Published:Updated:

'யூடியூப்' மாமி..!

சமையல் உலகில் ஒரு சாதனை பெண்மணி

 ##~##

ரு சின்ன கிச்சன், ஒரு லேப்டாப், ஒரு கேமரா. இதை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் உள்ள வெளிநாடுவாழ் தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் 'இணைய அம்மா’வாக இருந்து, தமிழ்நாட்டுச் சமையல் கற்றுத் தருகிறார், நம்மூர் கீதா மாமி! 'ஸ்ரீரங்கம் ராது’ என 'யூடியூப்'பில் (Youtube) தட்டினால் போதும்... கீதா மாமி சமையல் செய்ய, அவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் சுவாரசியமாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே அதைப் பதிவு செய்யும் வீடியோக்கள்... கொட்டுகின்றன. மாமிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இணையத்தில்! 

''இதுவரை  284 ரெசிபிகளை, 519 வீடியோக்களாக அப்லோட் செய்திருக்கோம். கிட்டத்தட்ட 20 லட்சம் வெளிநாடுவாழ் தமிழர்கள் அதைப் பார்த்திருக்காங்க. அதிலும் குறிப்பா, 'வத்தக்குழம்பு வைப்பது எப்படி?’ என்ற வீடியோவை மட்டும் 58,000 பேர் பார்த்திருக்காங்க!'' என்று உற்சாகமாக பேச்சை ஆரம்பித்தார் 58 வயதாகும் கீதா மாமி.

'யூடியூப்' மாமி..!

''நான் ஓய்வுபெற்ற ஆசிரியை. என் கணவர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துல மேனேஜரா இருந்து ஓய்வுபெற்ற வர். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். கனடாவில் இருக்கிற என் மகன், அந்த நாட்டுப் பெண்ணை திருமணம் செய்துக்கிட்டான். லண்டனில் இருக்கும் மகள், கிறிஸ்தவரை கல்யாணம் செய்துகிட்டா. நாங்க பிராமணக் குடும்பமா இருந்தாலும், குழந்தைகள் விருப்பத்தை மனசார ஆசீர்வதிச்சோம்.

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, என் மகளும், மருமகளும்தான் நான் யூடியூப்ல சமையல் வீடியோக்களை அப்லோட் செய்யக் காரணம். லண்டன்ல இருந்து, 'அம்மா அந்தக் குழம்பு எப்படி செய்றது, இந்தக் கூட்டு எப்படி செய்றது?’னு மகள் அடிக்கடி போன்ல கேட்டு சமைப்பா. கனடா நாட்டு

'யூடியூப்' மாமி..!

மருமகளுக்கு இந்தியன் டிஷ் செய்யத் தெரியாதுனு, எப்படி சமையல் செய்யணும்னு வீடியோ எடுத்து நெட்ல அனுப்பச் சொன்னான் மகன். எனக்கும் கணவருக்கும் கொஞ்சம் கணினி பயன்பாட்டுல அறிமுகம் உண்டுங்கறதால, நாலு வருஷத்துக்கு முன்ன வத்தக்குழம்பு வைக்கறத வீடியோ எடுத்து யூடியூப்பில் அப்லோட் செய்தோம். அதை உலகம் முழுக்க பார்ப்பாங்கங்கற விவரமெல்லாம் அப்போ தெரியாது.

ஒருநாள், அமெரிக்க வாழ் தமிழரான ஜோதிகாஸ்ரீங்கற பெண், 'வத்தக்குழம்பு நன்னா இருந்தது. ரொம்ப நன்றி மாமி. எனக்கு அம்மா இல்லை. நம்ம சமையல் சொல்லித் தர இங்க யாரும் இல்ல. இந்த மாதிரி தொடர்ந்து வீடியோ எடுத்து அனுப்புங்கோ!’னு மெயில் அனுப்பியிருந்தார். அதைப் படிச்சவொடன மனசுக்கு ரொம்ப சந்தோஷமாவும், நெகிழ்ச்சியாவும் இருந்தது. அதை என் மகன், மகள்கிட்ட பகிர்ந்தப்போதான்... தொடர்ந்து சமையல் வீடியோக்களை அப்லோட் செய்யும் ஐடியாவைக் கொடுத்தாங்க.

வெண்பொங்கல், பருப்பு உருண்டை குழம்பு, மைசூர் ரசம், கேரட் புலாவ், பீன்ஸ் சாதம், கடலை சாதம், கீரைக்கூட்டு, தயிர் சாதம், மிளகு ரசம், சீரக ரசம்னு பலவிதமான ரெசிபிகளை தொடர்ந்து யூடியூப்பில் அப்லோட் செய்தோம். நல்ல வரவேற்பு கிடைச்சுருக்கு.

வெளிநாடுகளில் நம்ம சமையலுக்கான மளிகை சாமான்கள் எங்கே கிடைக்கும் என்பதையும் நெட்ல தேடி, அதையும் யூடியூப்ல சேர்த்தே தந்துடறது பலரும் குறிப்பிட்டு பாராட்டும் விஷயம்!'' என்று பூரிக்கும் கீதா மாமி, இப்போது கொலு வைப்பது, வரலக்ஷ்மி விரதம், விநாயகர் சதுர்த்தி போன்ற பூஜைகளையும் அப்லோட் செய்யத் துவங்கியுள்ளார்.

''வீடியோ எடிட்டிங் எல்லாம் தெரியாது. எடுக்குற வீடியோவை அப்படியே அப்லோட் பண்ணிடுவோம். அதனால நறுக்கிய காய்கறிகள், பாத்திரங்கள்னு எல்லாத்தையும் ரெடியா எடுத்து வெச்சுட்டு, அஞ்சு முதல் பத்து நிமிஷத்துக்குள்ள கேமரா முன்னால சமையலை முடிச்சுடுவேன். ஆரம்பத்துல அடுப்பை மட்டுமே ஃபோகஸ் செய்துதான் கேமரா இருக்கும். அப்புறம் என் ஆத்துக்காரர்தான் சமைக்கும்போது விளையாட்டா எங்கிட்ட கேள்விகள் கேட்டு, என்னை பேச வெச்சுனு வீடியோவை சுவாரசிய மாக்கினார். மகன், மகளைப் பார்க்க வெளிநாடுகளுக்குப் போனப்போ 'யூடியூப் மாமி!’னு இதுவரை ஆறு பேர் எங்களை அடையாளம் கண்டு விசாரிச்சதை மறக்கவே முடியாது!'' என்று கீதா மாமி உற்சாகமாக சொன்னார்.

தொடர்ந்த ராதாகிருஷ்ணன், ''2010 மார்ச்-ல யூடியூப் டிரெண்ட்ல ஒருமுறை எங்க வீடியோ முதல் 10 இடத்தில 5-வது இடம் பிடிச்சது. பிறகு, ஒரு நிறுவனம் விளம்பரத்துக்கு தொடர்புகொண்டு பேசினாங்க. மாசம் 100 டாலர் தருவதா சொன்னாங்க. எங்க பசங்களோட படிப்புக்கு எங்களால பெரிய அளவுல செலவு செய்ய முடியல. ஸ்காலர்ஷிப்லதான் படிப்பை முடிச்சாங்க. அதனால பிள்ளைகள் செட்டில் ஆனதுக்கு அப்புறம் ஒவ்வொரு வருஷமும் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவனோட படிப்புச் செலவுகளை நாங்க ஏத்துட்டு வந்தோம். இப்போ யூடியூப் மூலமா நிதி கிடைக்கறதால இன்னும் பல குழந்தைகளோட படிப்புக்கு உதவிகள் செய்றோம். அந்தப் பசங்க படிப்பை முடிச்சு நல்ல வேலையில் சேர்றதைப் பார்க்கும்போது ரொம்ப நிறைவா இருக்கு!'' என்றார் ராதாகிருஷ்ணன்.

''சரி, சொல்லுங்க மாமி உங்க கைப்பக்குவ ரகசியத்தை...'' என்றால், தாராளமான சிரிப்புடன் சொற்கள் கோக்கிறார் மாமி.

''எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தது சிம்பிள் சமையல்தான். ஆனா, என் மாமியார்தான் பல வகையான, புது வகையான டிஷ்களை சொல்லித் தந்தாங்க. அதனால இந்த யூடியூப் புகழ் எல்லாம் என் மாமியார் எனக்குத் தந்த பரிசுதான்! இந்த இணைய வெற்றிப் பயணத்தில் ஒவ்வொரு நொடியும் என் உடன் இருந்து உயர்த்திவிட்டது இவர்தான்!'' என்றார் கணவரை அன்புடன் பார்த்தபடி!

பி.விவேக் ஆனந்த், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

அவள் விகடன் வாசகிகளுக்காக 'யூடியூப்' மாமி தந்த ஸ்பெஷல் ரெசிபி...

கோவா பூரி (இனிப்பு)

ஸ்டெப் 1

தேவையான பொருட்கள்: மைதா - கால் கப், கோதுமை மாவு - கால் கப், பேக்கிங் சோடா -  கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன்.

இவை அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஸ்டெப் 2

தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் - கால் கப், சர்க்கரை இல்லாத கோவா - கால் கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி துண்டுகள் - கால் கப்.

இந்த நான்கையும் ஒரு கடாயில் போட்டு, அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து கிளறி, பூரணமாக செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 3

தேவையான பொருட்கள்: சர்க்கரை - 2 கப், தண்ணீர்  - அரை கப். தனி பாத்திரத்தில் தண்ணீரை யும், சர்க்கரையையும் சேர்த்து கம்பி பதத்தில் சர்க்கரைப் பாகு செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 4

முதலில் செய்த மாவை சின்ன சின்ன பூரிகளாக இட்டு, சிறிதளவு பூரணத்தை அதற்குள் வைத்து மூடி, கொழுக்கட்டைகள் போல செய்து வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, செய்துவைத்தவற்றை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இவற்றை 5 நிமிடங்கள் சர்க்கரைப் பாகில் ஊற வைத்து எடுத்து, ஒரு தட்டில் தனித்தனியாக இருக்கும்படி வைக்கவும் (ஒன்றன் மேல் ஒன்று வைத்தால் ஒட்டிக் கொள்ளும்).  

'யூடியூப்' மாமி..!
'யூடியூப்' மாமி..!
அடுத்த கட்டுரைக்கு