந்த சக மனுஷியின் இதயத்தை அன்பால் ஜெயிக்காதவரையில்... சமூகத்தின் எத்தனை உயர்ந்த நிலையில் இருந்தாலும்... அவன் தோற்றுப் போனவனே!
உரிமையுடன்

ஆசிரியர்