குடும்பத் தலைவிகளின் 'ஃப்ளாஷ்பேக்’ தொடர்

##~##

ணவன், மனைவி, அதிகபட்சம் இரண்டு பிள்ளைகள், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஓர் அறை, வேலை முடிந்து வந்தால், அதில் அவரவர் முடங்கிக் கொள்வது என்று வாழும் காலம் இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், சுமார் 40 வருடங்களுக்கு முன், கலியமூர்த்தியை சீதா திருமணம் முடித்தபோது, ஒண்டக்கூட இடமில்லாத கூரை வீடுதான் புகுந்த வீடு!

மிகப்பெரிய மனித கூட்டத்தின் இடையே படுக்கக்கூட இடம் இல்லாமல் வாழ வேண்டிய சூழல். இருந்தும் மாமியாரையும், மூன்று ஓரகத்திகளையும் (ஓர் அகத்தி - ஒரே வீட்டு மருமகள்கள்) அரவணைத்து... அவர்களின் குழந்தைகள் அத்தனை பேருக்கும் திருமணம் செய்து வைத்ததும், இன்றுவரை அத்தனை பேரின் நல்லது கெட்டதுகளைக் கவனித்துக் கொள்வதுமாக... மூன்று குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் அம்மாவாகப் போய்க் கொண்டிருக்கிறது சீதாவின் வாழ்க்கை!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த சீதா - கலியமூர்த்தி தம்பதி வீட்டில்... மகன்கள், மருமகள்கள் என நிரம்பியிருக்கிறது உறவுகளின் அடர்த்தி.

புகுந்த வீடு !

''அஞ்சு வயசுல அண்ணன், தம்பியா இருக்கற வங்க பத்து வயசுல பங்காளி ஆயிடறதுக்கு, வீட்டுக்கு வர்ற பொண்ணுங்களும் ஒரு காரணம். ஆனா, இன்னிக்கு வரைக்கும் நானும் எங்கூட பொறந்தவங்களும் அண்ணன், தம்பியாவே இருக்கறதுக்கு முக்கியக் காரணமே எங்க வீட்டு மருமகள்கள். முக்கியமா, என் மனைவி சீதா!'' என்று கலியமூர்த்தி அறிமுகம் கொடுக்க, பெருமித சங்கோஜத்துடன் ஆரம்பித்தார் சீதா.

''நான் பொறந்த வீடு ரொம்பப் பெருசு. மூணு ஆண்கள், மூணு பெண்கள்னு மொத்தம் ஆறு புள்ளைங்க. நான் ரெண்டாவது பொண்ணு. அப்பா வுக்கு கூலி வேலை. கஷ்ட ஜீவனம். எப்படியோ எஸ்.எஸ்.எல்.சி முடிச்சு பாலர் பள்ளி ஆசிரியரா சேர்ந்தேன். சம்பளத்தை வாங்கி அம்மாவுக்கு நல்ல புடவை வாங்கணும், தம்பி, தங்கச்சிங்கள நல்லா படிக்க வைக்கணும்னு நிறைய ஆசைகள். இந்தச் சூழல்ல... இவரோட அம்மா, என்னை பெண் கேட்க... 'பையன் அரசாங்க வேலை பார்க்கிறார், அதனால உன் சம்பளத்தை எதிர்பார்க்க மாட்டார்’னு சொல்லிட்டாங்க எங்கம்மா. ஆனாலும், எனக்கு நம்பிக்கை வரல.

ஒருநாள், நான் டீச்சர் டிரெயினிங் படிக்கறதுக்கு இவரே அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்து நின்னார். ''நீ படிப்பை முடிச்சதுக்கு அப்புறம், கல்யாணம் வெச்சுக்கலாம்’னு சொன்னார். எனக்கு கையும் ஓடல... காலும் ஓடல. அதன்படியே படிச்சேன். கிட்டத்தட்ட மூணு வருஷமா, இவரும்... இவர் வீடும் எனக்காக காத்திருந்துச்சு. மாமியார் நினைச்சிருந்தா, 'ஊர்ல உலகத்துல இல்லாத ரதியா?'னு கேட்டு, வேற பொண்ண பார்த்திருக்கலாம். ஆனா, காத்திருந்தாங்க'' எனும்போது லேசாக வெட்கம் பார்க்க முடிகிறது சீதாவிடம்.

''முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே சின்ன கூரை வீடு. அதுக்குள்ள அஞ்சு பேர் நிக்கலாம், இல்லை, மூணு பேர் உட்காரலாம், இல்லனா ரெண்டு பேர் படுக்கலாம். அதுக்குள்ளதான் நான், இவரு, மாமியாரு, இவரோட மூணு அண்ணனுங்க, அண்ணிங்க, அவங்களோட குழந்தைங்கனு பட்டாளமே இருந்தோம். ஆம்பளைங்க திண்ணையில படுத்துப்பாங்க. சொந்தக்காரங்க வந்துட்டா, முடிஞ்சவரை உள்ள படுக்க வெச்சுருவோம். இல்லைனா விடிய விடிய பேசிட்டே உட்கார்ந்திருப்போம். ஆனா, எங்க சந்தோஷத்துக்கு மட்டும் எப்பவுமே குறைச்சல் இருக்காது.

இவ்வளவு பேருக்கும் சாப்பாடு, குழந்தைகளுக்கு மருந்து மாத்திரை, படிப்புச் செலவுனு மாசாமாசம் பெரிய பட்ஜெட் போடணும். மத்தவங்களுக்கு சொற்ப சம்பளம், நாங்க ரெண்டு பேரும்தான் சுமாரான சம்பளம். இதை வெச்சுக்கிட்டு எப்படியோ சமாளிச்சோம். ஆனாலும், ஒரு கட்டத்துல மனசுக்குள்ள சங்கடம் வர... தனியா போகலாம்னு சொல்லிட்டேன்.

புகுந்த வீடு !

ரொம்ப வருத்தப்பட்டவர், 'அண்ணனுங்க எல்லாரும் கூலி வேலைக்குத்தான் போறாங்க. என்னை மட்டும்தான் படிக்க வெச்சாங்க. அரசாங்க வேலைக்குப் போற நான்தான் அவங்கள காப்பாத்தணும்’னு சொன்னார். ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம் வந்து, கொஞ்ச நாள் முறுக்கிட்டு திரிஞ்சோம்.

இதைத் தெரிஞ்சுகிட்ட மாமியார், பக்கத்துல இருந்த கூரை வீட்டை இருபது ரூபா வாடகைக்கு பிடிச்சு, தனிக்குடித்தனம் வெச்சாங்க. அவங்க வீட்டை விட்டுட்டு வந்ததுல அவருக்கு வருத்தம் தீரல. எனக்கும்... 'நாம வாங்கற சம்பளத்துல நம்ம வீட்டுக்குப் பணம் கொடுத்தாலும் ஏன்னு கேட்காத, நமக்காக மூணு வருஷம் காத்திருந்த, தனியா போகணும்னு விரும்பினவுடனே மனம் கோணாம அனுப்பின குடும்பத்தை விட்டுட்டு தனியா இருக்கிறமே’னு மனசுக்குள்ளே ஒரே குடைச்சல். உடனே, 'படுக்கை மட்டும்தான் தனி வீடு, மத்தபடி எல்லாம் ஒரே வீடுதான்னு முடிவெடுத்தேன்'' எனும் சீதாவுக்கு... அதன்பின் வாழ்வின் சந்தோஷங்களும் பொறுப்புகளும் கூடியிருக்கின்றன.

''வீட்டு வேலைகளை ஓரகத்திங்க பார்த்துக்கு வாங்க. 'நாம மட்டும்தான் வேலை செய்யணுமா..?’னு எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டாங்க. இவரோட மூத்த அண்ணன், என் மாமனாரோட இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர். ஆனா, எங்க மாமியார் சாகுறவரைக்கும் அது எங்க யாருக்கும் தெரியாது. அந்தளவுக்கு வித்தியாசம் காட்டாம வளர்த்தாங்க. சக்களத்தி புள்ளையவே அப்படி வளர்த் திருக்கும்போது, மச்சான் புள்ளைங்கள எந்த வித்தியாசமும் பார்க்காம என்னோட பிள்ளைங்களாவே வளர்க்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டேன்.

மூத்த மச்சானோட ஆறு பையன்கள், சின்னவரோட மூணு பொண்ணுங்க, ரெண்டு பசங்க, நடுவுள்ளவரோட ஒரே பையன்னு நாங்கதான் முன்ன நின்னு கல்யாணத்தை முடிச்சோம். நடுவுள்ளவரோட பையன் சின்ன வயசுலயே இறந்துபோக, அனாதையா நின்ன அந்தப் பொண்ணு வீட்டுல பேசி மறுகல்யாணம் பண்ணி அனுப்பிச்சோம்'' என்று தாய்மையின் பெருமிதம் பொங்கச் சொல்லி நிறுத்துகிறார் சீதா.

அவரையே பார்த்துக் கொண்டிருந்த கலியமூர்த்தி, ''என்னை சித்தப்பானு கூப்பிடற அண்ணன் பிள்ளைங்க, இவளை சித்தினுதானே கூப்பிடணும்? ஆனா, 'அம்மா'னுதான் கூப்பிடுவாங்க. அவனுங்களோட பொண்டாட்டிங்க... அத்தம்மானு கூப்பிடறாங்க. அந்த அளவுக்கு எல்லார் மனசுலயும் இடம்புடிச்சு வெச்சுருக்கா!'' என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.

தொடர்ந்த சீதா, ''எங்க அம்மா வீட்டுலயும் இவருக்கு அதிக மரியாதை. என்னை கைப்பிடிச்ச நாள்ல இருந்து, என் தம்பி தங்கைகள் அத்தனை பேரோட படிப்புக்கும் உதவி, அவங்களுக்கு நல்ல வரன்களை பார்த்து திருமணம் செஞ்சு வெச்சதுவரை எல்லாமே இவர்தான்'' என்று தன் கணவர் ஆற்றிய உதவிகளை நன்றியோடு நினைவு கூர்கிறார் சீதா.

''மத்தவங்களுக்கு எல்லாம் செஞ்சு முடிச்சுட்டு... கொஞ்சம் காசு சேர்த்து இந்த வீட்டைக் கட்டினோம். எங்களுக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. எல்லோருக்கும் கல்யாணம் முடிச்சாச்சு. ரெண்டு பையன்களுக்கும் சேர்த்து ஒரே வீடா கட்டிட்டோம். அவங்ககூடதான் இப்போ இருக்கோம். நாங்க ரெண்டு பேருமே வேலையில இருந்து ஓய்வுபெற்றுட்டாலும்... எல்லாக் குடும்பமும் ஒற்றுமையாத்தான் இருக்கோம்'' என்றவர், இடைவெளிவிட்டு,

''காசுதான் பெருசுனு நினைச்சிருந்தா எவ்வளவோ சேர்த்திருக்கலாம். ஆனா, உறவுங்கதான் பெருசுனு நினைச்சதுனாலதான், இன்னிக்கு இந்த சந்தோஷம் கிடைச்சுருக்கு!'' என்று சீதா சொன்ன நேரம், நடு ஓரகத்தி தன் பேரக்குழந்தைகளுடன் வந்து சேர... பேரக்குழந்தைகளையும் ஓரகத்தியையும் அணைத்துக் கொண்டார் அந்த பேரன்புமிக்க அம்மா.

அதற்குப் பிறகு நமக்கென்ன அங்கே வேலை?!    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism