ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'மாமனா மச்சானா, மானங்கெத்தவனே..!'
##~## |
என் தோழியின் மூத்த பையன், இரண்டாம் வகுப்புப் படிக்கிறான். பள்ளியில் மாறுவேடப் போட்டிக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்களை தினமும் வீட்டில் மனனம் செய்துகொண்டிருந்தான். சுமார் மூன்று வயதான அவன் தம்பி, அண்ணன் பேசிய வசனங்களையெல்லாம் கூர்மையாக கவனித்து, தன் பங்குக்கு தானும் ஒன்றிரண்டு வரிகள் மனப்பாடம் செய்திருந்தான்.
அன்று தோழியுடைய கணவரின் அலுவலக நண்பர் வீட்டுக்கு வந்தபோது... ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து, ''டேய் குட்டி... நல்லா இருக்கியா..?'' என்று நலம் விசாரித்திருக்கிறார். அதுவரை, அண்ணனின் வசனங்களை அசைபோட்டுக் கொண்டிருந்த குழந்தை, ''டேய்... நீ மாமனா மச்சானா, மானங்கெத்தவனே... போதா வெளிய...'' என்று வசனம் பேச, நண்பருக்கு ஷாக் சர்ப்ரைஸ். தோழியின் கணவர் மன்னிப்புக் கேட்டு விளக்கம் கொடுக்க, வீடெங்கும் சிரிப்பு!

- கு.கோப்பெருந்தேவி, சென்னை-125
'லீவு லெட்டர் எங்கக்கா?'
எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் இளம்பெண், இரண்டு நாட்களாக வரவில்லை. மூன்றாவது நாள் வந்தவர், ''உடம்பு சரியில்லாததால் வரவில்லை'’ என்று விவரம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது யு.கே.ஜி படிக்கும் என் பேத்தி ஆயிஷா ஓடி வந்து, ''அக்கா.. அப்போ லீவ் லெட்டர் கொண்டு வந்தீங்களா..?'' என்று கேட்க, எல்லோருக்கும் சிரிப்பு. ''ஏன் சிரிக்கிறீங்க... எங்க மிஸ் எங்ககிட்ட அப்படித்தான் சொல்லுவாங்க...'' என்று விளக்கம் வேறு கொடுக்க, சிரிப்பு இரண்டு மடங்காகப் பெருகியது எங்களுக்கு!

- எஃப்.எம்.பஹீமா, இரவிபுதூர்கடை
அப்பா பெத்தான்... அம்மா பெத்தா!
அன்று நானும் என் கணவரும் பேசிக்கொண்டிருக்க, எங்கள் ஆறு வயது மகன் அபி, அதை கேட்டுக் கொண்டிருந்தான். என் கணவர் தன் நண்பர் ஒருவரின் பெயர் பெத்தான் என்றும், அது சாமி பெயர் என்றும், அவருக்கு விஷ்ணு என்று ஒரு மகன் இருப்பதாகவும் கூறினார். ஒருநாள் அபியின் ஸ்கூல் ஆட்டோவில் புதிதாக வந்த ஒரு பையன், தன் பெயர் விஷ்ணு என்று சொல்லியிருக்கிறான். உடனே ஆர்வமான அபி அவனிடம், ''அண்ணா, உங்க அப்பாதான் பெத்தானா?'' என்று கேட்டிருக்கிறான். அந்தக் குறும்புக்காரப் பையனோ, ''இல்லை... எங்கம்மாதான் பெத்தாங்க!'' என்று கூறி சிரித்திருக்கிறான். வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக இதை என்னிடம் சொன்ன அபி, ''ஏம்மா அந்த அண்ணா சிரிச்சாங்க?'' என்று அப்பாவியாக கேட்க, நானும் சிரிப்பதைப் பார்த்து குட்டி மேலும் டென்ஷனாகிவிட்டது!

- சுமதி பிரேம் ஆனந்த், கோபிசெட்டிப்பாளையம்