Published:Updated:

இல்லத்தரசிகளுக்கு சம்பளமா ?

அந்த அளவுக்கு கணவர்கள் சம்பாதிக்கவில்லை!’ ம.பிரியதர்ஷினி, சா.வடிவரசு படங்கள்: வி.ராஜேஷ், பா.காயத்ரி அகல்யா, செ.நாகராஜன்

இல்லத்தரசிகளுக்கு சம்பளமா ?

அந்த அளவுக்கு கணவர்கள் சம்பாதிக்கவில்லை!’ ம.பிரியதர்ஷினி, சா.வடிவரசு படங்கள்: வி.ராஜேஷ், பா.காயத்ரி அகல்யா, செ.நாகராஜன்

Published:Updated:
 ##~##

ஓர் இல்லத்தரசியின் வேலைகளையும், பொறுப்புகளையும், கடமைகளையும் அளவிடும் தராசு... இப்புவியில் இல்லை. அதேசமயம்... அந்த சேவைகளுக்கான அங்கீகாரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதான் வேதனை. இதுபோதாதென்று... கணவர், குழந்தைகள், குடும்ப நிர்வாகம் என்று சுழலும் அவர்களுக்கு... 'வீட்டில் சும்மாதான் இருக்கா' என்கிற பட்டம் வேறு. 'இந்த நிலையை மாற்ற, மாதம்தோறும் கணவன்மார்கள் தங்கள் வருமானத்தில் ஒரு தொகையை இல்லத்தரசிகளுக்கு சம்பளமாகத் தர வேண்டும்’ என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒரு யோசனையை தெரிவித்து இருக்கிறது.

வழக்கம்போல எதிர்ப்பு, ஆதரவு என இக்கருத்துக்கு இருநிலை விளைவுகள் வந்துகொண்டிருந்தாலும், பல மட்டங்களில் இருந்தும், குறிப்பாக, பெண்கள் அமைப்புகளிடம் இருந்தே எதிர்ப்புக் கிளம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. 'சம்பளம் வாங்க, நாங்க என்ன வேலைக்காரங்களா..?’ என்பது அவர்களின் கோபம். இந்நிலையில் இந்த யோசனை பற்றி இவர்களிடம் கேட்டோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குஷ்பு (திரைப்பட நடிகை):

இல்லத்தரசிகளுக்கு சம்பளமா ?

''அன்பை எப்படி பணத்தால் அளவிட முடியும்..? இல்லத்தரசிக்கு எப்படி சம்பளம் நிர்ணயிக்க முடியும்..? இங்க எந்தப் பெண்ணும் பணத்துக்காக மனைவி, தாய் பொறுப்பு களை செய்றதில்லை, இனி செய்யப் போறதும் இல்லை. அஃப்கோர்ஸ், இல்லத்தரசிகளுக்கும் தேவைகள் இருக்கு. அதனால, கணவன் தன் வருமானத்தில் இருந்து மாசம் ஒரு தொகையை மனைவிக்கு கட்டாயம் கொடுக்கணும்ங்கிற கான்செப்ட்ல எனக்கு உடன்பாடு உண்டு. ஆனா, அதை கணவர், குழந்தைகளை பார்த்துக்கறதுக்கான சம்பளமா கொடுக்கறது, தன் உலகமே குடும்பம்தான்னு வாழற பெண்களை இழிவுபடுத்துறதாதான் எனக்குத் தோணுது. கூடவே, ஒரு இல்லத்தரசியோட அன்புக்கு சம்பளம் கொடுக்கற அளவுக்கு, இந்த உலகத்தில் எந்த கோடீஸ்வர கணவரும்கூட சம்பாதிக்கவில்லை!''

தனலட்சுமி (எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் மனைவி):

இல்லத்தரசிகளுக்கு சம்பளமா ?

''என்னை மாதிரியான இல்லத்தரசிகளுக்கே இது ஷாக்தான். ஒருவேளை இப்படி ஒரு சட்டம் கொண்டுவந்தா, அப்புறம் மனைவிக்கும் வேலைக்காரிக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? நம் ஆண்களுக்கு, இப்போவே வீட்டில் இருக்கும் பெண்களோட பளுவும் பொறுப்புகளும் புரியல... அவங்களோட அன்பையும் ஆளுமையையும் கொண்டாடத் தெரியல. இதில் சம்பளம் வேற கொடுத்துட்டா... ஏதாவது உடல், மன அலுப்பில் பெண்கள் பேசினாக்கூட, 'அதான் செய்ற வேலைக்கு சம்பளம் வாங்குறே இல்ல...’னு முழு ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பிச்சுடுவாங்க. சம்பளம் எல்லாம் வேண்டாம்... சின்னச் சின்ன பாராட்டுகள், புரிதல்கள், அன்புகள்.... இதுபோதும் பெண்களுக்கு.''

எழில்செல்வி (பள்ளிக்கூட ஆசிரியை, சென்னை):

இல்லத்தரசிகளுக்கு சம்பளமா ?

''முழு சம்பளத்தையும் மனைவிகிட்டயே கொடுக்கணும்னு ஒரு சட்டம் வந்தாகூட நல்லதுதான். அப்பத்தான் எல்லா வேலைகளும் சரியானபடி நடக்கும். 'கட்டின மனைவிக்கு... சம்பளமா பணத்தைக் கொடுக்கறது தப்பு'னு சிலர் சொல்வாங்க. இது தப்புனு சொன்னா, முதல் மாச சம்பளத்த சென்டிமென்ட்டா கொண்டு போய் அம்மாகிட்ட கொடுக்கறதும் தப்பு    தான். ஆண்களவிட பெண்கள்கிட்டதான் பொறுப்புகள் அதிகமா இருக்கும். அதனால ஒவ்வொரு ரூபாயையும் பெண்கள் சரியா செலவு செய்வாங்க. இதனால அதிகமா பணத்தை சேமிச்சும் வைக்கமுடியும் அதுமட்டுமில்லாம குடும்பமும் கூடிய சீக்கிரமே முன்னேற்றமடையும்!''

நாகசைலா (வழக்கறிஞர், சென்னை):

இல்லத்தரசிகளுக்கு சம்பளமா ?

''பெண்கள்கிட்ட 'நீங்க என்ன பண்றீங்க..?’னு கேட்டா, பல இல்லத்தரசிகள் 'சும்மாதான் இருக்கேன்’னு சொல்லுவாங்க. காலையில் ஐந்து மணியில் ஆரம்பிச்சு... இரவு பதினோரு மணி வரை சுழன்றுட்டே இருக்கிற வேலையை 'சும்மா’ இருக்கறதா இந்த சமூக அமைப்பு அவங்களை நம்ப வெச்சுருக்கறது எத்தனை கொடுமை. ஆண்களுக்குகூட சனி, ஞாயிறு விடுமுறைகள்னு உண்டு. ஆனா, இல்லத்தரசிகளுக்கு வேலை - விசேஷ, விருந்து தினங்களில் கூடுதல் வேலை... இந்த ரெண்டு கேட்டகரியும்தான். உடம்பு சரியில்லாம இயலாமையில் ஓய்வெடுக்க நேர்ந்தாக்கூட, 'ஐயோ... வீட்டுல எல்லாரும் சாப்பாட்டுக்கு சிரமப்படுவாங்களே’னு அப்பவும் அவங்க மனதின் தவிப்புக்கு ஓய்வில்லை.

பெண்கள் இப்படி எல்லாப் பொறுப்புகளையும் இழுத்துப் போட்டுட்டு செய்றதாலதான், ஆண்களால அலுவலகத்தில்... வெளியிலனு நிம்மதியா வேலை செய்ய முடியுது... சம்பளம் வாங்க முடியுது. அதனால கணவன், தன் வருமானத்துல ஒரு பங்கை மனைவிக்குக் கொடுக்கணும்கறதை நான் வரவேற்கிறேன். ஆனா... 'சம்பளம்’ங்கிற வார்த்தை சரியில்லை. 'உரிமை’ங்கிறதுதான் சரி.

எத்தனை வீட்டுல மனைவி தனக்குனு ஒரு சேலையை சுதந்திரமா வாங்கிக்க முடியுது சொல்லுங்க? ஆயிரம் விளக்கங்கள் கணவனுக்கும், புகுந்த வீட்டுக்கும் சொல்ல வேண்டியது இருக்கு. வெளிநாடுகள்ல எல்லாம், கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கும் எந்த சொத்தும் கணவன், மனைவி ரெண்டு பேருக்கும் உரிமையானது. ஒருவேளை பிரிஞ்சு போக நேரிட்டா, திருமணத் துக்கு அப்புறம் வாங்கின அத்தனை சொத்துகளையும் சரிபாதியா பிரிச்சு எடுத்துப்பாங்க. உலகமே இப்படி இருக்கற நிலையில... 'கணவனின் வருமானத்தில் மனைவிக்கும் பங்கு உண்டு' என்ற பேச்சு இங்க எழுந்திருக்கறது நல்ல விஷயம்தான். சம்பளமா... உரிமையா... அதை எந்த வரைமுறையின் கீழ் தர்றது என்பதில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் கடந்து... அதை அடையணும்!''