Election bannerElection banner
Published:Updated:

ஒரு மகனை இழந்தோம்...நூறு மகன்களை பெற்றோம் !

கல்விச் சேவையில் கலக்கும் ராணி சா.வடிவரசுபடங்கள்: ஆ.முத்துக்குமார்

 ##~##

'கல்விக் கட்டணம்தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை' என்கிற நிலைதான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஒரு ரூபாய்கூட கட்டணம் வசூலிக்காமல் இயங்கி வரும் 'அஜய் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி’, மகத்தான ஆறுதல்தானே!

காதுகேளாத மாணவர்களுக்கு கல்வியுடன் சீருடை, புத்தகம், மருத்துவ உபகரணங்கள் என அனைத்தும் இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சேவையின் மூலகாரணம், பள்ளியின் உரிமையாளர் ராணி தாஸ்!

சென்னை, மேற்கு அண்ணா நகரில் உள்ள தன் பள்ளியில், சுட்டிக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தவர், நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்.

''எம்.ஏ, பி.எட் படிச்சுட்டு 'சிறுமலர்’ பள்ளியில் அரசு ஆசிரியையா 37 ஆண்டுகள் வேலை பார்த் தேன். அப்ப, நெதர்லாந்து நாட்டுல காதுகேளாத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை பற்றிய சிறப்புப் படிப்பு படிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. என் கணவர் ஹவுசிங் போர்டில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். எங்களுக்கு அஜய்னு ஒரு பையன்...'' என்றவருக்கு கண்கள் கலங்க, நிறுத்தி, தொடர்ந்தார்...

ஒரு மகனை இழந்தோம்...நூறு மகன்களை பெற்றோம் !

''ஒன்பதாம் வகுப்பு படிக்கறப்போ... டீச்சர் திட்டிட்டாங்கனு மனசு ஒடிஞ்சு தற்கொலை செய்துகிட்டான் அஜய். அதுக்குப் பிறகு நாங்க நடைபிணமாயிட்டோம். எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் அஜய் போலவே தெரியும். அதனாலேயே எப்பவும் நிறைய குழந்தைகளோட இருக்கணும்னு தோணும். அப்போதான் என் மகனோட நினைவா, படிக்க வசதியில்லாம கஷ்டப்படுற குழந்தைகளுக்காக பள்ளி தொடங்கி, படிப்புதவி செய்யலாம்னு முடிவெடுத்தோம்.

ஏற்கெனவே அனுபவம் இருந்ததால, காதுகேளாத ஏழை மாணவர்களுக்கான பள்ளியா அது இருக்கட்டும்னு தோணுச்சு. 20 வருஷத்துக்கு முன்ன ஐந்து மாணவர்களோட 'அஜய் செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி’யை தொடங்கினோம். இன்னிக்கு இந்த ஸ்கூல்ல 141 மாணவர்கள் படிக்கறாங்க. இதுவரைக்கும் எங்க பள்ளிக்காக யார்கிட்டயும் ஒரு ரூபாய்கூட நன்கொடை வாங்கினதில்ல'' என்றவர்,

ஒரு மகனை இழந்தோம்...நூறு மகன்களை பெற்றோம் !

''இங்க இருக்கற குழந்தைங்கதான், மகனை இழந்த எங்க சாபத்துக்கு ஆறுதலா இருக்காங்க. ஒரு மகனை இழந்த எங்களுக்கு இப்ப நூற்றுக்கணக்கான மகன்/மகள்கள். ஒவ்வொரு குழந்தையையுமே அஜய்னுதான் நாங்க பார்க்கிறோம். உள்ளார்ந்த அன்போட, அக்கறையோட கல்வி, சீருடை, ஹியரிங் எய்டுனு பார்த்துப் பார்த்து செய்றோம். இங்க படிக்கிற மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க 16 டீச்சர்ஸ் மற்றும் யோகா டீச்சர் இருக்காங்க. டைப்ரைட்டிங் உட்பட சில பயிற்சிகளையும் தந்துட்டிருக்கோம். எங்க மாணவர்களோட திறமைகளை வெளிக்கொண்டு வர முடிஞ்ச அளவுக்கு எல்லா விதத்திலும் முயற்சிகள் செய்றோம். எங்க மாணவிகள் வர்ஷா, சுபாஷினி ரெண்டுபேரும்... ரெண்டு வருஷத்துக்கு முன்ன 10 மற்றும் 12-ம் வகுப்புகள்ல மாநில அளவில் காதுகேளாதோரில் முதல் மதிப்பெண் வாங்கியிருக்காங்க'' என்று பெருமையோடு சொன்னவரை தொடர்ந்தார், அவருடைய கணவர் சுதந்திரதாஸ். இவர்தான் பள்ளியின் தாளாளர்.

''இந்த இருபது வருஷமா பள்ளிக்கான கட்டட வாடகை, ஆசிரியர்கள் சம்பளம், கல்விச் செலவுகள், சீருடைனு எல்லாமே சொந்த பணத்துலதான் செய்துட்டு வர்றோம். ஆனா, இப்போ அது சிரமாமாயிட்டே வருது. இந்தக் குழந்தைகள் முகத்தில் நாங்க தரிசிக்கிற சந்தோஷம்தான் எல்லா கஷ்டங்களையும் தாண்டி இதைக் கொண்டு போக வைக்குது. பள்ளிக்கான சூழலும் இங்க இல்லாதது வருத்தம்தான். முக்கியமா, குழந்தைகளுக்கு விளையாட இடமில்லை. சிலசமயம் பள்ளிச் செலவுகளுக்காக என் மனைவி நகைகளை அடமானம் வைக்கும்போது, எங்களுக்கு அப்புறம் இந்தப் பள்ளியை யார் நடத்துவானு வருத்தமா இருக்கும்'' என்றார் கலங்கிய கண்களை மாணவர்களின் பக்கம் திருப்பி.

இப்பள்ளியில் பணியாற்றும் மேனகா, ''ஒன்பது வருஷமா வேலை பார்க்கிறேன். எம்.ஃபில் படிச்சிருக்கற எனக்கு எத்தனையோ இடங்கள்ல வேலை வந்தாலும், இந்த ஸ்கூலை விட்டுப்போக மனசில்லை. இவங்க ரெண்டு பேரும் ரொம்பவே கஷ்டப்பட்டு நடத்திட்டு வர்றதை கூடவே இருந்து பார்க்கறதால, அவங்களோட சேவைக்கு என்னால முடிஞ்ச பங்களிப்பா இங்கயே தொடரணும்னுதான் தோணுது. அரசாங்கம் இந்தப் பள்ளிக்கு ஏதாவது உதவி செய்தால், பல மாணவர்களோட எதிர்காலம் சிறப்படையும்!'' என்றார் வேண்டுகோளாக!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு