Published:Updated:

உங்கள் தட்டில் உணவா..விஷமா ? - 3

ஆரோக்கியம் பேசும் அலர்ட் தொடர் பி.சௌந்தரபாண்டியன், படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதைப் போல், எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்பதும் மிகமுக்கியம். அதிக உணவு ஆபத்து என்பதை உலகளவில் எல்லோரும் இப்போது உணரத் தொடங்கிவிட்டனர்.

''நாம் உண்ணும் உணவில் நான்கில் ஒரு பங்கில்தான் நாம் உயிர் வாழ்கிறோம் - மீதம் மூன்று பங்கில் டாக்டர்கள்தான் உயிர் வாழ்கிறார்கள் (We only live of a quarter of what we eat - the doctors live of the remaining)என்பது எகிப்திய பழமொழி.

'மூன்று வேளை உண்பவன் ரோகி
இரண்டு வேளை உண்பவன் போகி
ஒரு வேளை உண்பவன் யோகி’ என்பது நம்முடைய பழமொழி.

மனித உடம்பை, வெறும் காற்றடைத்த பை என்று இகழ்ந்து, தவமே சிறந்தது என்று தியான வாழ்க்கை வாழ்ந்த முனிவர்களுள் திருமூலர் முற்றிலும் மாறுபட்டவர். 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பவர், அதற்கான முக்கிய வழியையும் கூறுகிறார்...

'அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள

உங்கள் தட்டில் உணவா..விஷமா ? - 3

கண்டம் கறுத்த கபாலியும் ஆமே’ என, 'குறைவான உணவே ஆரோக்கியத்தின் சூட்சமம்' என்று தெளிவுபடுத்துகிறார்  திருமூலர்.

அறம் - பொருள் - இன்பம் என மனிதனின் எந்தப் பிரச்னையையும் விட்டுவைக்காத திருவள்ளுவர், 'மருந்து’ என்கிற அதிகாரத்தின் 10 குறள்களில், 6 குறள்கள் சீரற்ற உணவு முறையே நோய்க்குக் காரணம் என்பதை ஆணித்தரமாகச் சொல்வதற்காக பயன்படுத்துகிறார் (மனிதனைக் கொல்லும் 10 முக்கிய வியாதிகளில் 6 வியாதிகள், உணவு சம்பந்தப்பட்டவை என்கிற இன்றைய ஆராய்ச்சியையும், இதையும் நான் வியந்து பொருந்திப் பார்த்துள்ளேன்!). குறிப்பாக,

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு  

                               அருந்தியது

அற்றது போற்றி உணின்’ என்ற குறளில், ஒருவன் தான் முன்பு உண்ட உணவு செரித்ததை அறிந்து பின்பு உண்டானாயின், அவன் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்று வேண்டுவதில்லை என்று மிகப்பெரும் ஃபார்முலாவை மிக எளிதாக எடுத்து வைக்கிறார் வள்ளுவர்.

ஒரு வேளை உணவாவது குறைத்தால், உடலுக்கு மிகவும் நல்லது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. 'ஒரு வேளை உணவை இழத்தல், நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது’ என்பது ஸ்பெயின் பழமொழி.

‘Eat your morning breakfast as a prince... Eat your dinner like a pauper’என்பது ஆங்கிலப் பழமொழி. 'காலை உணவை இளவரசன் மாதிரி சாப்பிடு, இரவு உணவை பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடு' என்பது அதன் அர்த்தம். நம் ஊரில் பிராமணர்களின் உணவுமுறை கிட்டத்தட்ட இதுமாதிரிதான். காலை உணவும், மதிய உணவும் கலந்த (breakfast + lunch = brunch) உணவை 9 மணிக்கு எடுத்துக் கொண்டு, ஆபீஸ் வேலைகளை முடித்து விட்டு, மாலையில் எளிய இரவு உணவு என்ற அவர்களின் உணவுமுறை அர்த்தமுடையதுதான்.

பொதுவாக, நம்மில் பெரும்பாலானவர்கள்... பசி எடுத்துச் சாப்பிடுவதில்லை. கடிகாரத்தைப் பார்த்து, 'ஆஹா, மணி 9 ஆகிவிட்டது...’ என்று வயிற்றுக்குப் போட்டுக் கொள்கிறோம். ஆனால், மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவும் அப்படியில்லை. பசித்தபோது மட்டுமே உணவு தேடுகின்றன, வேட்டையாடுகின்றன. டி.வி. சேனல்களில் (Discovery channel, Animal planet) பார்த்திருப்பீர்களே... சிங்கம் ஒன்று படுத்திருக்கும். அதற்கு வெகு அருகில் மான், குதிரை போன்ற மற்ற விலங்குகள் சர்வ

உங்கள் தட்டில் உணவா..விஷமா ? - 3

சாதாரணமாக புல் மேய்ந்து கொண்டிருக்கும். சிங்கத்துக்கு எப்போது பசிக்கிறதோ, அப்போது மட்டும் பாய்ந்து சென்று ஒரு மானை அடித்துக் கொன்றுவிட்டு, கூட்டமாகச் சேர்ந்து சாப்பிடும். ஆனால், மனிதர்கள் பசித்தாலும், பசிக்காவிட்டாலும் மூன்று வேளை முழுச்சாப்பாடும், மற்ற வேளைகளில் நொறுக்குச் சாப்பாடும் சாப்பிடுகிறோம்.

மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பிச்சப்பன் தலைமையில் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பாதாள அறை ஒன்றில் சகல வசதிகளுடன் ஒருவர், ஒரு வாரம் தங்குவார். அவருக்கு நாள், நேரம் குறித்த காலண்டர், கடிகாரம் போன்ற வசதிகள் கிடையாது. மற்றபடி, புத்தகங்கள், சங்கீதம் போன்ற வசதிகள் உண்டு. பசி எடுக்கும்போது போனை எடுத்து, என்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். சற்று நேரத்தில் கேட்ட உணவு பக்கத்து அறையில் வைக்கப்படும். நினைத்தபோது தூங்கலாம், விழிக்கலாம். இப்படி ஒரு வாரம் ஆராய்ந்ததில், பலருக்கு மூன்று வேளை சாப்பாடு தேவையில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

தொன்மைப் பழமொழிகள் தொடங்கி, இன்றைய ஆராய்ச்சிகள் வரை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு இங்கே பேசுவதற்குக் காரணம், நாமும் இனி கைக்கடிகாரத்தைப் பார்க்காமல், வயிற்றுக்குள் இருக்கும் உயிரியல் கடிகாரத்தை (biological clock) பார்த்து மட்டுமே சாப்பிட்டால், ஆரோக்கியம் வளர்பிறை என்பதை வலியுறுத்திச் சொல்வதற்காகத்தான்!

அதேபோல, விரதமும் முக்கியமான உணவுக் கட்டுப்பாட்டு முறையே! மனித உடலுக்கு நன்மை பயக்கும் பல நல்ல விஷயங்களை மருத்துவர்களோ மற்றவர்களோ சொல்வதைவிட, மதங்கள் மூலமாக - பக்தி மார்க்கத்தில் சொன்னால் நன்றாக எடுபடும் என்று நம் முன்னோர்கள் நினைத்தார்கள். அதன் விளைவுதான் நாம் உலகெங்கும் பார்க்கும் விரத முறைகள்.

ஈஸ்டர் என்றால் 40 நாட்கள் கடும்விரதம் எடுப்பது கிறிஸ்தவர்கள் வழக்கம். ரம்ஜான் என்றால் 40 நாட்கள் கடும்விரதம் அனுஷ்டிப்பது முகமதியர்களின் வழக்கம். இந்து மதம் இதையெல்லாம் தாண்டி பல்வேறு விரதங்களைப் புகுத்தியது. சபரி மலை செல்வோர், 40 நாட்கள் கடும்விரதம் இருப்பதையும் நாம் அறிவோம். இப்படியாக எல்லா மதத்தினரும் ஒரே மாதிரியாக ஒரு மண்டலம் (40 நாட்கள்) விரதம் அனுஷ்டிப்பது ஆச்சர்யமாக இல்லையா?!

இந்த மாதிரி விரத காலங்களில், சர்க்கரை நோயாளிகள் பலருடைய சர்க்கரை அளவு வெகுவாகக் குறைவதையும், ரத்தக் கொதிப்பு நோயாளிகள் பலருடைய ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் மருத்துவர் என்கிற வகையில் நான் கண்கூடாகப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னிடம் வரும் நோயாளிகள் பலரிடம், 'பேசாம வருஷத்துக்கு மூணு தடவை நீ சபரிமலை போகலாமே!’ என்பேன் அடிக்கடி.

திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்கு என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள விரத முறைகள்... மனித உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், அதன் மூலம் உள்ளத்தையும் உயிரையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் வகுத்த வழிமுறைகளே என்று புரிகிறதுதானே!

திருமூலர் சொல்லும் 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பதன் பொருளும் இதுதானே!

- நலம் வரும்...

அடுத்த கட்டுரைக்கு