Published:Updated:

வாழ்க்கைக்கு வழி...உழைப்புக்கு விருது...

க.அபிநயா,படங்கள்: எஸ்.சிவபாலன்

வாழ்க்கைக்கு வழி...உழைப்புக்கு விருது...

க.அபிநயா,படங்கள்: எஸ்.சிவபாலன்

Published:Updated:

பிஸினஸ் வெற்றிக் கதைகள்

உன்னால் முடியும் பெண்ணே!

##~##

''அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். ஆனா, காளான் வளர்ப்புத் தொழிலுக்குத் தேவையான தகவல்களை எல்லாம் தேடித்தேடி தெரிஞ்சு வெச்சுருக்கேன். காளான்ல புரதச்சத்து, நார்ச்சத்து அதிகமா இருக்கு. சிப்பிக் காளான்ல புரதச்சத்து 23.6 சதவிகிதமும், நார்ச்சத்து 12.9 சதவிகிதமும் இருக்கு. பால் காளான்ல புரதச்சத்து 32 சதவிகிதமும், நார்ச்சத்து 41 சதவிகிதமும் இருக்கு!''

- தகவல்களாகக் கொட்டுகிறார் பிரகதாம்பாள் !

'ஜாம்ஷெட்ஜி டாடா நேஷனல் அகாடமி'யுடன் இணைந்து 'வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ். சுவாமிநாதன் ஃபவுண்டேஷன் சார்பாக, கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் கிராமப்புற சாதனையாளர்கள் விருதை, இந்த வருடம் பெற்றவர்களில் புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமத்தைச் சேர்ந்த இந்த பிரகதாம்பாளும் ஒருவர்.

'முல்லை அரும்பு மகளிர் சுய உதவிக்குழு’ தலைவியாக இருக்கும் பிரகதாம்பாள், இதுவரை நூறு பெண்களுக்கு காளான் வளர்ப்புப் பயிற்சி கொடுத்திருக்கிறார். இவர் உற்பத்தி செய்யும் சிப்பிக் காளான் மற்றும் பால் காளான், பல்வேறு மாவட்ட கண்காட்சியில் இடம் பெற்று பரிசுகள் பெற்றுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் கையில் விருதுடனும், முகத்தில் புன்னகையுடனும் பிரகதாம்பாள் பேசியது, அழகு!
 

வாழ்க்கைக்கு வழி...உழைப்புக்கு விருது...

''ரெண்டு அக்கா, ரெண்டு தங்கச்சி, ஒரு அண்ணன்னு பெரிய குடும்பம் எங்களோடது. நெல்லு சோறு சாப்பிடவே வழியில்லாத அளவுக்கு வறுமை. அதனால அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சேன். தட்டுத்தடுமாறி எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. வீட்டுக்காரர் ராஜேந்திரன் டிப்ளமா படிச்சிருக்கார். அவருக்கு ஆடுதுறை வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல லேப் டெக்னீஷியனா வேலை கிடைச்சுது. 750 ரூபாய்தான் சம்பளம். குடும்பத்த ஓட்டுறதுக்கு அது போதாதுனு... அவரோட சேர்ந்து நானும் குடும்பத்துக்காக உழைக்கணும்னு நினைச்சேன். தையல் வேலை, கூடை பின்னுறது, கைவினைப் பொருட்கள் செய்றது மூலமா கிடைச்ச பணம், வீட்டுச் செலவுக்கு உதவியா இருந்துச்சு. அது, சம்பாதிக்கணும்கிற ஆர்வத்தை தூண்டவும் செய்துச்சு.

நாலு வருஷத்துக்கு அப்புறம் 'வம்பன், வேளாண் ஆராய்ச்சி நிலைய’த்துக்கு அவரை டிரான்ஸ்ஃபர் பண்ணினதால, வம்பன் கிராமத்துக்கு வந்தோம். இதுக்கு இடையில ஒரு பொண்ணு, ஒரு பையன் பொறந்தாங்க. பிள்ளைங்களோட எதிர்காலம் எங்களை அதிக வருமானத்தைப் பத்தி யோசிக்க வெச்சுது.

வாழ்க்கைக்கு வழி...உழைப்புக்கு விருது...

16 பேரோட, 10 ஆயிரம் ரூபாய் சேமிப்போட 'முல்லை அரும்பு மகளிர் சுயஉதவிக் குழு’ ஆரம்பிச்சேன். வம்பன் ஆராய்ச்சி நிலையத்துல அஞ்சு நாள் காளான் வளர்ப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அடுத்ததா 10-வது வரை படிச்சவங்களுக்கு 10 நாள் பயிற்சி தர்றதா சொன்னாங்க. 'நான் 5-வதுதான் படிச்சிருக்கேன். ஆனா, இதைக் கத்துக்கிற ஆர்வமும், இதையே தொழிலா எடுத்து செய்ற தேவையும் எனக்கு இருக்கு. என்னை அனுமதிங்க’னு கேட்டேன். பரிவோட பயிற்சியில சேர்த்துக்கிட்டாங்க. சிப்பிக் காளான், பால் காளான் வளர்க்க 50 பேருக்கு பயிற்சி தந்தாங்க. அதை முடிச்சவங்கள்ல, திறமையான 25 பேரைத் தேர்ந்தெடுத்து, இல வசமா  காளான் வளர்க்கத் தேவையான பொருட்கள் கொடுத்தாங்க. அதை வாங்கின வங்கள்ல நானும் ஒருத்தி. வங்கிக் கடன் மூலமா காளான் வளர்ப்பு தொழிலைத் தொடங்கவும் வழிகாட்டினாங்க.

அவங்க தந்த ஆதரவால எங்க குழு உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து காளான் வளர்ப்புல ஈடுபட ஆரம்பிச்சோம். அந்தச் சமயம் எங்க குழுவுல இருந்தவங்க கடன் தொல்லையால ரொம்ப சிரமப்பட்டாங்க. வட்டி கட்டச் சொல்லி வீட்டுக்கு வந்து ஆள் மிரட்டிட்டுப் போற நிலைமை. ஆனா, காளான் வளர்ப்புல கிடைச்ச லாபம், எல்லாரையும் கடன் பிரச்னையில் இருந்து காப்பாத்திடுச்சு. இடையில 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் வந்தப்போ, குழு உறுப்பினர்கள் விலகிடாம ஒற்றுமையா இருந்து, உழைச்சு, அதிலிருந்து மீண்டோம்'' என்று  சொன்ன பிரகதாம்பாள் இதோடு நின்றுவிடவில்லை.

''காளான் உற்பத்தியோட நின்னுட்டா... வருமானமும் ஒரு கட்டத்துல நிலையா நின்னுடும். அதனால அடுத்தக் கட்டத்துக்கு போகணும்னு யோசிச்சோம். பணியாரம், பஜ்ஜி, பக்கோடா, சூப், ஊறுகாய்னு தயாரிச்சு விற்க ஆரம்பிச்சோம். பேங்க், ஸ்கூல், வீடுகள், அலுவலகங்கள்னு நேரடியாவே போய் ஃப்ரெஷ்ஷா, சூடா கொடுத்ததால, மக்கள் விரும்பி வாங்கினாங்க. முடிஞ்சபோது... கடைகளுக்கும் டெலிவரி கொடுப்போம்.

வாழ்க்கைக்கு வழி...உழைப்புக்கு விருது...

சிப்பிக் காளான், பால் காளான் இதைஎல்லாம் வளர்க்கிறோம். சிப்பிக் காளான் குளிர்ந்த தட்பவெட்ப நிலையில் வளரக்கூடியது. பத்து முதல் முப்பது டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில செழிப்பா வளரும். பால் காளான், முப்பது முதல் ஐம்பது டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்ப நிலையில வளரக்கூடியது.

இப்போ, இந்தத் தொழில்ல செலவெல்லாம் போக மாசம் 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க பதினாலு பேர் இருக்கோம். தினமும் சராசரியா மூணு இல்லனா, நாலு மணி நேரம்தான் வேலை பார்ப்போம். ஒவ்வொருத்தரும் எந்த அளவுக்கு வேலையில பங்களிப்பு கொடுக்கிறோமோ... அதைக் கணக்கிட்டு, லாபத்தைப் பிரிச்சுக்கிறோம். உழைக்கற நேரத்தை இன்னும் அதிகப்படுத்தினா... லாபத்தைக் கூட்டலாம். இந்தத் தொழில்ல இதுவரை எங்களுக்கு வழிகாட்டிட்டு வர்ற முனுசாமி சாருக்கும், 'ட்ரீஸ்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சாருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம்'' என்று நெகிழ்ந்தவர்,

''இப்போ என் பொண்ணு இன்ஜீனியரிங் படிக்கிறா. பையன் பனிரெண்டாவது படிக்கறான். வீட்டுப் பெண்களுக்கு வருமானத்தைப் பெருக்கிற உந்துதல் இருந்துச்சுன்னா, அவங்க பிள்ளைங்களுக்கு நல்ல கல்வி யும் எதிர்காலமும் கிடைக்கச் செய்ய முடியும்கிறதுக்கு, உதாரண அம்மாவா நான் இருந்தா, அதுதான் என்னோட மிகப்பெரிய சந்தோஷம்!'' என்று கை கூப்பி முடித்தார் பிரகதாம்பாள்!