Published:Updated:

பறிபோன சொத்துக்கள்...பலம் தந்த 'ஃப்ரேமிங் !

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: கே.குணசீலன்

பறிபோன சொத்துக்கள்...பலம் தந்த 'ஃப்ரேமிங் !

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
##~##

''என் தோழி மூலமாதான் 'அவள் விகடன்’ எனக்கு அறிமுகமாச்சு. ஒரு பொழுதுபோக்கு பத்திரிகையாதான் அதை நான் படிச்சுட்டு இருந்தேன். ஆனா, எல்லாத்தையும் இழந்து எங்க வீட்டுல மனுஷங்க மட்டுமே மிஞ்சி இருந்த சூழல்ல 'இதுவும் கடந்து போகும்’னு எனக்கு ஆறுதலும், ஆற்றலும் தந்தப்போதான் 'அவள் விகடன்’, எனக்கு வழிகாட்டியா, தெம்பூட்டியா ஆனாள்!''

- உள்ளத்தில் இருந்து வார்த்தைகள் வருகின்றன லதாவிடம் இருந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர், கரந்தட்டாங்குடியைச் சேர்ந்த லதா... போட்டோ ஃப்ரேமிங் தொழிலில் இன்று மாதம் இருபதாயிரத்துக்கும் மேல் லாபம் சம்பாதிக்கும் வெற்றிப் பெண்மணி. எதிர்பாராமல் ஏற்பட்ட சோகத்தால் எல்லாம் இழந்து நின்றபோது... அவருக்கு ஒரு தூண்டுகோலாக 'அவள்’ இருந்ததை நன்றியுடன் நினைவுகூர்கிறார் லதா.

''எனக்கு சொந்த ஊரு திருத்துறைப்பூண்டி. அப்பா பஸ் டிரைவர். அம்மா இல்லத்தரசி. ரெண்டு தம்பிங்க. ப்ளஸ் டூ வரைக்கும் படிக்க வெச்சாங்க. கொஞ்ச நாள்ல அப்பா இறந்துபோக, ரெண்டு தம்பிங்களும் குடும்பத்தைக் கவனிச்சாங்க. டிகிரி முடிச்ச மாப்பிள்ளையை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. மாமியார், ரெண்டு நாத்தனார், ரெண்டு கொழுந்தனார்னு அழகான குருவிக் கூட்டுல   இடம்பிடிச்ச சந்தோஷம், என் வாழ்க்கையைப் பற்றிய பயத்தைப் போக்குச்சு.

பறிபோன சொத்துக்கள்...பலம் தந்த 'ஃப்ரேமிங் !

ஜனனி, வினோதினினு ரெண்டு பெண் குழந்தைகளோட... சந்தோஷமா வாழ்க்கை போயிட்டிருந்துச்சு. ஃப்ரெண்ட் மூலமா 'அவள்’ எனக்கு அறிமுகமாச்சு. அது என் உலகத்தை இன்னும் விசாலமாக்கிச்சு. சீரியஸ் கட்டுரைகளைவிட... சமையல், சேனல், கதைனு ஜாலி பக்கங்களைதான் விரும்பிப் படிப்பேன்'' என்றவரின் வாழ்க்கையை விதி கலைத்துப் போட்டது அதற்குப் பிறகுதான்.

''அப்போ... தஞ்சாவூர்ல நடந்த தொடர் கொள்ளையில எங்க வீடும் தப்பவில்லை. நகை, பணம்னு அதுவரை ஓடி உழைச்சு சம்பாதிச்சு வெச்சுருந்த அத்தனையையும் பறிகொடுத்தோம். உடம்புலயும் மனசுலயும் இருந்த தெம்பும் சேர்த்தே கொள்ளை போயிடுச்சு. இனி எழ முடியும்னு நம்பிக்கை இல்லை. 'ஒரு காலத்துல நல்லா வாழ்ந்தவங்கங்கற பேர்தான் மிஞ்சப் போகுது'னு பயந்தோம். அப்போதான் 'அவள்’ கைகொடுத்தா. அதுல வந்த 'பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்துக்கு’ கட்டுரை கண்ணில் பட்டது. பூஜ்ஜியத்தில் இருந்த நான், மனசு ஒன்றி அந்தக் கட்டுரைகளை வாசிச்சேன். அதுவரை பொழுதுபோக்கு கட்டுரைகளையே ரசிச்ச எனக்கு, முதல் முறையா தன்னம்பிக்கை கட்டுரைகளின் தேவையும், அது தர்ற தெம்பும் புரிஞ்சுது.

எதுவுமே இல்லைங்கற சூழ்நிலையிலயும்... உழைப்பை மட்டுமே முதலீடாக்கி முன்னுக்கு வந்த அந்த பெண்கள், 'லதா... நீயும் நிச்சயம் மறுபடியும் நல்ல நிலைமைக்கு வருவே!’னு என் தோள் மேல கைபோட்டு சொல்ற மாதிரி இருந்துச்சு'' என்பவர், தன் கணவருக்குப் பரிச்சயமான போட்டோ ஃப்ரேமிங் தொழிலை தானும் கற்று வெற்றிப்படி ஏறியிருக்கிறார்.

''முற்றும் இழந்த எங்ககிட்ட அப்போ இருந்தது... ஒரே ஒரு சுத்தியல், அரம், ரம்பம். அதோட 'அவள்’ தந்த அசைக்க முடியாத நம்பிக்கையும். நானும் என் கணவரும் களத்தில் இறங்கினோம். முதல்ல தஞ்சாவூர் மாரியம்மன் கோவில்ல எங்களுக்குப் பழக்கமான பாட்டிகிட்ட 5,000 ரூபாய்க்கு மாரியம்மன் படங்களை செய்து கொடுத்தோம். பாட்டியோட உதவியாலயும், மாரியம்மனோட கருணையாலயும் நல்ல வரவேற்பு கிடைச்சுது.

பறிபோன சொத்துக்கள்...பலம் தந்த 'ஃப்ரேமிங் !

தொடர்ந்து சாமி படங்களை போட ஆரம்பிச்சோம். நல்ல வருமானம் கிடைச்சுது. எங்கயாவது கடை வெச்சு பிஸினஸை டெவலப் பண்ணணும்னு வழி தேடினேன். அப்பவும் 'அவள்’தான் துணை. சுயஉதவிக் குழுக்களோட வெற்றி, அவங்களுக்கு கிடைக்கிற வங்கி லோன் எல்லாத்தையும் படிச்சப்போ, என் வழியும் அதுதான்னு முடிவு பண்ணினேன். 'தமிழ் அமுது மகளிர் சுய உதவிக் குழு’வுல சேர்ந்தேன். அதன் மூலமா தஞ்சாவூர் மலர்கள் வணிக வளாகத்தில், குறைந்த வாடகையில கடையும், பேங்க்ல ஒரு லட்சம் ரூபாய் லோனும் கிடைச்சுது.

அதிகமா சாமி படங்கள் பண்ண ஆரம்பிச்சோம். ஒரு படத்துக்கு 40 சதவிகிதம் வரை லாபம் கிடைச்சுது. அப்புறம் ஒவ்வொரு கோயிலுக்கா போயி ஆர்டர் எடுத்தோம். அந்த முயற்சியில்தான் திருக்கருகாவூர், பட்டீஸ்வரம், திருபுவனம், திட்டை, வலங்கைமான்னு பல ஊருல இருக்கற பிரபல கோயில்களோட கடைகள்ல எங்க தயாரிப்பு படங்கள் இன்னிக்கு இடம்பிடிச்சுருக்கு.

திருவையாறு, தியாகராஜ ஆராதனையின்போது, மகளிர் சுயஉதவிக் குழு சார்பா எங்களோட படங்களை விற்பனைக்காக டிஸ்ப்ளே செய்திருந்தோம். ஆராதனைக்கு வந்திருந்த பாடகி சுதா ரகுநாதன், எங்களோட குட்டி குட்டி சாமி படங்களை எல்லாம் பார்த்துட்டு, மேடையில் கூப்பிட்டு பாராட்டினது, மறக்க முடியாதது'' என்றவர்,

''பொதுவா 'அவள் விகடன்’ல வர்ற வெற்றிப் பெண்கள் எல்லாருமே... அவங்க கத்துக்கிட்டதை மற்ற பெண்களுக்கும் பயிற்சி கொடுப்பதா சொல்லியிருப்பாங்க. அதைப் படிச்சப்போ, எங்களுக்குத் தெரிந்ததை நாங்களும் நாலு பேருக்கு கற்றுத்தரலாம்னு தோணுச்சு. கிராமம் கிராமமா சுயஉதவிக் குழுப் பெண்களுக்கு நடத்துற பயிற்சி முகாம்ல ஆர்வத்தோட போய் பயிற்சி கொடுத்தோம். 12 பேருக்கு லோன் வாங்கவும் வழிகாட்டியிருக்கோம். சுய தொழிலுக்கான இலவச ஆலோசனையும் உதவியும் தர தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கறதுக்கான முயற்சியும் கைவசம் இருக்கு!'' என்றவர்,

''அடுத்ததா, வெளிநாடுகளுக்கு எங்களோட படங்களை எக்ஸ்போர்ட் பண்ணணும். வழிகாட்டத்தான் 'அவள் ஹெல்ப் லைன்’ இருக்கே!''

- அட்டகாச சிரிப்புடனும், 'அவள் விகடன்’ மீதான அன்புடனும் முடித்தார் லதா!