Published:Updated:

ஃபேஸ்புக்,ட்விட்டர் திருகுதாளங்கள்...

செக் வைப்பது எப்படி ?

ஃபேஸ்புக்,ட்விட்டர் திருகுதாளங்கள்...

செக் வைப்பது எப்படி ?

Published:Updated:

ஆல் இன் ஆல் உதவிப் பகுதி

##~##

''திருமணத்துக்குப் பிறகு, பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகளுடன் தொடர்பில் இருக்க... ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பங்கெடுத்து வருகிறேன். சமீபமாக சில விஷமிகள் என் புகைப்படங்களைக் களவாடி, மோசமாகப் பயன்படுத்தி வருவதாக தோழிகளின் எச்சரிக்கை மெயில்கள் வருகின்றன. இப்பிரச்னை உட்பட எனது சமூக இணையதள கணக்கைப் பாதுகாப்பாக கையாள உதவும் தொழில்நுட்பக் குறிப்புகளை வழங்க முடியுமா?''    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- குளோரா சகாயசெல்வம், நாகர்கோவில்

எஸ்.சண்முகவேல், நிறுவனர், 'ஃபிக்ஸ் நிக்ஸ்’ தகவல் பாதுகாப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்:

''கிராமம், நகரம் என்று பெண்களுக்கு எங்கும் பாது காப்பில்லாத நெருக்கடியான சூழல்தான் எப்போதுமே. அதிலும், இணையப் பெருவெளியிலும் மிகவும் எச்சரிக்கையோடு புழங்க வேண்டியிருக்கிறது. சமூக இணையத்தில் தோழிகளோடும் உறவுகளோடும் கைகோப்பதன் மூலமே பல பெண்கள் மிகுந்த பாதுகாப்பையும் நெருக்கத்தையும் உணர்கிறார்கள். விளைவு, உணர்ச்சிவசப்பட்டு தங்களுக்கு இடையிலே யான பகிர்தலில் ஆபத்தான பொறிகளில் சிக்க நேரிடுகிறது.

ஃபேஸ்புக்,ட்விட்டர் திருகுதாளங்கள்...

சைபர்ஸ்டாக்கிங்... ஜாக்கிரதை!

இதில் முதன்மையானது 'சைபர்ஸ்டாக்கிங்' (Cyberstalking) எனப்படும், நம்மை அறியாது நிழலாக பின்தொடர்பவர்களினால் வரும் ஆபத்து. ஆர்வக்கோளாறோ அல்லது பெரும்விஷமமோ இவர்களின் பின்தொடர்தலில் ஒளிந்திருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸில் பாதுகாப்பு வளையங்களை இறுக்கமாக நிர்ணயிப்பதன் மூலம், இவர்களைக் கட்டுப்படுத்தலாம். சமூக வலைதளங்கள், வியாபார உத்திக்காகவும் விளம்பரங்களை ஈர்க்கவும் தங்களது கொள்கைகளை அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும். எனவே, மாதம் ஒரு முறையேனும் உங்களது செக்யூரிட்டி வளையத்தை சீர்தூக்கி கட்டமைத்துக் கொள்வது நல்லது. ஃபேஸ்புக் வழங்கும் செக்யூரிட்டி பற்றிய அப்டேட்டுக்கு https://www.facebook.com/security.

ஃபேஸ்புக்கில் பெண்கள் சந்திக்கும் பெரும் பிரச்னை, புகைப்படங்கள் திருடப்பட்டு, வக்கிரபுத்திக்காரர்களின் வடிகாலாக இணையத்தில் சுற்றுக்கு விடப்படுவது. பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான McAfee வழங்கும் இலவச சோஷியல் அப்ளிகேஷனை (https://www.facebook.com/McAfee/app_318055821622402) உங்கள் ஃபேஸ்புக் கணக்கு வாயிலாக நிறுவிக் கொள்வதன் மூலம் உங்கள் புகைப்படங்களைப் பாதுகாக்கலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் நட்பு வட்டத்தில் நீங்கள் தீர்மானிக்கும் நபர்கள் மட்டுமே உங்கள் படத்தைப் பார்க்க முடியும். மற்றவர்களால் பார்ப்பது மட்டுமல்ல, காப்பி செய்வதோ டவுன்லோட் மற்றும் ஸ்கிரீன் ஷாட் செய்வதோ முடியாது.

ட்விட்டர் உஷார்!

அதேபோல, ட்விட்டரில் பாதுகாப்பைத் திடமாக்க, அவர்கள் வழங்கும் கட்டமைப்பையே முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். யார் உங்களை பின்தொடர்வது, உங்களின் போஸ்ட்டுகளை யாரெல்லாம் படிக்கலாம், ரீ-ட்வீட் செய்ய அனுமதி உண்டா, பொதுத்தேடலில் உங்களது ட்வீட்களைப் பார்க்க அனுமதி உண்டா என்பது துவங்கி பல படிநிலைகளில் உங்களை பாதுகாப்பாக இருத்திக் கொள்ளலாம். புதியவர்களுக்கும் உங்களைப் போன்ற பாதுகாப்பு உணர்வாளர்களுக்கும் ட்விட்டர் வழங்கும் இந்தப் பக்கங்களில் கூடுதல் தகவல்களை பெறலாம்.

மேலும் பாதுகாப்பான ட்விட்டர் உலாவலுக்கு இந்த இலவச டூல் உதவும்

பிரைவஸிக்கு இங்கே இடமில்லை!

இவை தவிர, பொதுவாக பெண்களுக்கே உரிய உள் எச்சரிக்கை உணர்வு, சமூக தளங்களில் அதிகம் அவசியமாகிறது. சமூக தளங்கள் எத்தனை உத்தரவாதங்கள் வழங்கினாலும், சைபர் குற்றவாளிகள் மத்தியில் அவை ஒரு பொருட்டே இல்லை. பட்டவர்த்தனமாக சொல்வதென்றால், இணையப் பெருவெளியில் பிரைவஸி என்பதற்கு இடமில்லை. எனவே, தொலைவுகளைக் கடந்து உங்கள் தோழிகளின் அருகாமை கிடைக்கப் பெற்ற மகிழ்ச்சியில் எல்லை மீறி அந்தரங்கத்தை வார்த்தையாகவோ புகைப்படமாகவோ பொதுவில் வைத்து விடாதீர்கள். 'சைபர்ஸ்டாக்கிங்' மூலமாக, உலகில் ஆறில் ஒரு பெண் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் சொல்கிறது.

லைக்ஸ், முகஸ்துதி கமென்ட்ஸ் இவற்றுக்கு தூண்டிலாகி, முன்பின் அறியாதவர்களை எல்லாம் உங்கள் நட்பு வட்டத்துக்குள் சேர்க்க வேண்டாம். அப்படியான புதியவர் தவிர்க்க முடியாதவர் என்றால், உங்கள் நம்பகமான நட்பு வளையத்தில் அவரைப்பற்றி ஊர்ஜிதம் செய்துகொள்வது நல்லது.

பெர்சனலுக்கு ஒன்று... அஃபீஷியலுக்கு ஒன்று!

புதிய நட்புத்தூது நெருக்கடி பெரும்பாலும் பணிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் தர்மசங்கடமாக இருக்கும். சக பணியாளராகவோ உயரதிகாரியாகவோ நட்புத்தூதில் இருந்தால்... வேண்டாவெறுப்பாக சேர்த்துத் தொலைக்க வேண்டியிருக்கும். இதற்கு ஒரே புரொஃபைலில் நெருங்கிய நட்பு வட்டத்தை தனியாகவும், அலுவல்பூர்வமான நட்பு வட்டத்தை தனியாகவும் கட்டமைப்பது நல்லது (இதற்கு ஃபேஸ்புக்கைவிட கூகுள் ப்ளஸ் சிறப்பாக உதவும்.). இன்னுமொரு உருப்படியான ஐடியா, அலுவல்பூர்வமான நட்புகளை பராமரிக்க, தனி ஐ.டி-யை உருவாக்கிக் கொள்ளலாம். இதனால் உங்கள் தோழிகள் குறித்த விவரங்களையும் உங்கள் அலுவலக அந்நிய ஆணிடம் இருந்து பாதுகாக்க முடியும். புகைப்படங்கள் மட்டுமல்ல, வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வதிலும் சமூக தளங்களில் எச்சரிக்கை வேண்டும். உங்கள் மேலதிகாரி பற்றியோ, ஆபீஸ் பற்றியோ நீங்கள் ஜாலியாக பதியும் கமென்ட், உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு வழி செய்யக்கூடும்.

இல்லத்தரசிகளே... எச்சரிக்கை!

இல்லத்தரசிகள்கூட தங்கள் உறவினர், புகுந்த வீட்டினர் பற்றிப் புலம்பும் கமென்ட்டுகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் புகைச்சலை ஏற்படுத்திவிடும் ஆபத்து இருக்கிறது. காரணம், பொதுவெளியில் நீங்கள் பதியும் சர்ச்சைக்குரிய படமோ கருத்தோ ஆண்டுகள் பல கழித்தும் (நீங்கள் அவற்றை நீக்கியிருந்தபோதும் கூட) உங்களுக்கே உலை வைக்கக்கூடும். இதற்கு, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்களது பழைய பதிவுகளை உங்களைத் தவிர உங்கள் ஃப்ரெண்ட்ஸ் உட்பட யாரும் அணுக முடியாதபடி செட்டிங்ஸில் மாற்றி அமைத்துவிடுவது நல்லது.

அப்ளிகேஷன்களில் ஆபத்து!

சமூக தளங்களின் ஆபத்து, அவை கூவித் திணிக்கும் கவர்ச்சிகரமான அப்ளிகேஷன்களில் ஒளிந்திருக்கிறது. குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கு அப்ரூவல் வழங்கும்போது, அதன் வாயிலாக தொடர்ந்து உங்கள் தகவல்கள் கடத்தப்பட நீங்களே உதவி செய்கிறீர்கள். அப்படியே ஒரு அப்ளிகேஷன் அத்தியாவசியம் என்றாலும், பயன் முடிந்ததும் அதன் இருப்பை நீக்கிவிடுவது உத்தமம். அப்ளிகேஷனுக்கு அடுத்தபடியாக, உங்கள் சமூக கணக்கை உபயோகித்து, ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் உங்களது தகவல்கள் திருடப்பட வாய்ப்பாகிறது.

அடுத்த ஆபத்து, இ-மெயில் மற்றும் பிறந்தநாள் விவரத்தை பதிவதில் இருக்கிறது. உங்களது பிரத்யேக இ-மெயில் மற்றும் பிறந்த நாள் விவரத்தை தெரிவிப்பதன் மூலம்... உங்களது பல்வேறு இணையப் பயன்பாடுகள், பாஸ்வேர்டுகள், ஏன்... கிரெடிட் கார்டு பரிமாற்றம் வரை களவாளிகள் கண்ணுக்கு வாய்ப்பாகின்றன. இதிலிருந்து தப்பிக்க சமூக வலைதள பயன்பாட்டுக்கென டம்மியாக தனி இ-மெயிலை உருவாக்கிக் கொள்ளலாம். பிறந்தநாளை பதியும்போது வருடத்தை தவிர்ப்பது நல்லது (வயசும் வெளியில் தெரியாது!).  

பெருமையடிக்காதீர்கள்!

சிலர் பெருமைக்காக எங்கே சென்றாலும் தங்கள் இருப்பை சமூக தளங்களில் பறை சாற்றிக்கொண்டிருப்பார்கள். அல்லது, தங்கள் வழக்கமான பதிவுகள் தோறும் செல்லுமிடத்தையும் தானாகப் பதியும்படி விட்டிருப்பார்கள். இந்த அலட்சியம், ஃப்ரெண்ட் போர்வையில் நட்பு வளையத்தில் நம்மால் அனுமதிக்கப்பட்ட ஒரு விபரீத பேர்வழிக்கு உதவக்கூடும். எனவே, ஒவ்வொரு பதிவு உள்ளிடும்போதும் எச்சரிக்கை உணர்வை கைக்கொள்வதோடு, மாதம் ஒரு முறையேனும் செக்யூரிட்டி செட்டிங்ஸ்களை மீளாய்வு செய்து பாஸ்வேர்டு மாற்றம் உட்பட உங்களுக்கான பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதில் அலட்சியம் காட்டினால்... வாழ்க்கையின் பெரும் சொர்க்கமாக நீங்கள் மெச்சிக்கொண்டிருக்கும் சமூக வலைதளப் பயன்பாடு, ஒரு நாள் நரகமாகலாம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism