Published:Updated:

கொழுகொழு தோற்றம்... ஆரோக்கியத்தின் அளவுகோல் அல்ல !

ம.பிரியதர்ஷினி

சென்ற இதழ் தொடர்ச்சி...

##~##

குழந்தைகளுக்கு பால் கொடுப்பது மற்றும் உணவு ஊட்டுவது தொடர்பாக கடந்த இதழில் பேசிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர் டாக்டர் பார்த்தசாரதி, வேலைக்குச் செல்லும் பெண்கள்... தங்கள் பாலை பாத்திரத்தில் சேமித்து வைத்து, வீட்டில் இருப்பவர்கள் மூலமாக குழந்தைகளுக்கு கொடுப்பது மற்றும் 'கொழுகொழு' குழந்தைகள் பற்றி இங்கே தொடர்கிறார்...

''வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகம் கிளம்பும்போதும், வீடு திரும்பியதும் கட்டாயம் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும். பகல் வேளைகளில் அவர்களால் பால் புகட்ட முடியாது என்பது காலத்தின் கோலம். தாயின் மூலமாகத்தான் பால் குடிக்க வேண்டும் என்றாலும், அதற்கு வாய்ப்பில்லை எனும் இதுபோன்ற சூழலில்... பாலை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து மூடிவைத்து, கேர் டேக்கர் மூலமாக குழந்தைக்குப் புகட்டச் சொல்வதில் தவறில்லை. பாலே குடிக்காமல் இருப்பதற்கு, இது எவ்வளவோ பரவாயில்லை.

தாய்ப்பால், நான்கில் இருந்து ஆறு  மணி நேரம் வரை கெடாது. ஃப்ரிட்ஜில்கூட வைக்கத் தேவையில்லை. ஆனால், இப்படி எடுத்து வைத்த பாலை பாட்டிலில் ஊற்றிக் கொடுக்காமல், சங்கில் கொடுப்பதே சிறந்தது. தாயின் மார்புக் காம்பில் பால் குடிப்பதுபோல் கடினமாக இல்லாமல், பாட்டில் நிப்பிளில் பால் சிரமமின்றி வரும். பாட்டிலில் குடித்து சொகுசு கண்டுவிட்டால், தாயின் மார்பில் சப்பிக் குடிக்க குழந்தை சோம்பேறித்தனப்படும் என்பதாலேயே இந்த அறிவுரை.

கொழுகொழு தோற்றம்... ஆரோக்கியத்தின் அளவுகோல் அல்ல !

தாய்ப்பால் கொடுக்கும்போது சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு மோஷன் போக மாட்டார்கள். அதன் பிறகு ஒரேயடியாகப் போவார்கள். அதன் பிறகு கொளகொள என்று மோஷன் வந்தால்... கவலை வேண்டாம். பால் குடித்து கொண்டிருக்கும்போதே மோஷன் போய் விட்டாலும் கவலையில்லை. இதெல்லாம் நார்மலே.

ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், தண்ணீர்கூட வேண்டியதில்லை. அதனால்தான் இந்த ஆறு மாதங்களை 'எக்ஸ்க்ளூஸிவ் பிரஸ்ட் ஃபீடிங்’ என்போம். அதேபோல ஊட்டச்சத்துக்காக எந்தவித மருந்தும் ஆறு மாதங்கள் வரை தரத் தேவையில்லை. அதில் உள்ள வைட்டமின்கள் எல்லாம் தாய்ப்பாலிலேயே இருக்கிறது. முதல் ஆறு மாதங்கள் தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகள் வயிற்றுப்போக்கு, சளி பிடிப்பது, நிமோனியா உள்ளிட்ட நோய்களுக்கு எளிதில் இலக்காவதில்லை என்று உலகளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிறோம்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தை தாயின் மார்புக் காம்புகளை கடிக்க ஆரம்பிக்கும். குழந்தைக்கு ஜீரண சக்தி வந்துவிட்டது, கடித்து சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டது என்பதன் அறிவிப்புதான் இது. ஆறு மாதத்தில் இருந்து திட உணவுகளை ஒவ்வொன்றாகத் தர ஆரம்பிக்க வேண்டும் (கூடவே ஒருவருடம் வரை தாய்ப்பாலும் தந்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாக வளரும்). இட்லி, இடியாப்பம், ஆப்பிள், கேரட், முட்டையின் மஞ்சள் கரு, சத்துமாவு கஞ்சி என்று தினம் ஒரு உணவை நன்கு மசித்து தர வேண்டும்.

பாரம்பரியமாக நாம் பயன்படுத்திவரும் சத்து மாவுக் கஞ்சியானது, விளம்பரங்களில் வரும் ஊட்டச்சத்து பானங்களை எல்லாம்விட பல மடங்கு ஆரோக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 'விளம்பரங்களில் காட்டப்படும் குழந்தை உணவுகள் மற்றும் சத்து பானங்களை கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக புஷ்டியாக வளரும்' என்பது வீண் நம்பிக்கையே. நம் பாரம்பரிய உணவான சத்துமாவிலேயே ஏராளமான சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. சத்துமாவு பொடிகள் கடைகளிலும் கிடைக்கின்றன. நாமேகூட தயாரிக்கலாம். இவற்றைக் கொடுத்தாலே குழந்தைகள் திடகாத்திர மாக வளர்வார்கள்.

கொழுகொழு தோற்றம்... ஆரோக்கியத்தின் அளவுகோல் அல்ல !

திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் இட்லி, ஆப்பிள் என்று தினமும் ஒரே உணவாகக் கொடுக்க வேண்டாம். மாற்றி மாற்றி கொடுங்கள். குழந்தைக்கு அந்த உணவு பிடிக்கிறதா அல்லது ஒத்துக்கொள்கிறதா என்பதையெல்லாம் கவனிக்கவே தினம் ஒரு உணவு என்று கொடுக்க சொல்கிறேன். பொதுவாக குழந்தைக்கு என்று தனியாக நீங்கள் உணவு தயாரிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் தயாரிக்கும் உணவுகளையே நன்கு மசித்து கொடுக்கலாம்.

பல தாய்மார்கள் தங்கள் குழந்தை சரியாகச் சாப்பிடுவதில்லை என்று குறை சொல்வார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, வயிற்றில் பூச்சி ஏதேனும் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் அதற்கேற்ற மருந்து கொடுக்க வேண்டும். மற்றொன்று, குழந்தைக்கு நீங்கள் கொடுக்கிற உணவில் விருப்பம் இல்லாது இருக்கலாம். கூடவே, சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு மல்லுக்கு நின்று சாப்பாட்டைத் திணிக்காமல், சற்று நேரம் அந்தக் குழந்தையை அமைதியாகப் பார்த்துவிட்டு, குழந்தைக்காக எடுத்து வந்த உணவை நீங்கள் சாப்பிட ஆரம்பியுங்கள். சிறிது நேரத்தில் தன்னால் பசி எடுத்து உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். மேலும், 'இனி அழுதால் நம் சாப்பாட்டை அம்மா சாப்பிட்டு விடுவார்' என்றும் மனதில் குறித்துக் கொள்வார்கள். குழந்தை அதிகம் சாப்பிட வேண்டும் என்று நினைக்காமல், சத்தாகச் சாப்பிடக் கொடுங்கள்'' என்ற டாக்டர் நிறைவாக சொன்னது -

''ஆரோக்கியம் என்பது... கொழுகொழு தோற்றத்தில் இல்லை என்பதை யும் புரிந்து கொள்ளுங்கள்!''

அடுத்த கட்டுரைக்கு