Published:Updated:

உங்கள் தட்டில் உணவா விஷமா ? - 5

ஆரோக்கியம் பேசும் அலர்ட் தொடர்டாக்டர் பி.சௌந்தரபாண்டியன் படங்கள்:

உங்கள் தட்டில் உணவா விஷமா ? - 5

ஆரோக்கியம் பேசும் அலர்ட் தொடர்டாக்டர் பி.சௌந்தரபாண்டியன் படங்கள்:

Published:Updated:
##~##

நம்முடைய உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆராய நினைக்கும் நாம், முதலாவதாக தொட்டுப் பார்க்க வேண்டிய பெரும்பொருள்... அரிசியே!

ஆம்... உலகில் 60% மக்களின் அன்றாட உணவு அரிசிதான். உலகில் பயிரிடப்படும் தானியங்களில், மக்காச்சோளத்துக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயிரிடப்படுவது நெல்தான். மக்காச்சோளத்தின் பெரும்பகுதி விளைச்சல், மனிதர்களைவிட, கால்நடைகளுக்குத்தான் தீவனமாகிறது. ஆகவே, உலகில் மனிதர்களுக்கான தலையாய விளைபொருள்... நெல்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதிவந்தார்கள். சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை.

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... இந்தியாதான்- அதுவும் நம் தமிழகம்தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்?!

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது. இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும், அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும்     அழைக்கப்படுகிறது. இப்போது பாருங்கள்... அரிசி -     ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்! ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?

உங்கள் தட்டில் உணவா விஷமா ? - 5

இது வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் இல்லை. சங்க காலங்களுக்கு  முந்தைய காலத்தில், முன்தோன்றிய மூத்த இலக்கியமான தொல்காப்பியத்தில், நெல்லைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தின் காலம் சுமார் கி.மு 500 முதல் 1,400 ஆண்டுகள் வரை என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அப்படியானால், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நெல்லின் ஆதிக்கம் இருந்தது என்பது விளங்கும்.

தொல்காப்பியர் ஒரு பெரிய தமிழ்ப் புலவர் என்று மட்டுமே நாம் அறிவோம். ஆனால், இன்றைய விஞ்ஞான முறை விவசாயத்துக்கு ஈடாக மரபியல் (genetics) பற்றியெல்லாம் அப்போதே பேசிய பெரும் 'இயற்கை விஞ்ஞானி' அவர் என்பதை, மருதமலை முருகன் என்ற ஆராய்ச்சியாளரின் ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரித்து, அவற்றுக்கான இலக்கணத்தையும் பிறவற்றையும் விரிவாகக் கூறும் தமிழ் இலக்கியப் பாங்கு உலகில் வேறு எங்கும் காணமுடியாத அதிசயம். தொல்காப்பியம் தவிர, சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து - இன்னும் பல சங்க இலக்கியங்களிலும் அரிசியைப் பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.

உங்கள் தட்டில் உணவா விஷமா ? - 5

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் காணப் படும் கல்வெட்டுகளில், 'துவாபர யுகத்தில்... இந்திரனிடமிருந்து பாண்டிய மன்னன் அரிசியைப் பெற்றான்' என்ற செய்தி உள்ளது. கலியுகத்துக்கு முந்தையது துவாபரயுகம். இது, சுமார் 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என்பார்கள். அப்படியானால், தமிழர்களின் அரிசிக்கு என்னதான் வயது?

இவற்றையெல்லாம்விட, சமீபத்தில் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஆதிச்சநல்லூரிலும், பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற கிராமத்திலும் நடத்திய அகழ்வாராய்ச்சியில், பேராசிரியர் ராஜன் கண்டுபிடித்த உண்மைகள் பிரமிப்பானவை. அங்கு கிடைத்த முதுமக்கள் தாழி ஒன்றின் உள்ளே, காற்றுப்புகாத மண்பாண்டம் ஒன்றில் இரண்டு கிலோ வைரவ சம்பா நெல் புத்தம் புதிதாக இருந்தது. அதை அமெரிக்காவில்  உள்ள ஓர் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பிய தில், அந்த நெல் கி.மு.480-ம் வருடத்தைச் சேர்ந்தது என்று முடிவு தெரிவிக்கப்பட்டது. 2,500 வருடங்கள் பூச்சி மருந்துகளின்றி கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பண்டைய தமிழனின் தொழில்நுட்பம் எத்தனை வியப் பானது?!

ஆதிச்சநல்லூர் என்ற பெயரையே சிறிது ஆராய்வோம். அதன் உண்மையான பெயர் ஆதிசெந்நெல்லூர் ஆதி + செந்நெல் + ஊர். செந்நெல் விளையும் பூமி என்றுதானே பொருள்? திருநெல்வேலி மட்டும் என்னவாம்? நெல் பயிரால் சூழப்பட்ட ஊர் என்றுதானே பொருள்? இந்த ஊரின் முக்கியக் கடவுள் நெல்லையப்பர் அல்லவா?!

பண்டைய தமிழர்களின் கலாசாரங்களும் விழாக்களும் அரிசியை மையப்படுத்தியே அமைந்தன. சிலப்பதிகாரம் கூறும் இந்திர விழாவும், தை மாத மகர சங்கராந்தியன்று இல்லந்தோறும் படைக்கப்படும் பொங்கலும் நெல் விளைச்சலைக் கொண்டாடும் பண்டிகைதான். இன்றைய திருமண விழாக்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு 'அட்சதை’யாகத் தெளிப்பது, அரிசியைத்தானே?!

பல்வேறு வகையான அரிசிகளைப் பற்றிய குறிப்புகள் நம் இலக்கியங்களில் நிறைய உள்ளன. மூங்கில் அரிசி முதல் யானை நின்றால்கூட மறைக்கும் அளவு உயர வளரும் மலை நெல்/யானை நெல் வரை பல பாடல்கள். கடைசியாக, உலகெங்கும் பேசப்படும் மூன்று வகை அரிசிகள் - கறுப்பு, சிவப்பு, வெள்ளை ரகங்கள் தமிழகமெங்கும் விளைந்தன.

1528-ம் வருடத்திய 'பழனி செப்பு பட்டயத்தில்’ சுமார் 12,000 வகை நெல் பயிர்கள் உண்டென்றும், அவற்றில் சுமார் 100 வகை பயிர்கள் முக்கியமானவை என்றும் குறிப்புகள் உள்ளன.

அந்தப் பயிர்கள் எல்லாம் இப்போது எங்கே? நிச்சயமாக அவற்றைக் கடல் எதுவும் கொள்ளவில்லை. 12,000 வகைகள் 100 ஆகி, அந்த நூறில் கறுப்பு, சிவப்பு, வெள்ளை என்று மூன்று ஆகி, கடைசியில் வெள்ளை - அதிலும் வெள்ளையிலும் வெள்ளை என்ற இன்றைய ஒற்றை இலக்கில் வந்து நிற்பதன் மர்மம் என்ன?!

- நலம் வரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism