Published:Updated:

ஆ...அயர்லாந்து !

ஜி.பிரபு, ம.மோகன்

##~##

சட்டங்களும், மதக்கோட்பாடுகளும்... சில சமயங்களில் மன்னிக்க முடியாத தவறிழைத்துவிடுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் இந்த துர்மரணம்!

கர்நாடகாவைச் சேர்ந்த சவீதா, பல் மருத்துவம் படித்தவர். அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் பொறியாளராகப் பணியாற்றும் பிரவீன் என்பவரைக் கரம்பிடித்து, அங்கே குடியேறினார். சமீபத்தில் கருதரித்த சவீதா, 17 வாரங்கள் ஆன நிலையில், கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட, 'கரு இயல்பான நிலையில் இல்லை' என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, 'கருவைக் கலைத்து விடுங்கள்' என்று டாக்டர்களிடம் பிரவீன் வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனால், 'இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு. மதச்சட்டப்படி கருவைக் கலைக்கக் கூடாது’ என்று மறுத்துள்ளனர், மருத்துவர்கள். இந்நிலையில் கருவிலிருந்த குழந்தை இறந்துபோக, தொப்புள் கொடி வழியாக சவீதாவின் ரத்தத்தில் நச்சு கலந்து, அக்டோபர் 28 அன்று பரிதாபமாக இறந்துபோனார்.

இது, அயர்லாந்தை மட்டுமல்ல... உலகையே அதிர வைத்துள்ளது. அயர்லாந்து மக்கள், வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்!

ஆ...அயர்லாந்து !

இதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசியபோது, ''நம் நாட்டில், கருக்கலைப்பு விஷயத்தில் 'மெடிக்கல் டெர்மினேஷன் ஆஃப் பிரக்னன்ஸி' (medical termination of pregnancy) என்கிற விதிமுறை உண்டு. கருவைச் சுமக்கும் நிலையில் தாய் இல்லை... தாய் - சேய் உயிருக்கு கருவால் ஆபத்து... பாலியல் பலாத்காரம்... இப்படி தவிர்க்க முடியாத காரணங்களால், உயிருடன் இருக்கும் கருவை கலைப்பது இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோலத்தான், உலகின் பல நாடுகளிலும் சட்டப்படியான கருக்கலைப்பு

ஆ...அயர்லாந்து !

நடக்கிறது.

சவீதா விஷயத்தில், அவருடைய உயிரைக் காக்க அந்த மருத்துவர்கள் தொழில் தர்மத்தோடு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், சமய சட்டத்தைக் காரணம் காட்டி செய்ய மறுத்தது துரதிர்ஷ்டவசமானது. தற்போது, அந்நாட்டு பெண்களே போராடக் கிளம்பியிருப்பது... வரவேற்கத்தக்கதே. இனியாவது இப்படியான சம்பவங்கள் நிகழாமல் இருக்க... சவீதா விதைக்கப்பட்டிருக்கிறார் என்று ஆறுதல் அடைவதைத் தவிர, வேறென்ன சொல்ல!'' என்றார் சோகத்துடன் டாக்டர் சாதனா.

உயிரைப் பறிப்பதற்குப் பெயர்தான் சட்டமா..?

அடுத்த கட்டுரைக்கு