Election bannerElection banner
Published:Updated:

என்னவரே...என்னவரே...

சந்திப்பு: ம.மோகன் படங்கள்: சு.குமரேசன்

அருணா ஆனந்த்

##~##

உலக சதுரங்க நட்சத்திரம்... விஸ்வநாதன் ஆனந்த்! புதிய நுணுக்கங்களோடு சதுரங்கப் போட்டிகளில் வாகை சூடும் சாதுர்யன். கடந்த மே மாதம் மாஸ்கோவில் நடந்த உலக அளவிலான சதுரங்கப் போட்டியில் ஐந்தாவது முறையாக 'வேர்ல்ட் செஸ் சாம்பியன்’ பட்டத்தை வென்ற திறமைத் தமிழன்!

''இத்தனை வெற்றிகளுக்கும், பெருமைக்கும் காரணம்... எனக்கு அமைந்த நல்ல சூழல்தான். அந்த சுகந்த, சுதந்திர சூழலை என் உடன் இருந்து கொடுப்பது என் அன்பு ஜீவன், அருணா!''

- கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் மனைவி அருணாவின் அன்பை பகிர்ந்துகொள்ள மறவாதவர் ஆனந்த். சதுரங்கப் போட்டிகளுக்காக சதா சர்வதேசப் பயணங்களில் இருக்கும் அந்த சாகசக்காரரின் அன்பைப் பேசு கிறார் அருணா!

''நாங்கள் இருவரும் பிறந்து, வளர்ந்தது சென்னைதான். அவர் லயோலா கல்லூரியில் பி.காம்... நான் எத்திராஜ் கல்லூரியில் பி.காம். லவ்வாலஜி கதை எல்லாம் எதுவும் இல்லை. பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான். பத்திரிகை, டி.வி. என்று அவ்வப்போது இவர் முகம் பார்த்திருக்கிறேன். நிச்சயத்துக்குப் பிறகு, இவர் திறமையின் வீச்சை இன்னும் அறிய முடிந்தது.

என்னவரே...என்னவரே...

கல்லூரியில் படித்தபோதே உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதியுடன் வளர்ந்திருந்தவர், அதிலும் கல்லூரி இறுதிஆண்டின்போது, உலகளவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என நாடே நம்பிக்கை வைத்திருந்த செஸ் பிளேயர் என்றெல்லாம் வீட்டினர் சொல்லக் கேட்க கேட்க, அப்போது என் மனதில் ஒரு விஷயத்தை உறுதி ஏற்றிக்கொண்டேன். 'வெற்றிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கும் அவர் பயணத்தை, எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்... ஒரு மனைவியாக முடிந்தவரை மெருகேற்றிக் கொடுக்க வேண்டும்' என்பதே அது. அதில் இந்த நிமிடம்வரை சமர்த்தாகவே இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

திருமணம் முடிந்த மூன்றாவது நாள், அவருக்கு ஜெர்மனியில் டோர்னமென்ட். எங்களின் ஹனிமூனே இந்த ட்ரிப்தான். 'ஃப்ரீயா, ரிலாக்ஸ்டா இல்லாம... இப்படி போட்டிக்கு கூட்டிட்டு வந்துட்டேன்னு வருத்தமில்லையே..?’ என்று என் கண்கள் பார்த்து கேட்டுக்கொண்டே இருந்தார். 'உங்களுக்கு செஸ் எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும். நாம அவுட்டிங், ஷாப்பிங் போக, ரிலாக்ஸ்டா பேச, சிரிக்க இந்த முழு ஆயுள் இருக்கு. ஆனா, இந்த டோர்னமென்ட்டை இப்போ மட்டும்தான் விளையாட முடியும். ஸோ, எந்தக் குழப்பமும் இல்லாம எப்பவும் போல முழு கவனத்தோட விளையாடுங்க!’ என்றேன். அதிலிருந்து அவரின் பெரும்பாலான போட்டிகளில் ஒரு மாரல் சப்போர்ட்டாக நானும் உடன் இருந்திருக்கேன். இதுவரைக்கும் டோர்னமென்டுக்காக 54 நாடுகளுக்கு சென்றிருக்கும் அவருடன், 39 நாடுகளுக்கு உடன் சென்றிருக்கிறேன். 'முக்கியமான நேஷனல், இன்டர்நேஷனல் போட்டிகள்ல நீ என்கூட இருக்கணும்!’ என்பது அவரின் அன்புக் கட்டளை.

2010-ல் பல்கேரியா நாட்டின் சோஃபியா நகரத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளச் சென்றது, த்ரில்லான அனுபவம். இயற்கை சீற்றம் காரணமாக விமானத்தை கேன்சல் செய்துவிட்டார்கள். ஜெர்மனியில் இருந்த நாங்கள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து குட்டிக் குட்டி நாடுகளை தரை வழியாகக் கடந்து பல்கேரியாவை அடைய வேண்டும். எனக்குப் பதற்றமாக இருந்தது. 'நாமே பதற்றப்பட்டா, விளையாட வேண்டிய அவங்க என்ன  பதற்றத்துல இருப்பாங்க..?’ என்று மனதுக்குள் வெட்ட, என் டென்ஷனை மறைத்து, வழிநெடுக அவரை கூல் செய்துகொண்டே வந்தேன். ஒருவழியாக மூன்று நாட்கள் பயணம் முடித்து அந்த இடத்தை அடைந்தபோது, 'டிராவல் களைப்பு, டென்ஷன்னு எதுவும் என் பக்கத்தில் வரவிடாமல் பார்த்துக்கிட்ட. தேங்க்ஸ் அருணா!’ என்று ஒரு புன்னகையுடன் போட்டிக்குச் சென்றார்... வென்றார். அதுதான் நான்காவது முறையாக அவர் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தருணம்!

டோர்னமென்ட் இல்லாத சமயங்களில் எல்லாம் பிளானெட்ஸ் வீடியோ, வைல்டு லொகேஷன்ஸ் என்று சார் இயற்கை சார்ந்த தேடலில் மூழ்கிவிடுவார். ஆனால், இப்போது அவரின் அத்தனை மணித்துளிகளையும் தனதாக்கிக் கொள்கிறான்... ஒன்றரை வயதாகும் எங்கள் பையன் அகில் ஆனந்த். அவர் வீட்டில் இருக்கும் நாட்களில்... அகில் என் கைக்கு வருவதே இல்லை, அவர் விடுவதும் இல்லை. அப்போதெல்லாம் அப்பாவையும் பையனையும் பார்க்க அத்தனை ஆனந்தமாக இருக்கும். ஆனால், அவன் முதல் பிறந்த நாளன்று... அவர் ஜெர்மனியில் இருக்க வேண்டிய சூழல். மிகுந்த தவிப்பில் இருந்தவரிடம் மீண்டும் அதையேதான் சொன்னேன்... 'அகில் நம்மோட கொண்டாட இன்னும் நிறைய நிறைய பிறந்த நாட்கள் இருக்கு... ஆனா, நீங்க கமிட் ஆகியிருக்குற வேலையை இப்போதான் முடிக்க முடியும்!'' இங்கு அகில் வீட்டில் கேக் வெட்ட, அவர் அங்கிருந்தே வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக பார்த்து வாழ்த்துப் பாட, அந்த மகிழ்வில் தூரங்கள் காணாமல் போயின!

என்னவரே...என்னவரே...

சமீபத்தில் மாஸ்கோவில் நடந்து முடிந்த 'வேர்ல்ட் செஸ் சாம்பியன்’ போட்டியின்போது, இறுதி மேட்ச் ரொம்பவே ஹாட். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கெல்ஃபண்ட் மற்றும் இவருக்குமான போட்டி ரொம்பவே பலப்பட்டது. அப்படியான சமயங்களில், யாராவது ஒருவரை அருகில் வைத்துக்கொள்ள போட்டி யாளர்களுக்கு அனுமதி உண்டு. 'அருணா வா!’ என்று இவர் என்னை இருக்க வைத்தார். மனசு முழுக்க பிரார்த்தனைகள் சுமந்து, 'நீங்கதான் ஜெயிப்பீங்க!’ என்ற நம்பிக்கையை என் முகத்தில் வெளிப்படுத்தியபடியே அவர் அருகில் இருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வாரம் நடந்த அந்தப் போட்டியின் முடிவில் வெற்றிக் கோப்பையை இவர் கைப்பற்றியது உலகமே அறிந்த விஷயம்!

ஹாலிடேஸ் டூர், நண்பர் களுடன் 'கெட் டுகெதர்' என்று தனக்கான ரிலாக்ஸ் நேரங்களை அவர் தாராளமாக எடுத்துக் கொள்வார். ஆனால், அடுத்த டோர்னமென்ட் வரவிருக்கிறது என்றால், பொழுதுபோக்குகளை குறைத்து, ஏதோ பிகினர் போல குறைந்தது இரண்டு மாதங்களாவது முழு அர்ப்பணிப்போடு பயிற்சி எடுப்பார். அந்த நேரமெல்லாம் அவரின் தேவைகளை அவர் கேட்கும் முன்னே செய்துகொடுப்பதில் நான் மிக கவனமாக இருப்பேன். அவரின் பொறுப்புகளை, அவரே அறியாமல் முடித்து வைப்பதிலும் பெரு மகிழ்ச்சி எனக்கு. 'அருணா இந்த வேலையை மறந்தே போயிட்டேனே!’னு என்று அவர் சொல்லும்போது, அதை முன்பே முடித்திருக்கிற மனைவியாக இருப்பதில்தான் இழையோடுகிறது என் ஆனந்தம்! இந்த சந்தோஷம் என்னவரோடு இன்னும் பல ஜென்மங்களுக்கு வேண்டும்!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு