Published:Updated:

அவன் அம்மா னு அழுததும்... நான் செத்தே போயிட்டேன் ..!

எஸ்.ராஜாசெல்லம் படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கும்பளத்தூர் குக்கிராமத்தை, சமீபத்தில் ஊர் உலகமே உற்றுநோக்கும்படி செய்தவன், மூன்று வயது குட்டிப்பயல் குணா. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து, பலரும் பதைபதைப்புடன் பிரார்த்திக்க, தீயணைப்பு வீரர்களின் நாலு மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப் பட்ட பாலகன்! ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்டது இதுதான் முதல்முறை.

குணாவின் பெற்றோரான ஆனந்தன் - பத்மா தம்பதிக்கு விவசாயம்தான் தொழில். வறட்சியை சமாளித்து விவசாயம் செய்ய நினைத்தவர்கள், சுமார் 600 அடிக்கு போர்வெல் அமைத்தனர். ஒரு சொட்டு நீர்கூட அதிலிருந்து கிடைக்காமல் போக, விதியை நொந்துகொண்டு வழக்கமான வேலைகளில் இறங்கினர். ஆயிரங்களை கொட்டி அமைத்த அந்த போர்வெல் குழி, தங்கள் குழந்தைக்கே குறிவைக்கும் என்ற விழிப்பு உணர்வு அந்தத் தம்பதிக்கு இல்லை. குழியை மூடாமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில், அந்த இளங்கன்று, தன் காலுக்கடியில் இருந்த 600 அடி ஆபத்தை உணராது விளையாடிக் கொண்டிருந்தபோதுதான்... கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கதறச் செய்யும் அந்த விபரீதம். அவனுடன் விளையாடிக் கொண்டுஇருந்த 4 வயது மகள் பூஜாவின் அழுகுரலைக் கேட்டு, ஓடிவந்த பத்மாவின் இதயம் நின்றே போயிருக்கிறது.

அவன் அம்மா னு அழுததும்... நான் செத்தே போயிட்டேன் ..!

அந்த திக்திக் நிமிட அனுபவங்களை, குணாவை மடியில் அமர்த்தியவாறு நம்மிடம் பத்மா பகிர்ந்தபோது, புரிந்தும் புரியாமலும் கவனித்துக் கொண்டிருந்தான் குணா. ''வீட்டுக்காரர் விவசாய வேலைகள பார்த்துட்டு இருந்தார். நான் துணி துவைச்சுட்டு இருந்தேன். பூஜாவும், குணாவும் போர் குழி பக்கம் போனதை கவனிக்கல. பையன் உள்ளே விழுந்ததை சொல்லக்கூட விவரம் இல்லாம நின்னு அழுதுக்கிட்டு இருந்தா பூஜா. ஓடிவந்து பார்த்தப்போ அவன் எங்கயோ தூரத்துல அழுகிற மாதிரி குரல் மட்டும் கேட்டுச்சு. பொண்ணுகிட்ட கேட்டா, குழியை நோக்கி கையைக் காட்டினா. தரையில் படுத்து குழிக்குள் காதை வெச்சேன். 'அம்மா அம்மா’னு அழுகிற சத்தம்... நான் செத்தே போயிட்டேன்.

கூச்சல் போட்டுகிட்டே தண்ணீர் விடுற நீளமான ட்யூபை போர் குழிக்குள் விட்டு, 'என் சாமி ட்யூபை புடிடா’னு கதறி அழுதேன். குழந்தையால பிடிக்க முடியல. அதுக்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் சொன்னவங்க, என்னை தூரமா இழுத்துக்கிட்டு போனாங்க. கொஞ்சிக் குலாவி பேசிக்கிட்டு இருந்த என் குழந்தை... குழிக்குள்ள அழற சத்தத்தை ஜீரணிக்கவே முடியல. அவங்களை எல்லாம் மீறிக்கிட்டு, 'எம் புள்ளையோடு நானும் போறேன்’னு சொல்லிக்கிட்டு ஓடிப்போய் குழிக்குள் காலை விட்டேன். குழந்தை மேல இருந்த பாசத்துல என்ன செய்யுறோம்னே தெரியாம பண்ணினேன். அக்கம் பக்கத்துல இருந்து கூடிட்டவங்க... 'கல்லும் மண்ணும் குழந்தை மேல் விழுந்தா... விபரீதம் ஆகிடும். தீயணைப்பு வீரர்கள் வந்துட்டே இருக்காங்க. தைரியமா இரு’னு ஆறுதல் சொன்னாங்க. அதுக்குப் பிறகு அமைதியாகிட்டாலும்... மனசு துடியா துடிச்சது.''

அவன் அம்மா னு அழுததும்... நான் செத்தே போயிட்டேன் ..!

- கண்களில் அந்த நேரத்துப் பதற்றம் மீண்டும் ஒட்டிக்கொண்டது பத்மாவுக்கு.

''அப்பப்போ அழுகுரல் எழுப்பின குணா... ஒரு கட்டத்துக்குப் பிறகு சத்தத்தை நிறுத்த... எனக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பிச்சுடுச்சு. குழிக்குள் டார்ச் அடிச்சுப் பார்த்துட்டு, '20 அடி ஆழத்துல சிக்கியிருக்கான். அழுது களைப்பானதால அமைதியாகிட்டானும் சொன்னவங்க, பக்கவாட்டில் 13 அடி வரை பள்ளம் தோண்டினாங்க. அதுக்குப் பிறகு பாறை வந்துட்டதால செய்வதறியாம தவிச்சாங்க. பிறகு, அந்த இடத்துல இருந்து குறுக்கே குடைஞ்சு போர்குழிக்குள் சுரங்கம் மாதிரி செஞ்சு, ஏழு அடி ஆழத்தில் பையன பார்த்த அதிகாரிங்க, 'உம்மவன் உயிரோட இருக்காம்மா. கொஞ்ச நேரத்துல வெளியில் கொண்டு வந்துடலாம். தைரியமா இரும்மா!’னு சொன்னாங்க''- பெருமூச்சு விடுகிறார்.

''கயிறு, கம்பி, கொக்கினு பயன்படுத்தி, கவனமா மேல இழுக்க ஆரம்பிச்சாங்க. வேதனையை தாங்கிக்கிட்டு அந்த நாலு மணி நேரம் சமாளிச்சுட்டேன். ஆனா... குழந்தை கையில் கிடைக்கப்போற கடைசி சில நிமிடங்கள்ல இருப்பு கொள்ளல. புழுதி படிஞ்சு கிடந்த குழந்தையை மீட்டு என் கையில் ஒப்படைச்சப்போ சந்தோஷம், அழுகை, பதற்றம்னு ஒண்ணா சேர்ந்து மயக்கமே வர்றமாதிரி ஆகிடுச்சு. செத்துப் பிழைக்கிறதுனா என்னனு அந்த நிமிஷம் புரிஞ்சது. புள்ளையை வாரியணைச்சு முத்தம் கொடுத்த பிறகுதான் நிதானத்துக்கு வந்தேன். குழந்தையை உயிரோடு மீட்டுக் கொடுத்த அதிகாரிங்க அத்தனை பேர் கால்லயும் விழுந்து கதறணும்போல இருந்துச்சு. ஆனா... உடனடியா ஆஸ்பத்திரிக்கு வந்துட்டோம். ஊர் திரும்பினதும்... அவங்க அத்தனை பேர் பாதங்களையும் வணங்கி கண்ணீர் விட்டு அழுதாத்தான் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்!''

- குணாவின் கண்களில் மட்டுமல்ல, தாயின் விழிகளிலும் இன்னும் மிரட்சி விலகவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு